மய்யம் வேட்பாளரின் மவுசு!
அருப்புக்கோட்டை தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளராக வைகைச்செல்வன் களமிறங்கியிருக்கிறார். இவரை எதிர்த்து சிட்டிங் எம்.எல்.ஏ.வான கே.கே. எஸ்.எஸ்.ஆரையே இந்தமுறையும் தி.மு.க. களமிறக்கி இருக்கிறது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் அருப்புக்கோட்டை வேட்பாளராக உமாதேவியை அறிவித்துள் ளது அக்கட்சி. அதன் மாநில பொதுச் செயலாளரான உமாதேவி, பிரபல ‘ஸ்ரீஜெயவிலாஸ்’ டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் என்பது உபரித் தகவல். அவரது டெக்ஸ்டைல்ஸில் சுத்துப்பட்டு ஊர் களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களும் அவர்கள் குடும்பத்தினரும் உமாவுக்கு ஆதரவாகக் களமிறங்கினால், வாக்கு சேதாரம் தி.மு.க.வுக்கா? அ.தி.மு.க.வுக்கா? என்று லோக்கல் பார்ட்டிகள் பரபரப்பாகப் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர். முதன் முதலாக முதல்வர் பொறுப்பேற்றபோது, அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ.வாகத்தான் வெற்றி பெற்று வந்தார். அதனால், இந்தத் தொகுதியை கௌரவமாகக் கருதுகிறது அ.தி.மு.க. அதே நேரத்தில், அண்ணாச்சி எனப்படும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தன் செல்வாக்கை நிலை நிறுத்து வதில் எப்போதும் முனைப்பாக இருப்பவர். அ.தி.மு.கவுக்கும் தி.மு.கவுக்கும் மய்யமாக உமாதேவி களமிறங்கியிருப்பது விறுவிறுப்பைக் கூட்டியுள்ளது.
-ராம்கி
பெண் மந்திரியின் சீட்டைப் பறித்தது யார்?
வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ.வும் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான நிலோபர் கபிலுக்கு இந்தமுறை கட்சித் தலைமை சீட் தராதது அவரது ஆதரவாளர்களுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பதிலாக, ஆலங்காயம் மேற்கு ஒ.செ. செந்தில்குமார் வேட்பாளராக நிறுத்தப் பட்டுள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. வட்டாரத்தில் விசாரித்தபோது, ’’""அமைச்சர் வீரமணியும் நிலோபரும் பக்கத்து பக்கத்து மாவட்டம். இருந்தாலும் ஒரு உறையில் ஒரு கத்திதான் இருக்கணும்னு நினைச்சார் வீரமணி. இந்த நிலையில், "நீயும் மந்திரி, நானும் மந்திரி. அப்படியிருக்க உனக்கேன் காட்டவேண்டும் மரியாதை?'ன்னு வீரபாண் டிய கட்டபொம்மியாக மாறி, வீரமணியிடம் வீரத்தைக் காட்டினார் நிலோபர். இதில் கடுப்பான வீரமணி, நிலோபருக்கு எதிரான போக்கைக் கையில் எடுத்தார். இதைத் தொடர்ந்து வாணியம்பாடி தொகுதியில் எந்த நிகழ்ச்சியிலும் அவர் தலையைக் காட்டாமல் புறக் கணித்தார். இந்த நிலையில் தேர்தல் வந்ததால், நிலோ பருக்கு சீட் கொடுக்கக்கூடாது என்று கொடி பிடித்த வீரமணி, நினைத்ததைச் சாதித்துவிட்டார்''’என்கிறார்கள்.
மேலும்’""இந்தம்மாவும் கட்சியினரை மதிச்சதில்லை. தனது மகன், மருமகனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தார். அவர்களும் கட்சியினரை மதிக்கவில்லை. அதனால், கட்சி நிர்வாகிகள் பலரும், இவருக்கு சீட்டு வழங்கினால் தோற்றுவிடுவோம்னு தலைமைக்குத் தெரிவித்தனர். அதேபோல் குடியுரிமை சட்ட திருத்தத் தை எதிர்த்து, இஸ்லாமியர்கள் போராடியபோது, இவர் பா.ஜ.க.வைக் கடுமையாக விமர்சித்தார். இவையெல்லாம் சேர்ந்துதான் நிலோபரை நிராதர வாக ஆக்கிவிட்டது''’என்கிறார்கள்.
ஆனாலும் நிலோபரின் ஆதரவாளர்கள், அவர் வீட்டுமுன் குவிந்து எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ்.சுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பிவருகின்றனர். நிலோபரோ "சீட் கொடுக்காவிட்டாலும் அ.தி.மு.க வெற்றிக்குப் பாடுபடுவேன்' என்கிறார்.
-ராஜா
குழந்தைகள் மூலம் சரக்கு விற்பனை!
தேர்தல் நெருங்கிவிட்டதால், டாஸ்மாக் விவகாரத்தில் கடுமை காட்டத் தொடங்கிவிட்டது தேர்தல் ஆணையம். குறிப்பாக தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் உரிய நேரத்திற்குள் மூடவேண்டும் என்றும், அதேநேரத்தில் "கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் உத்தரவிட்டது. "குற்றம் நடக்கும் பகுதியில் உள்ள காவல்நிலைய போலீசார் மீதும் நடவடிக்கை பாயும்' என்றும் அதிரடி காட்டியிருக்கிறது. இருந்தும், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பின்னரும், பெண் குழந்தை களை வைத்து சரக்கு வியாபாரம் ஜரூராக நடப்பதாக நமக்குத் தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து சென்னை எழும்பூர் பழைய கமிஷனர் அலுவலகத்தில் இருந்து நூறுமீட்டர் தொலைவில் உள்ள எஸ்.எம்.எஸ். டாஸ்மாக் பாரில், கடை மூடிய பிறகும் பெண் குழந்தைகள் மூலம் சரக்கு விற்பனை நடப்பதை நேரில் பார்த்து, அதை ரகசியமாக வீடியோவில் பதிவுசெய்தோம்.
இது தொடர்பாக எஃப்-2 காவல் நிலைய ஆய்வாளர் சேட்டுவிடம் நாம் பேச, ""பெரிய வியாபாரிகள் இதில் சம்மந்தப்பட வாய்ஙபபில்லை. எல்லாம் பிளாட்பார கேஸ் களாக இருக்கும் சார்... கவனிக்கிறேன்''’என்றார். குழந்தைகள் நல அமைப்பைச் சேர்ந்த டாக்டர் மனோரமாவிடம் இதுபற்றி நாம் கேட்ட போது, ""இந்திய தண்டனைச் சட்டம் செக்ஷன் 77 மற்றும் 78-ன்படி குழந்தைகளுக்கு போதைப்பொருட்களை கொடுத்தல், அவர்களை வைத்து விற்பனை செய்தல் போன்ற குற்றத்திற்கு ஒன்று முதல் ஏழு ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை வரை வழங்கலாம். மேலும் 18 வயதிற்குக்கீழ் உள்ளவர்களை வியாபார நோக்கில் பயன்படுத்தினால், அதற்கும் ஏழு ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை வழங்க முடியும்''’’என்கிறார் அழுத்தமாய். காவலர்கள் கவனிப்பார்களா?
-அரவிந்த்