ஆலை வாசலில் பட்டினிப் போர்!
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் ஆறு மாதங்களுக்கும் மேலாக ஊதியம் வழங்கவில்லை என கடந்த 1-ஆம் தேதி முதல் ஆலை வாசலில் கொட்டும் மழையிலும் குடும்பத்துடன் காந்திய வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் தொழிலாளர்கள்.
திரு ஆரூரான் சர்க்கரை ஆலையில், 150-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர், அவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் சம்பளம் வழங்காமல் காலத்தைக் கடத்துவதோடு, முறையான பதிலும் கூறாமல் அலட்சியப்படுத்தி வருகிறது நிர்வாகம்.
இந்தநிலையில் குடும்பத்துடன் ஆலை வாயில்முன் ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதத்தை நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் உள்ள ஐ.என்.டி.யு.சி.யின் பொதுச்செயலாளர் கணேசமூர்த்தி நம்மிடம்... ""ஆறுமாதமாக சம்பளம் கொடுக்காம இழுத்தடிக்கிறாங்க, அதோட சம்பளத்தில் பிடித்தம் செய்த எல்.ஐ.சி. பணத்தையும், சம்பளத்தில் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதியையும் 13 மாதமாக கட்டாமல் ஏமாற்றி வருகின்றனர். 2016-17-க்கான போனஸ் வழங்கல, தனிநபர் கடன் 13 மாதமாக பிடித்தம் செய்தும் கட்டாமல் எங்க தலையில் வச்சிட்டாங்க. சம்பளம் இல்லாமல் பிள்ளைங்க படிப்புச் செலவு, மருத்துவச் செலவு, வீட்டுவாடகை, பால் கடன்கூட கொடுக்க முடியாம நாங்க படும்பாடு சொல்லி முடியாது. இதுவரை இரண்டு வேளை உணவில் ஒரு வேளையாவது சாப்பிட்டோம், இனிமேல் அதுக்கும் வழியில்லாமல் வீதிக்கு வந்துவிட்டோம்'' என்றார்.
திருமண்டங்குடியில் ஐந்தாவதுநாள் போராட்டம் நடந்துவரும் நிலையில்... திரு ஆரூரான் நிர்வாகத்தின் மற்றொரு ஆலையான கோட்டூர் ஆலை தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தல் இருந்துவந்த தொழிலாளர்கள் ஐயப்பன் (52), மதியழகன் (59) ஆகிய இருவரும் மயங்கி விழுந்தனர். இதனையடுத்து மயங்கிய இருவரையும் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
பட்டினிப் போராட்டம் நடத்தும் தொழிலாளர்களை பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான துரைக்கண்ணு இதுவரை எட்டிக்கூடப் பார்க்கவில்லை.
-க.செல்வகுமார்
சங்குக்கே சங்கு!
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் இழவு வீடு ஒன்றுக்கு நாவிதர் அழைக்கப்பட்டிருந்தார். நாவிதரோ, சங்கு இல்லாமல் வெறுங்கையோடு வந்தார். "என்னலே... சங்கெடுத்து ஊதுலே...' என்று உத்தரவிட்டார் இழவு வீட்டுக்காரர்.
""செத்த வீடுகள்ல சங்கு ஊதுறது இல்லைனு எங்க சங்கத்துல முடிவு பண்ணிட்டாவ. இப்ப சாவு வீடுகளுக்கு நாங்க சங்கெடுத்துப் போறதில்லை'' உறுதியாகச் சொன்னார், மருத்துவர் சமுதாயத்தைச் சேர்ந்த முடிவெட்டும் தொழிலாளியான அவர்.
அவரை கேதவீட்டுக்கு வந்த பலரும் கிண்டல் செய்து சங்கடப்பட வைத்தனர்.
""இது சாதிய ஒடுக்குமுறை என்பதற்காக இந்த முடிவா?'' தமிழ்நாடு மருத்துவர் சமுதாயப் பேரவையின் உயர்மட்டக்குழு உறுப்பினர் கண்ணனிடம் கேட்டோம்.
