திருடிய கோழி படுத்தும் பாடு!
ராமநாதபுரம் காடல்குடியில் சில நாட்களுக்கு முன் போலீஸ்காரர்கள் பாலகிருஷ்ணன், சதீஷ் ஆகியோர் அந்த ஊரில் கறிக்கடை நடத்தும் முத்துச்செல்வனுக்கு, நள்ளிரவில் போன் செய்து, ஒரு கிலோ கோழிக்கறி வேண்டும் என கேட்டுள்ளனர். அந்த போனை எடுத்த அவர் மனைவி ஜெயா, என் வீட்டுக்காரர் தூங்கிவிட்டாரே என்று சொல்லிவிட்டு போனை வைக்க, மீண்டும் மீண்டும் அவர்கள் போன் செய்ததால், மொபைலை சைலண்ட் மோடில் போட்டுவிட்டார் ஜெயா.
மறுநாள் முத்துச்செல்வனை தொடர்புகொண்ட போலீஸ்காரர் பாலகிருஷ்ணன், "நேற்றிரவு போன் பண்ணினோம். நீ போனை அட்டன் பண்ணலை. அதனால் உன் கடையில் இருந்து ஒரு கோழியை எடுத்துக்கிட்டோம். அதற்கான காசை உனக்கு கொடுத்துடுறோம்" என்று கூற, "பரவாயில்லை சார். காசு வேண்டாம்'' என்றிருக்கிறார் முத்து. இப்படி போலீசார், கோழி திருடிய விஷயம் மெல்ல கசிய, விளாத்திகுளம் டி.எஸ்.பி பிரகாஷின் மூலம் எஸ்.பி. ஜெயக்குமாரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட 2 போலீஸ்காரர்களையும் ஆயுதப்படைக்கு மாற்ற உத்தரவிட்டார் எஸ்.பி.
இதனால், ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணனும், சதீசும், கடந்த 19-ந் தேதி முத்துவின் கடைக்கு வந்து, "கோழி திருடிய விஷயத்தை ஏன் வெளியில் சொன்னாய்? எங்களுக்கு இப்ப ட்ரான்ஸ்பர் போட்டிருக் காங்க''’என்று கூறி சண்டை போட்ட தோடு, முத்துவை கட்டையால் தாக்கியுள்ளனர். அதைத் தடுக்க முயன்ற ராமர் என்பவரையும் அவர்கள் தாக்கி உள்ளனர். முத்துச்செல்வன் அளித்த புகாரின் பேரில், போலீஸ்காரர்கள் பாலகிருஷ்ணன், சதீஷ் ஆகியோரை பணி நீக்கம் செய்துள்ளார் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார்.
-நாகேந்திரன்
மருத்துவ அதிகாரி மீது மரணப் புகார்!
திருவண்ணாமலை மாவட்ட மருத்துவம் மற்றும் நலப் பணிகள் இணை இயக்குநராக இருப்பவர் கண்ணகி. இவரது அலுவலகத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி போராட்டம் செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, "’ஜே.டி. மேடத்தைப் பற்றி எங்கள் துறை தலைமைக்கு சென்ற புகாரை தெரிந்துகொண்டு எங்களைப் பழிவாங்குகிறார். அவர் மீது புகார் அனுப்பியவர்கள் குடும்பத்தோடு அவர் காலில் விழவேண்டும் என்றும் மிரட்டுகிறார். சிலரை தனது மேலிட செல்வாக்கை வைத்து, ட்ரான்ஸ்பர் செய்து பழிவாங்கியுள்ளார். அதனால் தான் எங்களை காப்பாற்றிக்கொள்ளப் போராடுகிறோம்''’என்றார்கள். ஜே.டி.கண்ணகி மீது அப்படி என்ன புகார்கள் முதல்வர் உள்ளிட்ட மேலிடங்களுக்குச் சென்றது?
