மோப்ப நாய்க்கு மரியாதை!

signal

காவல்துறையின் கூர்மையான புலனாய்வுகளுக்கு மோப்ப நாய்கள் பெரிதும் உதவிவருகின்றன. அவை, தமது மோப்ப சக்தியால் கொலை, கொள்ளை, வெடிகுண்டுக் குற்றங்கள் போன்றவற்றில், குற்றவாளிகளை ஸ்மெல் செய்யப் பெரிதும் துணையாக இருக்கின்றன. இதற்காக சிறப்பான பயிற்சிகளும் தரப்பட்டுவருகின்றன. பிரபலமான வழக்குகள் பலவற்றின் மர்ம முடிச்சுகளை, இப்படிப்பட்ட மோப்ப நாய்களே அவிழ்த்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது. நெல்லை வெடிகுண்டுத் தடுப்புப் பிரிவின் பிராவோ எனும் நாய், வெடிகுண்டு வழக்குகள் பலவற்றிலும் தன் திறமையைக் காட்டியிருக்கிறது. இதனால் காவல்துறையின் செல்லத் தோழனாகவே இருந்துவந்தது. இந்தநிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு, வயது மூப்பு காரணமாக, ஏழரை வயது கொண்ட பிராவோ மரணமடைந்தது. இது அப்பகுதி காக்கிகளைக் கவலையில் ஆழ்த்தியது. பிராவோ இறந்ததும், மனிதர்களுக்குச் செய்வது போலவே, அதற்குப் பால் ஊற்றி இறுதிச் சடங்குகளைச் செய்தனர். அடக்கத்தின்போது, 30 குண்டுகள் முழங்க காவல்துறையின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. மாநகர போலீஸ் துணை ஆணையர்களான மகேஷ்குமார் மற்றும் சீனிவாசன் தலைமையில் காவலர்கள் மறைந்த பிராவோவுக்கு மலரஞ்சலி செய்து, தங்கள் பேரன்பைச் செலுத்தினர். காவல்துறையினரின் இந்த மனிதநேயம், காண்பவர்களின் மனதை உருகவைத்தது.

-பரமசிவன்

காவல் நிலையத்துக்குத் தடை!

சென்னை உயர்நீதிமன்றத்தில், அறப்போர் இயக்கம் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. அதில், ’காஞ்சிபுரம் மாவட்டம் செம்மஞ்சேரியில் உள்ள தாமரைக்கேணி என்ற நீர் நிலையைத் தூர்த்து, அங்கே புதிதாக காவல் நிலையத்தைக் கட்டி யிருக்கிறார்கள். இது நீர்நிலை என்று தெரிந்தும், அந்த இடத்தை, மேய்க் கால் புறம்போக்காக அறிவித்து, கட்டிடத்தை எழுப்பி யுள்ளனர். இதற்கு, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ) ஒப்புதலையும் பெறவில்லை. எனவே, நீர்நிலையில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையத்துக்கு தடை விதிக்கவேண்டும். நீர்நிலையை பழைய நிலைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்’ என்றும் குறிப் பிடப்பட்டிருந்தது. இதன் விசாரணை, தலைமை நீதிபதி சஞ்சீப் பேனர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் வந்தது. அப்போது நீதிபதிகள், ""செம்மஞ் சேரி காவல் நிலையம், நீர்நிலையில் கட்டப்பட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டால் அதை இடிக்க உத்தரவிடுவோம். எனவே, அதுவரை அந்தப் புதிய கட்டிடத்தில் காவல்நிலையம் செயல்பட தடை விதிக்கிறோம். மேற்கொண்டு அங்கே எந்த ஒரு புதிய கட்டிடத்தையும் கட்டக்கூடாது''’என்று அதிரடியாக அறிவித்ததோடு... அங்கே கட்டிடம் நீர்நிலையில்தான் கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய, ஐ.ஐ.டி. பேராசிரியர்கள், மாணவர்கள் கொண்ட குழுவை அமைக்கும் நடவடிக்கையையும் முடுக்கியிருக்கிறது.

-கீரன்

Advertisment

பிரபலங்களை ஓரங்கட்டிய காளியம்மாள்!

signal

நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வேட்பு மனுக்களையும், அவர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தையும், பொதுமக்கள் யார் வேண்டுமானாலும், பதிவிறக்கம் செய்து பார்க்க முடியும். ஒவ்வொரு முறை இதைப் பதிவிறக்கம் செய்யும்போது, இணைய தளத்தில் அதன் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கும். அந்த வகையில், போடிநாயக்கனூரில் போட்டியிட்ட துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸின் மனுவை, கடந்த வார நிலவரப்படி, 3,343 பேர் தரவிறக்கம் செய்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரது பிரமாணப் பத்திரங்களின் தரவிறக்க எண்ணிக்கை என்பது, 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட ம.நீ.ம. வேட்பாளர் பத்மபிரியாவின் பிரமாணப் பத்திரமோ, 3 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளுகிற விதமாய், பூம்புகார் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாளின் பிரமாணப் பத்திரம், 7 லட்சத்து 59 ஆயிரம் முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இது பலத்த வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. யார் இந்த காளியம்மாள்? நாகையைச் சேர்ந்த இவர், கடந்த 2019-ஆம் ஆண்டு, வடசென்னை தொகுதியில் நாம் தமிழர் சார்பில் போட்டியிட்டிருக்கிறார். அப்போது, 60,515 வாக்குகள் பெற்றார். நாடாளுமன்றத் தேர்தலின்போது தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரம் 66 முறை மட்டுமே தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த முறை, பூம்புகார் தொகுதியில் போட்டியிட்டபோது, ஏழரை லட்சத்தைக் கடந்திருக்கிறது. அந்தப் பிரமாணப் பத்திரத்தில் அப்படி என்னென்ன இடம் பெற்றிருக்கும்? வேட்பாளர்களின் கல்வித் தகுதி, வருமானம், கடன் தொகை, சொத்து விபரங்கள், வங்கிக் கணக்கு விபரங்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

-ராம்கி