வெத்து வேட்டு டயலாக்
தமிழகத்தின் எதிர்ப்பை மீறி மேகதாது அணையைக் கட்டும் மும்முரத்தில் இருக்கிறது கர்நாடகா. இந்த நிலையில் இங்குள்ள மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க.வினரும், கர்நாடக பா.ஜ.க. அரசுக்கு எதிராக வெத்து வேட்டு டயலாக் பேசி ஸ்டண்ட் அடித்து வருகின்றனர். மாட்டு வண்டியில் போஸ் கொடுத்து, தஞ்சையில் உண்ணாவிரதம் இருந்தனர். மதுரை பாண்டிக்கோவில் அருகே கட்சியின் ஒ.பி.சி அணி சார்பில் நடந்த மாநில செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து “"தேசிய பிற்பட்டோர் ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தது எங்கள் பா.ஜ.க.தான். இது குறித்து யாரும் கவலைப்படவில்லை. ஓ.பி.சி. பிரிவுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு தி.மு.க.வால் கிடைத்தது என சொல்வது வேடிக்கையானது''’என்று இட ஒதுக்கீட்டுக்குத் தன் பேச்சில் இடம் ஒதுக்கியவர், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக போராட்டம் மிக எழுச்சியாக நடைபெற்றது. பா.ஜ.க தமிழ் மண்ணின் உரிமையை என்றும் விட்டுக் கொடுக்காது. தமிழக மக்கள் நலனில் பிரதமர் அக்கறை செலுத்திவருகிறார். மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்கிற நிலைப்பாட்டில் தமிழக பா.ஜ.க. மிக உறுதியாக உள்ளது''’என்று அருள் வந்தது போல் அறிவித்தார். ஆனால், இதைக்கேட்டு அவருடன் இருந்தவர்களே குபீர் என்று பொங்கிய சிரிப்பை அடக்கிக்கொண்டனர்.
-அண்ணல்
கோயிலில் ஏடாகூடம்
அடித்த அந்தரங்கக் கூத்தால், கோயில் சிலைகளையே நெளிய வைத்திருக்கிறார் ஒரு ஆபாச அர்ச்சகர். காஞ்சிபுரம் தேவநாத குருக்களின் மன்மத லீலைகளை யாராலும் அவ்வளவு சீக்கிரத் தில் மறந்துவிட முடியாது. அவரைப் போலவே ஒரு அர்ச்சகர், ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டம் தகங்கோரில் உள்ள சர்னேஷ்வர மகாதேவ் கோயி-ல் இருக்கிறார். அவர் கோயில் வளாகத்தில் உள்ள தனியறையில் பெண் ஒருவருடன் நெருக்கமான லீலையில் இறங்க, அதைப் பார்த்து அதிர்ந்து போன பக்தர்கள், அவர்கள் இரு வரையும் வெளியே இழுத்து வந்து, சாலையில் போட்டு காலணிகள் கொண்டு தாக்கினர். மேலும் பூசாரியுடன் இருந்த பெண்ணின் ஆடைகளைக் கிழித்து அவர் மீதும் ஆத்திரத்தைக் கொட்டினர். இதை சில செல்போன் புலிகள், ஆசைதீரப் படமும் பிடித்தனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த நிலை யில், தாக்குதலுக்கு ஆளான இளம்பெண், காவல்துறையிடம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். எஸ்.பி. ராஜேந்திர பிரசாத்திடம் கொடுத்த புகாரில், ‘என்னுடைய நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தவே, என்னை தாக்கியது மட்டுமின்றி, என் ஆடையைக் கிழித்தும் அவமானப்படுத்தினர். பூசாரி குடும்பத்தினருடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது. அந்த உறவுதான் கோயிலிலும் தொடர்ந்தது. சம்பவ நாளில் பூசாரியின் மனைவி வருவதற்காக தான் காத்திருந்தோம். ஆனால் சிலர் தவறாகப் புரிந்து கொண்டு எங்களைத் தாக்கினர். எனது கணவர் சமூகத்தில் உயர்ந்த வேலையில் இருக்கிறார். இந்த சம்பவத்தால் எங்கள் குடும்பத்தினர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இந்த தாக்குதலில் 7 பேர் ஈடுபட்டனர்’ என்று தெரிவித்திருக்கிறார். மேற்கண்ட புகாரை பாதிக்கப்பட்ட பெண் தனது கணவருடன் சென்று காவல் நிலையத்தில் அளித்துள்ளார். சில குறும்புக்கார கிராமவாசிகளோ, அர்ச்சகர் மனைவிக்கு மாற்றாகச் சென்ற நீ, கோயிலுக்கு எதற்கு உன் நற்பெயரையும் எடுத்துக்கொண்டு சென்றாய்? என்று ஏடா கூடமாகக் கேள்வி கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
-நமது நிருபர்
கட்டுமானத்திற்கு பிரேக்!
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதிய கலெக்டர் அலுவலகம், வீரசோழபுரம் என்னுமிடத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவில் இடத்தில், கட்டப்பட்டு வருகிறது. கோயில் நிலத்தில் அலுவலகத்தைக் கட்டத் தடை விதிக்கணும் என்று, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவில் நிலத்திற்கு இழப்பீடு நிர்ணயித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை நகல் தங்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை என்று மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதிப்பீடு செய்யப்பட்ட அறிக்கையை மனு தாரருக்கு வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு அந்த அமர்வு தள்ளிவைத்தது. இதற்கிடையில், ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு ஒப்பந்தம் பெற்றுள்ள நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனுமதிகளைப் பெறாமல் கட்டுமான பணிகளைத் தொடரக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அனுமதி கிடைக்கும் பட்சத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது என கறார்க் குரலில் பிரேக் பிடித்தனர்.
-ராம்கி