பெயருக்கு கொண்டாட்டம்! பிழைப்போ திண்டாட்டம்!
கடந்த ஜனவரியிலிருந்து லாக்டவுன் தளர்வுகள் முக்கால்வாசி அமலுக்கு வந்து மக்களின் இயல்பு வாழ்க்கையும் அவரவர் சார்ந்த தொழில்களும் சுமுகமாக நடைபெற ஆரம்பித்துவிட்டன. அதிலும் பிப்.08-ஆம் தேதியிலிருந்து பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் முழுமையாக செயல்பட ஆரம்பித்த பிறகு 2020 மார்ச் மாதத்திற்கு முன்பிருந்த நிலைக்கு தமிழகம் திரும்ப ஆரம்பித்துவிட்டது.
ஆனால் ஒரு சில தொழில்களும் அதை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் நிலையும் இன்னும் கேள்விக்குறியதாகவே இருக்கிறது. அந்த கேள்விக் குறிக்குள் சிக்கியிருப்பவர்கள்தான், நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைகளை மட்டுமே நம்பி வாழ்க்கை யை ஓட்டும் கலைஞர்கள். கடந்த 08-ஆம் தேதி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்களை வாங்கிக்கொண்டிருந்தார் ஆட்சியர் கதிரவன். அப்போது தமிழ்நாடு நாடகம், நாட்டுப்புற கலைஞர்கள் மாநில நலச் சங்கம் சார்பில் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் வந்து கலெக்டரிடம் தங்களது நிலையை விளக்கி மனு கொடுத்தனர்.
மனு கொடுத்துவிட்டு நம்மிடம் பேசும்போது,’’""இந்த பத்து மாசமா வருமானமே இல்லாம நொந்துபோய்க் கிடக்குறோம். கடனுக்குமேல் கடன்வாங்கி அதைக் கட்டமுடியாம பலபேர் தற்கொலை முயற்சியில இறங்கிவிட்டார்கள். கடந்த ஜனவரியிலிருந்து பொது நிகழ்ச்சிகள் நடத்திக் கொள்ள அனுமதி அளித்துவிட்டது அரசு. ஆனால் கிராமங்களில் நாடகம், கலைநிகழ்ச்சிகள் நடத்த போலீஸ் பெர்மிஷன் கிடைக்கமாட்டேங்குது. இந்தத் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் நாடக நடிகர்-நடிகைகள், மேடை அமைப்பாளர்கள், ஒப்பனைக் கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் என யாருக்குமே நிம்மதியில்லை. முதல்வர் எடப்பாடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளிலெல்லாம் குத்தாட்டக் கலைஞர்களின் ஆட்டம் நடக்கிறது. ஆனால் அவர்களைப் போல இருக்கும் எங்க பொழப்போ திண்டாட்டமா இருக்கு'' என்றார்கள் வேதனையுடன்.
-ஜீவா
புதுச்சேரி: ரங்கசாமியின் டெக்னிக் பேச்சு!
அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 11-ஆம் ஆண்டு விழா, புதுச்சேரியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாநிலமெங்கும் இருந்து தொண்டர்கள் திரண்டு வந்தி ருந்தனர். இதனால் உற்சாகமான கட்சியின் தலைவர் என்.ரங்கசாமி, தொண்டர்களின் வாழ்த்து கரகோஷத் திற்கிடையே கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.அதன் பின் மைக்கப் பிடித்தார்.’’""இந்த அஞ்சு வருசமா புதுச்சேரிய குட்டிச் சுவராக்கிவிட்டது நாராயணசாமி அரசு. கவர்னருடன் சண்டை போடுவதே அவருக்கு வேலையாப் போச்சு. ஐயாயிரம் இளைஞர்களுக்கு வேலை கொடுப்பேன்னு சொன்னது என்னாச்சு.
அதனால தான் சொல்றேன், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தாத் தான் வளர்ச்சி அடையும். இல்லேன்னே இப்படியே தான் இருக்கும். அதனால நான் சொல்றேன், மாநில அந்தஸ்து கிடைக்கு வரை எந்தக் கட்சியும் தேர்தலில் போட்டியிட மாட்டோம்னு முடிவு பண்ணனும். அப்பத்தான் இதற்கு விடிவு கிடைக்கும்’’ என பேசிக்கொண்டே வந்தவர், வரும் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும், ஆட்சியையும் பிடிக்கும்'' என டெக்னிக்காகப் பேசி சொந்தக் கட்சியினரையே டெரர்ராக்கினார் ரங்கசாமி. இதனிடையே முதல்வர் நாராயணசாமியும், மாநில அந்தஸ்து கிடைத்தால்தான் தேர்தலில் போட்டி என்கிற அரசியல் பார்வைக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டுள்ளார். அவருக்கும் மீண்டும் முதல்வராகும் ஆசை உள்ளது.
-சுந்தரபாண்டியன்
சம்பளம் கிடைக்கல, பிச்சையாவது போடுங்க’’
சேலம் மாநகராட்சியில் சூரமங்கல், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம் பட்டி என நான்கு மண்டலங்கள் வருகின்றன. இந்த நான்கு மண்டலங்களிலும் மொத்தம் 1050 தூய்மைப் பணியாளர்களும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தினக்கூலி அடிப்படையில் 1,500 தூய்மைப் பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். நான்கு மண்டலங்களிலும் தினசரி 500 டன் குப்பைகள் சேரும். இந்தக் குப்பைகளை சுத்தப்படுத்துவதுடன் கழிவு நீர்க்கால்வாய் அடைப்புகளையும் அந்தத் தொழிலாளர்கள் தான் சரி செய்யவேண்டும். ஒருநாள் குப்பைகளை அள்ளவில்லை என்றால் ஒட்டு மொத்த சேலமே நாறிவிடும். அப்படிப்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்குத்தான் கொண்டலாம்பட்டி, அஸ்தம்பட்டி ஆகிய இரு மண்டலங்களிலும் மூன்று மாதமாக சம்பளம் தரவில்லையாம். இதற்கு முன்பும்கூட மாதம் பொறந்தா எந்தத் தேதியில் சம்பளம் கொடுப்பார்கள் என தொழிலாளர்களுக்கே தெரியாதாம். இப்படியே ஒருமாத சம்பளத்தை பெண்டிங் வைக்கப்போக... அது இப் போது மூன்று மாதமாகிவிட்டதாம். இதனால் கொதிப்பான தூய்மைப் பணியாளர்கள், மாநகரை சுத்தப்படுத்துவதை நிறுத்திவிட்டு, கடந்த 08-ஆம் தேதி சேலம் மாநகராட்சி அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசினார் சேலம் மாவட்ட நகராட்சி, மாநக ராட்சி பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் ஜீவானந் தம்.’’"" மூணுமாச சம்பளப் பிரச்சனை மட்டுமல்ல, கடந்த அஞ்சு வருசமா தூய்மைப் பணியாளர் களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பி.எஃப். பணத்தையும் கட்டவில்லை நிர்வாகம். அதேபோல் கூட்டுறவு சங்கங்களில் கடன் வாங்கிய தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையையும் கட்டாததால் வட்டி, அபராத வட்டி என நொந்து சாகிறார்கள். இந்த முறைகேடுகளையும் சரி செய்யாவிட்டால், நான்கு மண்டலங்களிலும் குப்பைகளை அள்ளமாட்டோம்''’என்றார் கொதிப்புடன்.
-இளையராஜா