அந்த புகார் பட்டியலில், ”ஜே.டி. அலுவலகத்தில் 17 பேர் பணியாற்றுகிறோம், கொரோனா முதல் அலையின்போது 10 பேருக்கு கோவிட் பாசிட்டிவ் வந்தபோதும், அலு வலகத்துக்கு வரவைத்து வேலை வாங்கினார். புள்ளியல் உதவியாளராக இருந்தவர் 55 வயதான மாற்றுத் திறனாளி புருஷோத்தமன். போளுரில் இருந்து தினமும் அவரை வரவழைத்து வதைத் தார். கொரானாவால் பாதிக்கப்பட்ட அவருக்கு விடுப்பு கொடுக்காமல் வேலை வாங்கியதால், அவர் மே மாதம் இறந்துவிட்டார். அவர் மரணத்துக்கு ஜே.டி.தான் காரணம் என குறிப்பிட் டுள்ளனர்.
இது குறித்து பேசிய மருத்துவர்கள் சிலரும், "மேடம் யாரையும் நம்பமாட்டாங்க, எல்லோரும் தனக்கு எதிரானவர்கள் என்ற எண்ணத்தாலே எப்போதும் டென்ஷனாகவே இருப்பார். ஊழியர்களை சகட்டுமேனிக்கு அவர் பேசி மிரட்டியதுதான் சிக்கல் அதிகரிக்க காரணம்''” என்கிறார்கள்.
”ஜே.டி.கண்ணகியோ, "அலுவலகப் பணிகள் சரியாக நடக்கவேண்டும் என்று, அவர்களை உரிய வேலைகளைச் செய்யுமாறு சொன்னேன். அதனால் எனக்கு எதிராக வரிந்துகட்டி நிற்கிறார்கள்''” என்றார் ஆதங்கமாய்.
-து.ராஜா
வைரல் வீடியோ வம்பில் பா.ஜ.க. பிரமுகர்!
தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது அந்த வீடியோ. அப்படியென்ன அதில் இருக்கிறது?
பாலியல் தொழில் சம்பந்தமாக ஒரு அழகியோடு, மதுரை பா.ஜ.க. இளைஞரணியின் புறநகர் மாவட்ட தலைவர் மணிகண்டன் தீவிரமாக ஆலோசனை செய்யும் காட்சிதான். அந்த வீடியோவில், மணிகண்டனும், அந்த பாலியல் வர்த்தகியும் பேசுகிறார்கள் இப்படி...
"மேடம் என்ன கவனிக்கவே மாட்டேங்கறீங்க''”
"தொழில் ரொம்ப மந்தமா இருக்கு''”
"எனக்கு என்ன மெசேஜ் அனுப்பினாலும், மூன்று டாட் வைத்து அனுப்பினால் போதும். மிக அவசரம்னு புரிஞ்சுக்குவேன். சரியா? நமக்குப் பின்னால் தொழிலுக்கு வந்த பாலா, நீ சொன்ன பார்ட்டியை வைத்து இதுவரை நாலு பிராஞ்ச் போட்டுருக்கான். போன வாரம் கூட, திடீர் நகர் போலீஸார் அவனைப் பிடித்து விசாரிச்சாங்க. அப்புறம் வெளியே வந்துட்டான்னு வச்சுக்கோ. அவன் ஒருநாள் என்கிட்ட வந்து அண்ணே நீங்க நம்ம கட்சியில் இருக்கீங்க. போலீஸ் தொல்லை ரொம்ப இருக்கு. கொஞ்சம் கமிஷனரிடம் பேசுங்க. நீங்க நினைச்சா, முழு பாதுகாப்போடு சேர்ந்து தொழில் செய்யலாம்னு டீல் பேசினான்''’-என்று சிரிக்கிறார் மணி. இதன் தொடர்ச்சி பார்ட்-2 என்றும் வளர்கிறது.
இதுகுறித்து மதுரை மாவட்ட பா.ஜ.க. தலைவர் சுசீந்திரனிடம் நாம் கேட்டபோது... "ஆமா சார், எங்கள் கட்சி குரூப்பிலும் இந்த வீடியோ போய்க்கிட்டிருக்கு. அவரிடம் இதுபற்றி விளக்கம் கேட்டதற்கு அந்த வீடியோவில் வருவது நான்தான். ஆனால் அது என் குரல் இல்லைன்னு மழுப்பினார். இருந்தும் அவரை நீக்கியாச்சு''”என்றார்.
-அண்ணல்