பதவி உயர்வுக்காக ரகசிய கூட்டம்!

சமயபுரம், சின்னாளப்பட்டி, திருப்போரூர், மாங்காடு என 55 தேர்வுநிலைப் பேரூராட்சிகளை சிறப்புநிலைப் பேரூராட்சிகள் ஆக்கினார் ஜெயலலிதா.

Advertisment

இவற்றுக்கென்று இதுவரை சிறப்புச் செயல் அலுவலர்கள் போடப்படவில்லை. தேர்வுநிலைப் பேரூராட்சிகளைக் கவனிக்கும், ஏற்கனவே இருக்கக்கூடிய இ.ஓ.க்கள்தான் இவற்றையும் கவனிக்கிறார்கள்.

minister-velumani""எங்களை சிறப்புநிலைப் பேரூராட்சிகளின் செயல்அலுவலர்களாகப் போடவேண்டும்'' என கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள் பதவி மூப்பு அடிப்படையில் உள்ள செயல்அலுவலர்கள்.

இவர்களுக்கு திடுமென உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியிடமிருந்து அழைப்பு வந்தது. இவர்களில் முப்பது பேர் 11-10-18 அன்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்திற்குச் சென்று அமைச்சர் வேலுமணியையும் அதிகாரிகளையும் சந்தித்துவிட்டு வந்து எரிமலையாய்க் குமுறிக்கொண்டிருக்கிறார்கள்.

என்னாயிற்று...?

Advertisment

""அமைச்சர் ரகசியக் கூட்டம் போட்டிருக்கிறார் என்றதுமே சம்திங் ராங்னு தெரிஞ்சிருச்சு. போனமா, மீட்டிங் நடந்துச்சு. "உங்களுக்கெல்லாம் பதவி உயர்வு கொடுக்குமாறு இயக்குநரிடம் ஜி.ஓ. போடச் சொல்கிறேன்'னு அமைச்சர் சொல்லிட்டு எந்திரிச்சுப் போனாரு. அப்புறம் அவருக்கு நெருக்கமானவங்க எங்கள்ட்ட வந்து, "வருமானம் வரக்கூடிய சிறப்புநிலை பேரூராட்சிக்குப் போகணும்னா வருமானத்துக்கு ஏற்றவாறு ஐந்திலிருந்து பத்து லட்சம்வரை கொடுத்தாகணும். இல்லைனா... போஸ்ட்டிங் இல்லை'னு சொன்னாங்க. ரகசியக் கூட்டத்தின் காரணம் தெரியுதா?'' என்றார்கள் கூட்டத்திற்கு போய்வந்த சிலர்.

ஆனால், செயல் அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் கணேசனோ, ""அங்கே பதவி உயர்வுக்கு பணமே கேட்கவில்லை'' என்கிறார். அமைச்சரின் செயலர் சுபாஷை தொடர்புகொள்ள முடியவில்லை.

-சக்தி

லாட்டரி "கொடி பறக்குது!'

பொள்ளாச்சிப் பகுதியில் இருந்து கேரளாவுக்கு அரிசியும் மணலும் கடத்தப்படுகிறது. கேரளாவிலிருந்து பொள்ளாச்சிக்கு லாட்டரி சீட்டுகள் சூட்கேஸ் சூட்கேஸாக கடத்திவரப்படுகிறது. இந்த சாதனையைச் செய்துகொண்டிருக்கும் மொட்டுபாய்க்கு நெகமம் காவல்நிலையத்தில் ஏகத்துக்கும் மரியாதை.

Advertisment

dsp-krishnamurthyஇதுமட்டும்தானா? கத்தி கட்டிய சேவல் சண்டையும், ரம்மி சீட்டாட்டமும் கொடிகட்டிப் பறக்கிறது மொட்டுபாய் உபயத்தால்.