""அதற்காக இல்லை. சாவு வீடுகளில் சங்கு ஊது ஊது என்று ஆளாளுக்கு விரட்டுவார்கள். இளைப்பாற விடமாட்டாங்க. ஊதிக்கொண்டே இருக்க வேண்டும். கைலாசத்தில் ஆடுகின்ற சிவனுக்கும் வைகுண்டத்தில் படுத்திருக்கின்ற திருமாலுக்கும் கேட்க வேண்டும். அப்பத்தான் செத்துக்கிடக்கும் இவனோட ஆவிக்கு மோட்சத்துல இடம் கிடைக்கும் என்று வேகமாக, சத்தமாக தொடர்ந்து ஊதச் சொல்வார்கள். தென்காசி பக்கத்துல காசிமேஜர்புரம்னு ஒரு ஊர். அங்கே ஒரு இழவு வீட்ல தம்கட்டி ஊதுறம்னு மயங்கி விழுந்து எங்க ஆளு ஒருத்தர் செத்தே போனார். இப்ப நெல்லை மாவட்டத்துல கட்டுப்பாடு முழுமையாகிவிட்டது. யாரும் சங்கு ஊதுறதேயில்லை. மற்ற மாவட்டங்களுக்கும் இதை வலியுறுத்துகிறோம்'' என்றார் கண்ணன்.
தமிழ்நாடு மருத்துவர் சமுதாயப் பேரவையின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் ஜெய்கணேசனோ, ""அந்தக்கால மனிதர்களைப் போல இப்போது உள்ளவர்களால் தம் பிடித்து சங்கு ஊத இயலவில்லை. இப்பத்தான் ஆட்டோவுல மைக் கட்டி அறிவிக்கிறாங்களே... அதைவிடவா சங்கை முழங்கிவிட முடியும். ஊதுவதை நிறுத்திவிட்டோம்...'' உறுதியாகச் சொன்னார்.
-சி.என்.இராமகிருஷ்ணன்
கொதிக்கும் பாய்லர் தொழிற்சாலை!
ஒன்பதாயிரம் பேர் பணியாற்றிக்கொண்டிருக்கும் திருச்சி பெல் (இஐஊக) நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகத் தடுமாறிக்கொண்டிருக்கிறது.
இந்த லட்சணத்தில் வெல்டிங் செக்ஷனில் பணியாற்றும் 700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தின விடுப்புகளை தொடர்ந்து எடுத்து புதுவகை போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
ஏன் இந்த விடுப்பு எடுப்பு போராட்டம்?
""இந்த தொழிற்சாலைக்கே வெல்டர் செக்ஷன்தான் முக்கியமான செக்ஷன். 900-க்கும் அதிகமான தொழிலாளர்கள் இந்த செக்ஷனில் வேலை செய்கிறோம். கடினமான வேலையும் இதுதான். மற்ற செக்ஷன்களில் வேலை செய்வோருக்கு ஐந்தாண்டுக்கு ஒருமுறை பதவி உயர்வு, ஆனால் எங்களுக்கோ நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவி உயர்வு கொடுப்பது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக பதவி உயர்வே இல்லை என்ற நிலையை உண்டாக்கிவிட்டது நிர்வாகம். அதனால்தான் பதவி உயர்வும் ஊக்கத் தொகையும் கேட்டோம். கோர்ட்டுக்குச் சென்றோம். அங்கே இழுபறியானதால் உள்ளிருப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்தோம். பேச்சுவார்த்தைக்குப் பிறகு அதையும் கைவிட்டுவிட்டு, மாஸ் விடுப்பு எடுத்து போராடுவது என்ற முடிவுக்கு வந்தோம்'' என்கிறார்கள் பெல் வெல்டர்கள்.
ஒரே நேரத்தில் 700 வெல்டர்களும் விடுப்பு எடுத்ததால் செயலற்று நிற்கிறது பெல் நிறுவனம்.
வேறு செக்ஷனில் பணியாற்றும் தொழிலாளர்களோ... ""எங்களை விட வெல்டர்கள் அதிகம் சம்பளம் பெறுகிறார்கள். 20 வருட சர்வீஸ் உள்ள ஒரு வெல்டர் அறுபதாயிரம் வரை சம்பளமும், அதற்கு அலவன்சும் பெறுகிறார். புதிதாய் வந்தவர்கள் 25 ஆயிரம்தான் வாங்குகிறார்கள். தாங்கள்தான் பெல்லின் முதுகெலும்பு என்று தெரிந்துதான் சம்பளம் பிடித்தாலும் பிடிக்கட்டுமென விடுப்பெடுப்பு போராட்டம் நடத்துகிறார்கள்'' என்கிறார்கள்.
-ஜெ.டி.ஆர்.