மறக்க முடியாத ஹெல்மெட் தழும்பு!
இரண்டாண்டுகளுக்கு முன்னர், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பணியாற்றும் வழக்கறி ஞர் ஒருவரை, ஹெல் மெட் அணியாததற்காக போலீஸ் தடுத்து நிறுத்தியபோது, அது பெரும் அடிதடி மோதலாக மாறி, அந்த விவகாரம் கோர்ட்வரை சென்றது. வழக்கறிஞரைத் தாக்கிய இரண்டு போலீஸ்காரர்களுக்கு 1001 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப் பட்டதோடு, அவர் களிடம் மன்னிப்புக் கடிதமும் வாங்கப்பட் டது. அந்த விவகாரமே இன்னும் இரு தரப் பினருக்கும் மத்தியில் தகிப்பு முழுதுமாக அடங்காத நிலையில், இப்போது மதுரை உயர்நீதிமன்றக் கிளை யின் நிர்வாகப் பதிவா ளர் இந்துமதி நீதி மன்றத் தரப்பினருக்கு பரபரப்பான ஒரு சுற்றறிக்கையை அனுப்பி யிருக்கிறார். அதில்...’மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களில் பலர், இரு சக்கர வாகனத்தை ஓட்டும்போது ஹெல்மெட் அணியா திருப்பது தெரியவந்துள்ளது. எனவே அனைவரும் தவறாமல் ஹெல்மெட் அணிய வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. "தலை காக்க தலைமையின் பொறுப்பான அறிவிப்பு இது' என்று பலரும் பாராட்டினாலும், வழக்கறிஞர்கள் தரப்பில்.. "ஒரு ஆத்திர அவசரத்துக்குக் கூட வெறுமனே போகக்கூடாதா?' என்ற ஆதங்கமும் எதிரொலிக்கிறது.
-தெ.சு.கவுதமன்
தேக வர்த்தகம்
கடந்த 28-ந் தேதி முதல் கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் சலூன்களை திறக்க அரசு அனுமதி அளித்திருக் கிறது. இந்த நிலையில் மசாஜ் சென்டர்களும் திறக்கப்படுவதாக கோவை மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதில் வில்லங்கமான காரியங்களும் நடப்பதாக அந்தச் செய்தி விறு விறுப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மாநகரில் செயல்பட்டு வந்த ஸ்பாக்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கோவை அவினாசி சாலையில் உள்ள காம்ப்ளக்ஸில் செயல்பட்டு வரும் ஸ்பாவில், பெண்கள் சிலர் விபச்சாரத்தில் ஈடுபட் டது தெரிய வந்தது. இதையடுத்து ஸ்பாவை நடத்தி வந்த சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் விக்னேஷ் என்ற விஜயை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட அசாமைச் சேர்ந்த 27 வயதுடைய ஒரு பெண்ணையும், நாகலாந்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒரு பெண்ணையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் பீளமேடு பகுதியிலும் மசாஜ் சென்டர் மூலம் விபச்சாரத் தொழில் செய்த திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகள், செந்தில் குமார் என்பவரின் மகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அங்கு தேக வர்த்தகத்துக்காகத் தங்க வைக்கப்பட்டிருந்த புளியகுளத்தைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவரின் மனைவி ஆகிய இரண்டு பெண்களையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். ஊரடங்கிலும் அடங்கவில்லை உடல் வியாபாரிகள்.
-அருள்குமார்
அரசுப் பள்ளிகளை நாடவைத்த கொரோனா!
கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு தற்போது ஆன்லைன், வாட்ஸ் அப் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் 28-ந் தேதி முதல் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட, அதன்படி ஈரோடு மாவட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. முதல் நாளான 28-ந் தேதி அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்கள் அதிக ஆர்வத்துடன் வந்திருந்தனர். குறிப்பாக போனவருடம் கொரோனா காலத்திலும் தனியார் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளைச் சேர்த்த பெற்றோர்கள், இந்த வருடம் இரண்டாவது அலையில் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க அதிக ஆர்வம்காட்டி வருகின்றனர். ப்ரீ கே.ஜி. முதல் பிளஸ் 2 வரை சேர்க்கை நடக் கிறது. ஈரோடு அரசு மகளிர் மாதிரி பள்ளியில் இந்த ஆண்டு இதுவரை 400 பேர் ஆன்லைனில் விண்ணப்பித் துள்ளனர். மேலும் பலர் நேரடி சேர்க்கைக்கு வந்துசெல்வதாக ஆசிரியர்கள் தெரிவிக்கிறார்கள். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் கூறும்போது, ""கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாத பெற்றோர், அரசு பள்ளியை நாடி வருகின்றனர். சென்ற வருட கொரோனா முதல் அலையில் தனியார் பள்ளிகளில் தங்களது குழந்தைகளை தொடர்ந்து படிக்க வைத்த பெற்றோர்களில் 20 சதவீதம் பேர் அரசு பள்ளிகளில் அட்மிஷன் போட்டனர். இந்த வருடம் அது பெரிதும் அதிகரித்திருக்கிறது. இவர்கள் எல்லோரும் தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் நடுத்தர வர்க்க மக்களின் குழந்தைகள். தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் படிக்க வைப்பதை பெருமையாக முன்பு பலரும் கருதினார்கள். இப்போது அந்தப் பெருமைகளை கொரோனா சுக்குநூறாக உடைத்து விட்டது'' என்றனர் புன்னகையோடு. ஈரோடு மட்டுமல்ல, தமிழகம் முழுக்க தனியார் பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கை குறைந்து அரசுப் பள்ளிகளை நாட வைத் திருக்கிறது.
-ஜீவாதங்கவேல்