தமிழ்நாட்டில் லாட்டரிச் சீட்டு தடை செய்யப்பட்டுவிட்டது என தமிழக அரசு அதிகாரபூர்வ ஆணையிட்டிருக்கிறது.

கேரள கொழிஞ்சாம்பாறை, கோவை கிணத்துக்கடவில் இருந்து 18 கி.மீ. தொலைவுதான். அங்கிருந்து கொண்டுவரப்படும் லாட்டரி சீட்டுகள் பொள்ளாச்சி பேருந்துநிலைய பெட்டிக்கடைகளில் தாராளமாக விற்கப்படுகின்றன.

பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டிலும் கடைவீதிகளிலும் மட்டும்தானா? சமத்தூர் வேட்டைக்காரன்புதூர் வரை பாய்ந்துகொண்டிருக்கிறது லாட்டரி.

""பொள்ளாச்சி டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்திக்குத்தான் நன்றி சொல்லணும். அவர் கண்டும் காணாமலிருப்பதால்தான் இந்தப் பகுதியில் 500-க்கும் அதிகமான நபர்களால் கேரள லாட்டரியை தமிழகத்தில் தாராளமாக விநியோகிக்க முடிகிறது. லாட்டரி தொழிலில் பொள்ளாச்சி "டான்' ஆக செயல்படும் மொட்டுபாய், துணை சபாவின் அன்பிற்கு பாத்தியதை ஆனவராம். அதனால் டி.எஸ்.பி. கண்டும் காணாமல் போகிறார்'' என்கிறார்கள் பொள்ளாச்சி பேருந்துநிலைய கடைக்காரர்கள் சிலர்.

-அருள்குமார்

24 மணி நேரத்தில் இந்தி அழிப்பு!

signalதமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில், ஊர்ப்பெயர்கள் இந்தியில் எழுதப்பட்டிருப்பதைக் கண்டித்து 14-10-18 ஞாயிறு காலை 11 மணியளவில் பொள்ளாச்சி -கோவை தேசிய நெடுஞ்சாலையில் காந்தி சிலை அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகம் உரத்த கோஷங்களோடு போராட்டம் நடத்தியது.

பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், வெளியீட்டுச் செயலாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலையில் நடந்த இப்போராட்டத்தில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், ஆதித்தமிழர் பேரவை, மனிதநேய மக்கள் கட்சி என பல கட்சியினர் கலந்துகொண்டனர். போராட்டத்தின் முக்கிய நிகழ்வாக, மைல் கற்களில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை தார்பூசி அழித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட கோவை வடக்கு மாவட்டத் தலைவர் ராமசாமி, மா.செ. அகில் குமரவேல், உடுமலை நடராஜன் உட்பட 40 பேரை டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி, இன்ஸ் நடேசன் தலைமையில் வந்த காவல்துறையினர் கைது செய்தனர். இந்த எழுத்துகளுக்கு பலமுனைகளிலிருந்தும் எதிர்ப்பு கிளம்ப... மறுநாள், பொள்ளாச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலை (எண்:83) மைல்கற்கள் அத்தனையிலும் எழுதப்பட்டிருந்த இந்திப் பெயர்களை நெடுஞ்சாலைத்துறையினரே அழித்துவிட்டு, அந்த இடங்களில் ஆங்கிலத்தில் எழுதினர்.

இந்தி படிக்கத் தெரிந்த லாரி ஓட்டுநர் ஒருவர், ""கோயம்பத்தூரை, "கோயம்படூர்' என்றும், கிணத்துக்கடவுவை "கினயூகடவு' என்றும் தப்புத்தப்பாகத்தான் எழுதியிருந்தாங்க. தப்பு செய்றாங்க... அதையும் சரியா செய்யத் தெரியலை... த்தூ...''வென துப்பிவிட்டுப் போனார். 24 மணி நேரத்தில் இந்தியை விரட்டியுள்ளனர் பெரியாரிஸ்ட்கள்.

-கீரன்