பெண் வேட்பாளருக்கு டார்ச்சர்!

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த சமூகஆர்வலரான வீரலட்சுமி, "தமிழர் முன்னேற்றப் படை' என்ற அமைப்பை நடத்திவருகிறார். 2016-ஆம் ஆண்டு மக்கள்நல கூட்டணியில் ம.தி.மு.க.வின் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டு பதினைந்தாயிரம் வாக்குகளைப் பெற்றவர் வீரலட்சுமி. இப்போதைய தேர்தலில் "மை இந்தியா பார்ட்டி' சார்பாக போட்டியிட, 17-ஆம் தேதி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த நிமிடத்திலிருந்தே வீரலட்சுமிக்கு டார்ச்சர் ஆரம்பித்து விட்டதாம். யரோ ஒரு மர்ம நபர், ஆபாச வீடியோக்களைத் தனது செல்போனுக்கு தொடர்ந்து அனுப்பி டார்ச்சர் கொடுப்பதாக காவல்துறையில் புகார் அளித்த அவர், "எனக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பியவனை உடனே கைது செய்யாவிட்டால், அவனை நானே கண்டுபிடித்து, பல்லாவரம் சந்தையில் நிற்க வைத்து, அவனது உறுப்பை அறுத்தெறிவேன்' என்று சமூக ஊடகங்களிலும் சவால்விட்டு விறுவிறுப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இதுதொடர்பாக நம்மிடம் பேசிய வீரலட்சுமி ""நான் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே தேர்தலில் நிற்கிறேன். கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் சி.ஆர்.சரஸ்வதிக்கு விழ வேண்டிய வாக்குகளைப் பிரித்து அவரைத் தோல்வியடையச் செய்தவள் நான். இப்போது எனக்குsignal வரும் ஆபாச வீடியோ பற்றி, பரங்கிமலை துணை கமிஷனரிடம் சென்று புகார் கொடுத்தபோது, கொஞ்சம் கூட அக்கறையில்லாமல் அலட்சியமாகப் பேசினார். பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடூரத்தையே மறைக்கப் பார்க்கும் இந்த அரசிடமும் போலீஸிடமும் எனக்கு நியாயம் கிடைக்குமா என்பது கேள்விக்குறி? பெண் எஸ்.பி. ஒருவருக்கு காவல்துறை சிறப்பு டி.ஜி.பி.யே செக்ஸ் டார்ச்சர் கொடுக்கிற இந்தத் தமிழ்நாட்டில், எந்த நியாயமும் கிடைக்காது என்பதால், பிரச்சாரத்துக்கே நான் போகவில்லை'' என்றார் ஆத்திரமும் ஆதங்கமுமாக.

-அரவிந்த்

அ.ம.மு.க. வேட்பாளர் வேட்புமனு சர்ச்சை!

Advertisment

மதுரவாயல் தேர்தல் களம், அனலடித்தபடி தகிக்கிறது. இங்கு தி.மு.க. கணபதி, அ.தி.மு.க அமைச்சர் பெஞ்சமின், அ.ம.மு..க லக்கி முருகன், மக்கள் நீதி மய்ய பத்மபிரியா, நாம் தமிழர் கணேஷ்குமார் உள்ளிட் டோர் களத்தைக் கலக்கிவரும் நிலையில், இவர்களில் லக்கி முருகன் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இவர் தனது வேட்புமனுத் தாக்கலின்போது, தன் மேலுள்ள வழக்குகளை பற்றிய எந்த விபரத்தையும் தெரிவிக்காமல், தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிவிட்டார் என்ற குற்றச்சாட்டுதான் இப்போது எழுந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 2011-ல் கண்டெய்னர் லாரி தொடர்பான விவகாரம் ஒன்றில் சிக்கி லக்கி, புழல் சிறையில் இருந்திருக்கிறார். அதேபோல் ராமாவரம் எம்.ஜி.ஆர், இல்லத்தின் முன்பு கொடி மரத்தை அகற்றிய வழக்கு ஒன்றும் அவர் மீது இருக்கிறதாம். இதையெல்லாம் லக்கி முருகன் தனது வேட்புமனுவில் குறிப்பிடாமல் மறைத்துவிட்டார் என்று தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கும் விவகாரத்தைக் கொண்டு செல்ல இருக்கிறார்களாம். இது அ.ம.மு.க. தரப்பில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

-வேல்

""தமிழர்களின் அபாயம் பா.ஜ.க.'' -வீரப்பமொய்லி தாக்கு!

Advertisment

சிவகாசி வந்திருந்த கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளருமான வீரப்பமொய்லி செய்தியாளர் சந்திப்பில்...

""மோடி தலைமையிலான அரசாங்கத்தால், பல இன்னல்களைப் பட்டாசுத் தொழில் சந்தித்து வருகிறது. பட்டாசு ஏற்றுமதி செய்யவும், தேவையான பொருட்களை இறக்குமதி செய்யவும் தடை உள்ளதால், தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த ஆறு ஆண்டுகளில், பட்டாசு உற்பத்தியில் ரூ.20000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பட்டாசுத் தொழிலை மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை. தவறான கொள்கையின் காரணமாக 12 கோடி பேர் வேலை வாய்ப்பினை இழந்திருக்கின்றனர். உள்நாட்டு உற்பத்தியும் குறைந்து பெரியஅளவில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருக்க மாட்டார். தமிழர்களின் அபாயமாக பா.ஜ.க. உள்ளது. பல்வேறு தரப்பினர் விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசு ஆதரித்தது. இதன்மூலம், பா.ஜ.க. கட்டுப்பாட்டில் அ.தி.மு.க. பயந்துபோய் இருப்பது தெளிவாகிறது.

ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை இல்லை. இவர்கள், நிச்சயமாக பா.ஜ.க.வுக்கு எதிராக வெறிகொண்டு இருக்கின்றனர். வேலைவாய்ப்பு வழங்குவதில், இந்த அரசு எந்த அக்கறையும் காட்டவில்லை. சிறுகுறு தொழில்கள் மூடப்பட்டுள்ளன.

ஸ்டாலின் சிறந்த நிர்வாகி. அவரது தந்தையிடம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டுள்ளார். நிச்சயம் அவரது ஆட்சி அமையும்.

பிரியங்கா காந்தி தமிழகம் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அவர் வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்''’ என்றார்.

-ராம்கி