காத்திருக்கும் டோக்கன்!

சோழவந்தான் தொகுதியின் சிட்டிங் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், வேட்பாளருமான மாணிக்கம் உரையாடிய வில்லங்க ஆடியோ ஒன்று, சமூக ஊடகங்களில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. அதில் அவருடன் பேசும் அ.தி.மு.க. ஐ.டி.விங் நபர் ஒருவர், ""அழகாபுரில இருந்து, ஐ.டி. விங்க்ல இருந்து பேசுறேண்ணே... இந்த டோக்கன் கொடுத்ததுக்கு ஆள் பூராவும் வந்து நிக்குது. சாமி கும்பிட வேண்டியது இருக்குது. எல்லாம் வந்து வீட்டுல நெருக்கறாங்க...''’ என்று பதட்டம் தணியாமல் சொல்ல...

signal

இதற்குப் பதில் சொல்லும் அவர், ""டோக்கனுக்கு தலைமைல இருந்து இன்னும் க்ளியர் ஆகல தம்பி. அவங்க தேர்தல் முடிவு தெரிஞ்சதும்தான் செய்வாங்க. ஏன் அவசரப் படுத்துறீங்க? ஜெயிச்சு வந்து பார்க்கிறோம்னு சொல்லி யாச்சுல்ல...''’என்று கூலாகச் சொல்கிறார். அந்த ஐ.டி.விங் நபரோ, ""அண்ணே 91 பெர்சன்ட் நம்மதுல வாக்குப்பதிவுண்ணே...''’என்று குரலாலேயே தலைசொறிய, இதற்கும் அசராத அவர்... ""ஓட்டுப் போட்டிருக்காங்கள்ல. 100 பெர்சன்ட் ரூபா வந்ததும், நாம கொடுத்திருவோம். அவங்க தரலன்னாலும் நான் கொடுத்திருவேன்''’என்று சமாளிக்கிறார். இந்த விவகாரம் தி.மு.க. தரப்புக்குத் தெரியவர... அவர்கள் புகார் கொடுத் திருக்கிறார்கள்.

Advertisment

இதுகுறித்து, சோழவந்தான் எம்.எல்.ஏ. மாணிக்கத்திடமே நாம் கேட்க...’""இந்த ஆடியோ வந்ததுமே அது என் குரல் இல்லைன்னு நான் மறுப்பு சொல்லிட்டேன். என் மீது கொடுக்கப்பட்ட புகார், பணப் பட்டுவாடா தொடர்பானது இல்லை. ஆரத்திக்கு பணம் போட்டதா தி.மு.க.காரங்க சொல்லிருக்காங்க. நம்மளுக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லை. அம்மாவுக்குப் பயந்து தேர்தல் வேலை பார்த்திருக்கேன். ஆண்டவனுக்குப் பயந்து ஓட்டு கேட்டிருக்கோம். ஆண்டவன் புண்ணியத்துல ஜெயிப்பேன். எம்.எல்.ஏ. ஆகி தொண்டு செய்வேன். மத்தபடி ஆடியோ உரையாடலில் இருப்பது என் குரல் இல்லை''’என்று ஒரேயடியாக மறுத்தார். ஆனால் தொகுதியின் அ.தி.மு.க.வினரோ, ""ஓட்டு கேட்டு நாங்க போனப்ப, மக்களிடம் டோக்கனை விநியோகிச்சது உண்மைதான். ஓட்டு போட்ட பிறகு, அதுக்குப் பணம் கொடுக்கறதா சொன்னதும் உண்மைதான். ஆனா, கருத்துக்கணிப்பெல்லாம் வேற மாதிரி இருப்பதால், எதுக்கு பணம் கொடுக்கணும்னு எம்.எல்.ஏ. கையை விரிக்கிறார். இவரால் எங்களைத்தான் எல்லோரும் நெருக்கறாங்க''’என்றார்கள் பரிதாபமாக.

-ராம்கி

அரை நிர்வாணப் போராட்டம்

Advertisment

விவசாயிகளின் உணர்வுகளை மதிக்காத மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், விவசாயிகள் திருச்சியில் போராட்டத்தில் குதித்தனர். அப்போது அவர்கள், உடலில் இலை தழைகளைக் கட்டிக்கொண்டு அரை நிர்வாணத்தோடு’’ மத்திய-மாநில அரசுகள், "உடனடியாக உரவிலை உயர்வை திரும்பப்பெற வேண்டும்! விவசாயத்திற்கு 24-மணி நேரமும் தங்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்! விளை பொருள்களுக்கு லாபகரமான விலை வழங்கிட வேண்டும்! அகிம்சை வழியில் போராட, டெல்லிக்கு அனுமதிக்க மறுக்கும் காவல்துறையைக் கண்டிக்கிறோம்!'’என்றெல்லாம் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

signal

இதனால் திருச்சி-கரூர் சாலை ஸ்தம்பிக்க... ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ், அவர்களைத் தடுத்தது. இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தை விவசாயிகள், அண்ணாமலை நகர் பகுதிக்கு மாற்றிக்கொள்ள அங்கும் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. "எங்களை டெல்லி போராட்டத்துக்கு அனுமதிக்கும் வரை போராட்டம் தொடரும்'’என்றார் அய்யாக்கண்ணு.

-மகேஷ்

பச்சோந்திப் பார்ட்டிகள்

"தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கையில், 2011-க்கு முன் தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களின் பி.ஏ.க்களாகவும் ஓ.ஏ.க்களாகவும் இருந்து கோலோச்சிய பலரும், மீண்டும் தலையெடுக்க நினைக்கிறார்கள். கோட்டைத் தரப்பில், ’தலைமைச் sசெயலகம் கோபி என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. முந்தைய தி.மு.க. ஆட்சியில் அமைச்சர் ஒருவரின் பி.ஏ.வாக இருந்தபடி ஆடாத ஆட்ட மெல்லாம் ஆடினார். பல்வேறு புகார்களில் சிக்கி, ஆட்சிக்கு கெட்டபெயர் உருவாக்கினார். தனது இரண்டாவது மனைவியை, அரசு பதிவேட்டில் மறைத்திருக்கிறார் என்று அவரது முதல் மனைவியே புகார் கொடுக்க, அப்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கும் கோர்ட்டில் இருக்கிறது. பின்னர் ஜெ.’ஆட்சியில் தனது மருமகனுக்கு சென்னை பல்கலைக் கழகத்தில் வேலை வாங்கிக் கொடுத்தார் கோபி. அந்த மருமகனோ, ஜெ.வுக்கு நெருக்கமானவன் என்று சொல்லியே ஆட்டம் போட்டார். ஆட்சி மாற்ற நம்பிக்கையோடு, கோபி மீண்டும் தலைமைச் செயலகத்தில் வலம் வருவதோடு, தனது மகனையும் மருமகனையும் அமைச்சர்களின் பி.ஏ.க்களாக ஆக்கிவிட வேண்டும் என்ற பகீரத முயற்சிகளில் இருக்கிறாராம்.

இவரைப்போன்ற பச்சோந்திப் பார்ட்டிகள் பலரும் அறிவாலய அனுக்கிரஹத்துக்காகக் காத்திருக்கிறார்களாம். இவர்களை, ஸ்டாலினும் சித்தரஞ்சன் சாலை வீடும் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்'’ என்கிறார்கள் ஆதங்கத்தோடு.

-இளையர்