15 ஆயிரம் குடும்பங்களை நிர்க்கதியாக்கும் அரசு!
இலங்கை-இந்திய ஒப்பந்தப்படி, இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்த 40 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ்த் தொழிலாளிகள், தமிழகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள்.
இவர்களுக்காக நீலகிரி மாவட்டம் குன்னூர், கூடலூர், வால்பாறை பகுதிகளில் வனத்துறையிடமிருந்து பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு வாங்கி, தேயிலைத் தோட்டங்களை உருவாக்கி, "டேன் தேயிலைத் தொழிற்சாலை'யையும் கிளைகளையும் உருவாக்கி சுமார் 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தார் அன்றைய தமிழக முதலமைச்சர் கலைஞர்.
அந்த "டேன் தேயிலைத் தொழிற்சாலைகளை' ஒவ்வொன்றாக இப்போது மூடிக்கொண்டிருக்கிறது தமிழக அரசு. இதுவரை சுமார் 15 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். 7 ஆயிரம் பேர்தான் இப்போது வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்களும் வெகுவிரைவில் வேலையை இழக்கப்போகிறார்கள்.
""நீலகிரி எம்.பி., அ.தி.மு.க. கோபாலகிருஷ்ணனும், கூடலூர் எம்.எல்.ஏ. தி.மு.க. திராவிடமணியும் எங்களை ஏறெடுத்துக்கூட பார்க்கவில்லை. "நம்மை இரண்டாவது முறையும் வெற்றிபெற வைத்தவர்கள் இவர்கள்தானே... இன்றைக்கு எந்த வசதியுமின்றி, வேலையுமின்றி தவிக்கிறார்களே... தற்கொலையை நோக்கித் தள்ளப்பட்டிருக்கிறார்களே...' என்று எம்.பி.யும் எம்.எல்.ஏ.வும் கவலைப்படவில்லையே'' கண்ணீர் வடிக்கிறார்கள் இந்த மக்கள்.
ஏ.ஐ.டி.யூ.சி.யின் பாலகிருஷ்ணன் நம்மிடம், ""தாயகம் திரும்பிய இந்த மக்களுக்கு வீடு கட்டிக் கொடுங்கள் என்று கோரிக்கை வைத்து, அதற்காக நீதிமன்றத்தை நாடியிருக்கும் நிலையில்... மிக மோசமான பிரச்சினைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள் டேன் டீ தொழிற்சாலை அதிகாரிகள்'' வேதனையைக் கொட்டினார்.
""கடைசி முயற்சியாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவிடம்தான் போகவேண்டும். அவருக்குத்தான் எங்கள் நிலைமை புரியும்'' என்றார்கள் போராட்டத்திற்குத் தயாராகிக்கொண்டிருக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள்.
-அருள்குமார்
900 குடும்பங்களுக்கு பால் வார்த்த தி.மு.க!
ஏழு ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பலன் கிடைத்திருக்கிறது, சென்னை -மந்தைவெளி ஆண்டிமான்யத் தோட்ட ஏழை மக்களுக்கு.
மந்தைவெளி பஸ் ஸ்டாண்ட்டுக்கு அருகிலுள்ளது ஆண்டிமான்யத் தோட்டம். இங்கு வசிக்கும் சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கான ரேஷன்கடை மூன்று கி.மீ. தொலைவில், முண்டகக் கண்ணி அம்மன் கோயில் ஏரியாவில் இருந்தது.
""2011-ஆம் ஆண்டிலிருந்து இந்த ரேஷன்கடையை (டி.யூ.சி.எஸ். ஐ.சி. 003) முண்டகக் கண்ணியம்மன் கோயில்ல இருந்து மந்தைவெளிக்கு கொண்டுவந்துடணும்னு ரொம்ப போராடினோம். தி.மு.க. வட்டச் செயலாளர் கண்ணன் இதுக்காக முன்னால நின்று போராடினாரு. ஒருவழியா இப்ப கொண்டுவந்துவிட்டார் கண்ணன்'' பெருமை பொங்கச் சொன்னார் இந்தப் பகுதியைச் சேர்ந்த சுப்பம்மாள்.
