எஸ்.பி.யின் அதிரடி!

signal

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாகப் பொறுப் பேற்றிருக்கும் சைலேந்திரபாபு, காவல்துறையை புதிய வேகத்தில் முடுக்க, அந்தத்துறைக்கே புதிய ரத்தம் பாயத் தொடங்கியிருக்கிறது. அந்த வகையில், திருச்சி புறநகர் எஸ்.பி.யான முனைவர் மூர்த்தி, அதிரடியாக லால்குடி காவல் நிலையத்திற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களைத் தெறிக்கவிட்டார். அப்போது காவல்நிலைய எஃப்.ஐ.ஆர். கூட முறையாகப் பதிவு செய்யப்படாமல் இருந்ததைக் கண்டுபிடித்ததோடு, நிலைய வருகைப் பதிவேட்டில், காவலர்களின் கையெழுத்தைப் போட்டுவிட்டு, அங்குள்ள காக்கிகள் சிலர், காவல் நிலையத்தின் பக்கம் தலைகாட்டாமல் இருந்ததையும் விசாரணையில் கண்டுபிடித்தார். 2 துணை கண்காணிப்பாளர்கள், 6 ஆய்வாளர்களைக் கொண்டு அங்கு தீவிர சோதனை மேற்கொண்டதில், கஞ்சா, சாராயம் உள்ளிட்ட சட்ட விரோதமான செயல் களுக்கு காவல்துறையினர் உறுதுணையாக இருந்ததும் தெரியவந்தது. மேலும் திருச்சி மாவட்ட புறநகர் பகுதிகளில் உள்ள காவல்நிலை யங்களில் அனைத்து குற்ற சம்பவங்களுக்கும், காவல்துறையினரே உறுதுணையாக செயல்படுவதையும் உறுதிப்படுத்திக்கொண்ட எஸ்.பி., முதற்கட்டமாக, ஒரு எஸ்.ஐ உள்ளிட்ட 16 காவலர்களை ஆயுதப் படைக்குக் கூண்டோடு உடனடியாகத் தூக்கியடித்தார். அதேபோல், அங்கிருந்த 16 பேரை உடனடியாக லால்குடி காவல்நிலையத்திற்கு மாறுதல் செய்தும் உத்தரவிட்டார். இதனால் திருச்சி மாவட்ட காவல்துறையே ஹைவோல்ட் அதிர்ச்சியில் இருக்கிறது.

-மகேஷ்

Advertisment

நக்கீரனின் ஆக்சன் ரிப்போர்ட்!

signal

கடந்த 9-ஆம் தேதி நக்கீரனை அழைத்த அந்த ஆண் குரல் “என் பெயர் ராஜன். சென்னை எம்.ஜி. ஆர். நகரில் வசிக்கும் எனக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். என் மனைவி ரேணுகா, சென்னை அசோக் நகர் ஹெல்த் அபோ சிக்ஸ்டி என்ற நிறு வனத்தில் வேலை பார்த்து வந்தார். அதன் உரிமையாளர் சீனிவாசனும் அந்த நிறு வனத்தைச் சேர்ந்த காவியா என்பவரும் கொடுத்த டார்ச்சர் தாங்காமல், தற்கொலை செய்துகொண்டார். அதற்கு முன், இது குறித்து ஒரு கடிதமும் அவர் எழுதி வைத்திருக்கிறார். அவரது தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னால், என் மீதே வழக்கு போடுவேன் என்று இன்ஸ் பெக்டர் கிருஷ்ணன் மிரட்டுகிறார். தான் சொல்கிற மாதிரி எழுதிக்கொடுத் தால்தான் பிரேத பரிசோதனை செய்ய, எஃப்..ஐ.ஆரே தருவேன் என்கிறார். நக்கீரன்தான் எனக்கு உதவணும்’ என்று கலங்கினார். உடனே களமிறங்கியது நக்கீரன். முதலில் சம்மந்தப்பட்ட இன்ஸ் பெக்டர் கிருஷ்ணனிடம் பேசினோம். அவர் மழுப்பலாகவே பதில் சொன்ன தால், தி.நகர் துணை கமிஷனர் அரிகிரன் பிரசாத்திடம் விபரத்தைத் தெரிவித்தோம். உடனடியாக அதிரடியாக சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து, போஸ்ட் மார்ட்டம் செய்து ரேணுகாவின் உடல், அவரது குடும்பத் தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியிருக் கிறது காவல்துறை.

Advertisment

-அரவிந்த்

சொந்தப் பகையில் வீடுகள் இடிப்பு

signal

சென்னை வண்டலூர் அருகே உள்ள கீரப்பாக்கம் ஊராட்சியில், புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து ஏறத்தாழ 150-க்கும் மேற்பட்ட வீடுகளும் கடைகளும் கட்டப்பட்டிருக்கின்றன. இவற்றைப் பற்றிக் கவலைப்படாத வருவாய்த் துறையினர், அவற்றில் இரண்டே இரண்டு வீடுகளை மட்டும் குறிவைத்தனர். அதைத் தொடர்ந்து, அந்த வீடுகளை போலீஸ் பாதுகாப்போடு திடீரென முற்றுகையிட்ட தாசில்தார் ஆறுமுகம் டீம், அந்த இரு வீடுகளையும் பொக்லைனால் இடித்துத் தரைமட்டமாக்கினர். இதைக்கண்டு கொதித்துப் போன பெண்கள் சிலர், தீக்குளிக்க முயல, அவர்களைப் படாதபாடு பட்டு சமாதானப் படுத்தினர். அவர்களிடம் நாம் விசாரித்தபோது, "கீரப்பாக்கத் தில் இருந்து குமிழி செல்லும் சாலையோரத்தில், அரசு புறம்போக்கு நிலத்தை ஏக்கர் கணக்கில் அபகரித்திருக்கும் தி.மு.க முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரனும் அவர் தம்பி கணேஷும் அதை பிளாட் போட்டு விற்றார்கள். போலி பட்டா மூலம் 100-க்கும் மேற்பட்டோருக்கு அவர்கள் மின் இணைப்பும் பெற்றுத் தந்திருக்கிறார்கள். இலவச வீட்டு மனைப் பட்டா வாங்கி தருவதாகக் கூறி அவர்களிடம் தலா ரூ.15 ஆயிரம் வரை பணம் வசூலித்திருக்கிறார்கள். இதுபோதாதென்று கிராம நிர்வாக அலுவலரும் அவர் உதவியாளரும், அங்கே கட்டுமானப்பணி களைச் செய்தவர்களிடம் தலா ரூ.30 ஆயிரம் வீதம் லஞ்சமாக வசூலித்துக்கொண்டார்கள். அப்படி இருக்க இப்போது இந்த 2 குடும்பத்தினருக்கும், தி.மு.க பிரமுகர் ராஜேந்திரனுக்கும் முன்விரோதம் இருந்ததால், அந்தக் காழ்ப்புணர்ச்சியில், அவரது தூண்டுதலில், அந்த இரு குடும்பத்தினருக்கான வீடுகளை மட்டும் இடித்துத் தள்ளியிருக்கிறார்கள். இப்படி அராஜகம் செய்யும் இந்த ராஜேந்திரன் மீதும் அவருக்குத் துணையாக இருக்கும் அதிகாரி கள் மீதும் முதலமைச்சர் ஸ்டாலின் உரிய நட வடிக்கை எடுக்கணும்''’என்றார்கள் ஆவேசத்தோடு. பதட்டம் தணியாமல் இருக்கிறது கீரப்பாக்கம்.

-கீரன்