சாதிக்க பிறந்த சமூக அமைப்பு (Born 2 win) நடத்தும் "திருநங்கை ராணி' தமிழகத்தின் தேடல் என்ற மாபெரும் நிகழ்வு சென்னை -மியூசிக் அகாடமியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக நடிகை கஸ்தூரி, மலைக்கா, ப்ரியதர்ஷினி ராஜ்குமார், சுபிக்ஷா சோனியா, அம்பிகா பிரசாத், அனில் கோதரி, ஹரிஹரன் கொண்ட 7 பேர் நடுவர்களாக செயல்பட்டனர்.
நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
அதன் பின்னர், திருநங்கைகளுக்கான பார்வை, சமூகத்தின் பார்வையில் எவ்வாறு உள்ளது என்ற தலைப்பில் நாமக்கல்லைச் சேர்ந்த (திருநங்கை) ரேவதி நாடகம் ஒன்றை நடத்தி சிறப்பித்தார்.
திறமைவாய்ந்த கலைஞர்களுக்கு கொடுக்கப்படும் விருதுகள் போன்று திருநங்கைகளுக்கும் விருதுகள் கொடுத்து முன்னிலைப்படுத்த வேண்டும் என்று மருத்துவர் அமர் பிரசாத் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி திருநங்கைகளுக்காக முதன்முதலில் புத்தகம் எழுதி வெளியிட்டவர் ரேவதி (திருநங்கை) என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் இடத்தை பிடித்தவர் நபீஸா சென்னையை சேர்ந்தவர். இரண்டாவது இடத்தை பெற்றவர் இனியா ஈரோட்டைச் சேர்ந்தவர். மூன்றாவது இடத்தைப் பிடித்தவர் மதுமிதா காரைக்குடியைச் சேர்ந்தவர்.
-அருண்பாண்டியன்
வெள்ளை பாதி... கறுப்பு பாதி!
புதுச்சேரியில் இருந்து தமிழகத்தில் விற்பதற்காக மது மற்றும் சாராயம் கடத்துவது வாடிக்கையாக உள்ளது. அவ்வாறான மது, சாராய கடத்தலை தடுக்கும் நோக்கில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் கடலூர் மாவட்ட எல்லையில் ஆல்பேட்டை, சாவடி பகுதிகளில் மதுவிலக்கு அமலாக்கத்துறையினர் சோதனைச் சாவடிகள் மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு கடத்தப்படும் மது, சாராய புட்டிகள் கடத்துபவர்களைப் பிடித்து நீதிமன்றத்தின் மூலம் சிறையிலடைக்கிறார்கள். கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களையும் பறிமுதல் செய்கின்றனர். அப்படி பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் மதுவிலக்கு அமலாக்கத்துறையின் சார்பில் பொது ஏலம் விடப்படுகிறது.
கடலூர் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மதுவிலக்கு அமலாக்க துறையின் மூலம் 27-9-2018-ஆம் தேதி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க துறை அலுவலகத்தில் கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் வேதரத்தினம் தலைமையில் வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.
அன்றைய ஏலத்தில் 49 இரு சக்கர வாகனங்கள், 8 மூன்று சக்கர வாகனங்கள், 12 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 69 வாகனங்கள் ஏலம்விட தயார் நிலையில் பட்டியலிடப்பட்டது. அதில் 36 இருசக்கர வாகனங்கள், 4 மூன்று சக்கரவாகனங்கள், 10 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 50 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. மீதி 19 வாகனங்கள் ஏலம் போகவில்லை. இந்த வாகனங்கள் ஏலம் மூலம் ரூபாய் 5,87,600 வருவாய் கிடைத்தது. மேலும் 18% ஏநப வரி 1,05,768 சேர்த்து 6,93,368 ரூபாய் கிடைத்தது.
இந்த ஏலத்தில் ஒருசில பயனற்ற வண்டிகள் மட்டுமே பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டதாகவும், நல்ல நிலையில் உள்ள வாகனங்களின் மதிப்பினைக் குறைத்து மதிப்பிட்டு ஏலத்திற்கு கொண்டு வராமலேயே கள்ளத்தனமாக சில காவலர்களே ஏலம் எடுத்து இடைத்தரகர்கள் மூலமாக விற்பனை செய்து பெருந்தொகையை பங்கு போட்டுக்கொண்டதாய் புகார்கள் கிளம்பியுள்ளன.
-சுந்தரபாண்டியன்
தாய்மொழி தமிழை நேசியுங்கள்!
திண்டுக்கல், காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் 34-ஆவது பட்டமளிப்பு விழா 10-10-2018 அன்று நடந்தது.
சிறப்பு அழைப்பாளராக இந்திய குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வந்தார். இதற்காக முதல் மூன்று நாட்களும் பல்கலை வளாகக் குடியிருப்பில் காக்கிகளின் ஏகப்பட்ட கெடுபிடிகள்.
மாலை 4:00 மணிக்குத்தான் பட்டமளிப்பு விழா. காலை எட்டு மணிக்கே பட்டம் பெறும் மாணவ மாணவியரையும் பெற்றோரையும் விழா அரங்கிற்குள் அடைத்துவிட்டனர்.
நண்பகல் 12:45-க்கு ஹெலிகாப்டர், காந்தி கிராம பல்கலை வளாகத் திடலில் இறங்கியது. 3:30க்கு விழா மேடைக்கு வந்தார் குடியரசு துணைத்தலைவர். தமிழில் வணக்கம் கூறினார். பட்டங்களை வழங்கினார். மைக் பிடித்தார்.
""தமிழும் தமிழ் மக்களும் என் நெஞ்சிற்கு நெருக்கமானவர்கள்'' மகிழ்ச்சிப் பெருக்கோடு சொல்லித் தொடர்ந்தார். ""தமிழர்களான நீங்கள் உங்கள் வீடுகளில் தமிழில் பேசுங்கள். பெற்ற தாயை "அம்மா' என்று அழையுங்கள். நான் திண்டுக்கல் சீனிவாசன் சொல்லும் அம்மாவைச் சொல்லவில்லை. (திண்டுக்கல்லார் புன்னகைத்தார். மாணவ-மாணவியரோ அரங்கம் அதிர கரவொலி எழுப்பினர்) தாய்மொழி, கண்களைப் போன்றது. அதை நேசியுங்கள். விடுதலை பெற்று இத்தனை ஆண்டுகள் ஆயினும், இன்னும் 21 விழுக்காடு மக்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் இருக்கிறார்கள். 70 விழுக்காடு மக்கள் வறுமைக்கோட்டில் வாழ்கிறார்கள்'' பேசி முடித்தார்.
நிறைவாக காந்தி கிராம மருத்துவத்தில் சிறந்த சேவையாற்றிய டாக்டர் கவுசல்யா தேவிக்கும் சமூக சேவையாளர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கும் விருதுகள் வழங்கினார் வெங்கையா நாயுடு.
-சக்தி