""தி.மு.க. நிர்வாகிகள் இதில் தலையிட்டிருக்கிறார்கள் என்பதற்காகவே இந்த ரேஷன்கடையை மாற்றிக்கொண்டு வருவதற்கு அ.தி.மு.க.வினரும் அதிகாரிகளும் முட்டுக்கட்டை போட்டார்கள். 900 குடும்பங்கள் அரிசிக்காக, சீனிக்காக, 3 கிலோமீட்டர் நடக்கிறார்களே என்ற எண்ணமே அதிகாரிகளுக்கு வரவில்லை. 3 கி.மீ. நடந்துபோனால் அது இல்லை, இது இல்லை தீர்ந்துபோச்சு என்றுதான் சொன்னார்கள். இவ்வளவு பெரிய சென்னையில் இப்படியொரு சிரமமென்றால், கிராமங்களில் எப்படியிருக்கும்?'' என்றார் நாகராஜ் என்பவர்.
தி.மு.க. வ.செ. கண்ணன் நம்மிடம், ""அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜலட்சுமியும், இந்நாள் எம்.எல்.ஏ. நடராஜும்தான் இத்தனை வருஷமா, ரேஷன்கடை இங்கே வரவிடாமல் செய்தார்கள். இதை நான் சொல்லலை... உணவுத்துறை அதிகாரி ஒருவர் என்னிடம் "எப்போதோ வந்திருக்க வேண்டியது, தடையாக இருந்தது ஆளும்கட்சிதான்'னு சொன்னார். அ.தி.மு.க.வின் ஆட்சி லட்சணம் இவ்வளவுதான் என்பதை மக்கள் அறிவார்கள்'' என்றார்.
-அருண்பாண்டியன்
தமிழக குடும்பத்தின் அரேபிய பரிதவிப்பு!
சவுதி அரேபியாவில் அரைசியா ரோடு சுக்குவான்சூக்கு என்ற கம்பெனியில் பணியாற்றிய பூவனூர் செந்தில்வேல், போனமாதம் மகள் காதுகுத்து விழாவுக்கு வந்துவிட்டுப் போனார். போனவர்தான்... போய் ஒருமாதமாகியும் அவரிடமிருந்து போன் வரவில்லை.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகிலுள்ள பெ.பூவனூர் ராமலிங்கம் -ஜெகஜோதி தம்பதியின் மகன்தான் செந்தில்வேல்.
மணமாகி எட்டு ஆண்டுகள் ஆயின. மனைவி கனகா, மகன் சுதீத்தின் வயது 5.
""காது குத்தி மொட்டை போட்டுட்டுப் போனான். போன் பண்ணலை. அடிக்கடி போன் பண்றவன், பண்ணலைனா...? நாங்கள் போட்டோம். ஸ்விட்ச் ஆப் ஸ்விட்ச் ஆப்னே வந்தது. ஒருவாரம் கழிச்சு வீரபாண்டியனுக்கு போன் போட்டோம். வீரபாண்டியன் எங்க ஊர்க்காரர் மஸ்கட்ல இருக்கிறார். என் மகன் செந்தில்வேலும் வீரபாண்டியனும் அடிக்கடி வீடியோகால்ல பேசிக்கொள்வார்கள். அதான் அவனுக்குப் போன் போட்டு விஷயத்தைச் சொன்னோம். அவன் விசாரிச்சிட்டு "செந்தில்வேல் இறந்துட்டான்'னு அந்த ஏரியா போலீஸ்ல சொன்னாங்க. வெள்ளைத்துணி சுத்தின "பாடி'யை காட்டினதாகவும் சொன்னான். என் மகன் எப்படிச் செத்தான்னுகூட தெரிஞ்சுக்க முடியலையங்க'' கதறினார் செந்தில்வேலின் தந்தை ராமலிங்கம்.
கடந்த மாதம் 24-8-18 அன்று கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறது இந்த பரிதாபமான ஏழைக்குடும்பம். ஆட்சியர் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தாராம். அப்புறம்...? பாழுங்கிணற்றில் போட்ட கல்லாகிவிட்டது அந்த மனு.
""அவரை நம்பித்தான் நானும் என் 5 வயசு மகனும் மாமன்-மாமியாரும் இருக்கிறோம்...'' மேற்கொண்டு பேசமுடியாமல் தத்தளித்தார் செந்தில்வேலின் மனைவி கனகா.
ஏழைகள் என்றால் இந்திய அரசும் கண்களை மூடிக்கொண்டுவிடுகிறதே!
-எஸ்.பி.சேகர்