கிளம்பிட்டாரு செந்தில் பாலாஜி!

தி.மு.க.வில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், எம்.பி. கனிமொழி, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தவிர தலைமைக் கழகப் பேச்சாளர்களும் உள்ளூர் நிர்வாகிகளும் ஆங்காங்கே பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசிவருகிறார்கள். இதில் விருப்ப மனு கொடுப்பதற்கு முன்பே கடந்த 23-ஆம் தேதி தனது கரூர் தொகுதியில் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார் அரவக்குறிச்சி தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி. தொகுதிக்குட்பட்ட கோடங்கிபட்டி கிராமத்தில் இருக்கும் முத்தாளம்மன் கோவிலில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டுவிட்டு "இல்லம்தோறும் உதயசூரியன்'’என்ற முழக்கத்துடனும் கட்சி நிர்வாகிகளுடனும் கிளம்பிவிட்டார் செந்தில் பாலாஜி.

ss

செ.பா. செல்லும் இடங்களில் எல்லாம் பெண்களின் ஆரத்தி வரவேற்பு, மாலை மரியாதை என தூள் பறக்கிறது. வயதான ஆண்கள்-பெண்கள் எல்லோரின் காலிலும் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஆசி வாங்கும் செந்தில்பாலாஜி, தி.மு.க. ஆட்சியின் சாதனைத் திட்டங்களை துண்டு பிரசுரமாக வழங்கி வாக்கு சேகரித்துக்கொண்டிருக்கிறார்.

Advertisment

பிரச்சாரக் களத்தில் இருந்த செ.பா.விடம் நாம் பேசியபோது, “""தலைமையில் விருப்ப மனு கொடுத்த பின் என்னுடையை பிரச்சாரத்தில் மேலும் விறுவிறுப்பு கூடும். எனக்கு எந்தத் தொகுதி என்பதை தலைவர் ஸ்டாலின்தான் முடிவு செய்வார். இந்த மாவட்டத்தில் இருக்கும் நான்கு தொகுதிகளிலும் ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் உதயசூரியனை ஜெயிக்க வைப்பதுதான் எனது லட்சியம்'' என்றார்.

-ஜீவாதங்கவேல்

கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்!

தேனி மாவட்டம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த விவசாயி கள் பலர் சின்ன மனூர் வேளாண்மை மையத்தில் நிலக்கடலை விதைப் பருப்புகளை கடந்த டிசம்பர் மாதம் வாங்கியுள்ளனர். அப்படி விதைப்பருப்பு வாங்கிய விவசாயிகளில் பொட்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியும் ஒருவர். மேற்படி விவசாயி 144 கிலோ விதைப் பருப்புகளை வாங்கி, அதை சூதானமாக உடைத்ததில் 50 கிலோ விதைகடலைப் பருப்பு கிடைத்துள்ளது. அதை விதைத்து விளைவித்து செடியைப் பிடுங்கி கடலையை மட்டும் நிறுத்தப் பார்த்த போது, 20 கிலோ பருப்பு மட்டுமே தேறியுள்ளது. மீதி 30 கிலோ பதராகிவிட்டது.

Advertisment

ssa

இதனால் வேதனையடைந்த அந்த விவ சாயி, வேளாண் அதிகாரிகளிடம் முறையிட்ட போது, “""அவ்வளவுதான் தேறும். பதராப்போன முப்பது கிலோவை பதட்டப்படாம செக்குல போட்டு ஆட்டி எண்ணெய்யா பிழிஞ்சு எடுத் துக்க''’என எக்குத்தப்பாகப் பேசியுள்ளனர்.

""இதென்னடா கொடுமை... விஞ்ஞானப் பூர்வமா பேசுறேன்னுட்டு விளக்கெண்ணெய் மாதிரி பேசுறாய்ங்க'' என்ற கடுப்புடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனி கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த அந்த விவசாயி, பதராகிப் போன கடலைப் பருப்புகளை கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே தரையில் கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டுக் கிளம்பி விட்டார்.

-சக்தி

விக்கித்துப் போன விஜயபாஸ்கர்!

ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப். 24-ஆம் தேதி, அ.தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிடுவோரிடம் விருப்ப மனு வாங்குவது ஆரம்பமாகியுள்ளது. முதல்வர் எடப்பாடியும் துணைமுதல்வர் பன்னீரும் தங்களது தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்துள்ளனர். அமைச்சர்கள் அனைவரும் அவரவர் தொகுதிகளுக்கு விருப்ப மனு கொடுத்து வருகின்றனர்.

ss

அமைச்சர்களின் தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, நகர மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகளோ, அமைச்சர்களின் பேர்களிலேயே விருப்பமனு கொடுத்து குஷிப்படுத்தி வருகின்றனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்கு விருப்பமனு கொடுத்துள்ளார். அவருடைய விசுவாசிகளும் அவருக்காக விருப்பமனு கொடுத்துள்ளனர்.

அமைச்சர் தொகுதி என்பதால் புதுக்கோட்டை மாவட்டத்திலேயே விராலிமலை தொகுதி தான் பளிச்சென இருக்கிறது. அமைச்சரும் தனது சொந்தப் பணத்தில் தீபாவளிப் பரிசு, பொங்கல் பரிசு என மக்களுக்கு அள்ளி இறைத்துள்ளார். "விராலிமலை நிச்சயம், ஜெயிப்பது லட்சியம்' என்ற நினைப்பில்தான் விஜயபாஸ்கரும் இருக்கிறார்.

அதே பிப். 24-ஆம் தேதி அதே புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியைச் சேர்ந்த நெய்வத்தளி கிராமத்தைச் சேர்ந்த வக்கீல் நெவளிநாதன் என்பவர் ஆலங்குடி தொகுதிக்கு விருப்பமனு கொடுத்ததோடு, விராலிமலைக்கும் விருப்பமனு கொடுத்ததைப் பார்த்து விக்கித்துப் போயிருக்கிறார்கள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடையை சிஷ்யர்களும். அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு புதுக்கோட்டை மாவட்ட துணைத்தலைவராகவும் இருக்கும் நெவளிநாதன், விராலிமலை விருப்பமனுவை மட்டும் தனது ஃபேஸ்புக்கில் போட்டு கூடுதல் எஃபெக்ட் கொடுத்துள்ளார்.

""அமைச்சருக்கு எதிராக மனு கொடுத்திருக்கிறீர்களே? சீட் கிடைக்குமா?'' என நெவளிநாதனிடம் கேட்டோம்.’’""இது அவருக்கு எதிரானதுன்னு சொல்ல முடியாது, என்னோட விருப்பம்னு சொல்லலாம். இந்த தொகுதி உருவானதில் இருந்து விஜயபாஸ்கருக்குத்தான் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்தத் தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் முத்தரையர்களிடையே ஒருவித அதிருப்தி இருக்கிறது. அதனால் அந்த இனத்தின் பிரதிநிதியாகத்தான் விருப்ப மனு கொடுத்திருக்கேன். அதேசமயம் தலைமை எங்கு நிற்கச் சொன்னாலும் நிற்பேன்''’என்றார்.

-பகத்சிங்