தொகை சிறியது! பட்டியல் பெரியது!
இப்போதெல்லாம் அரசு அலுவலகங்களில், போலீஸ் ஸ்டேஷன்களில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி ரெய்டு தினம் தோறும் நடக்க ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக லஞ்சம் கரைபுரைண்டோடும் பத்திரப்பதிவு அலுவலகங்கள், போக்குவரத்து ஆர்.டி.ஓ.அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், மருத்துவக் கல்வித்துறை அலுவலகங்கள் ஆகியவற்றில் ரெய்டு நடத்தி கட்டிங் கலெக்ஷனை அள்ளுகிறது லஞ்ச ஒழிப்புத்துறை. கடந்த வாரம் சிவகங்கையில் மருத்துவக் கல்வி இணை இயக்குனர் அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வருகிறார்கள் என்றதும் கலெக்ஷன் பணத்தை சாக்கடையில் வீசிவிட்டு ஓடினார் அலுவலக உதவியாளர்.
அந்த வரிசையில் ஓசூர் வட்டார போக்குவரத்து அலுலகத்தில் எந்த வேலை நடக்க வேண்டுமானாலும் புரோக்கர்கள் மூலம் தான் நடக்குது. ஆர்.டி.ஓ.ஈஸ்வரமூர்த்தி, வாகன ஆய்வாளர்கள் தரணிதரன், விஜய்குமார் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். காசு கொடுத்து கொடுத்து நொந்து போகிறார்கள் மக்கள் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் குவிந்தன.
இதையடுத்து கடந்த 25-ஆம் தேதி காலை கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.கிருஷ்ணராஜன், இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான விஜிலென்ஸ் படை ஓசூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் புகுந்தது. இரவு 9 மணிவரை நடந்த இந்த ரெய்டில் கணக்கில் காட்ட முடியாத 1 லட்சத்து 51 ஆயிரத்தைக் கைப்பற்றினார்கள். ஆனால் யாரும் சிக்கவில்லை. கைப்பற்றப்பட்ட தொகை சிறியது என்றாலும் மாதம் தோறும் யார்யாருக்கு எவ்வளவு போகிறது என்ற பெரிய பட்டியலைப் பார்த்து அரண்டு போய்விட்டார்கள் லஞ்ச ஒழிப்பு போலீசார்.
-இளையராஜா
அவமானக் கொலையாளிகள்!
திருச்சி திருவானைக்கோவில் ஏரியாவில் குணசேகரன் என்பவரும் அவரது மனைவியும் கறிக்கடை நடத்தி வருகின்றனர். பணம் கொடுத்து ஆடு வாங்கி கறி போட்டு விற்றால் கட்டுபடியாகாது என்பதால், அதே ஏரியாவில் ஆட்டோ ஓட்டும் முருகன் என்பவரின் ஆடு ஒன்றை ஆட்டையைப் போட்டுள்ளனர். ஆடு திருட்டு சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு குணசேகரன், பரமேஸ்வரி ஆகியோர் மீது ஸ்ரீரங்கம் போலீஸில் கம்ப்ளெய்ண்ட் கொடுத்துள்ளார் முருகன்.
இதனால் குணசேகரனையும் பரமேஸ்வரியையும் ஸ்டேஷனுக்கு வரவழைத்து போலீசார் விசாரித்துள்ளனர். ஸ்டேஷன் படியேற வச்சுட்டானே முருகன் என்ற கோபத்தில் தனது மகளான வக்கீல் முத்துலட்சுமி, மகன் மணிகண்டன் ஆகியோரை வெளியூரிலிருந்து வரவழைத்து முருகனை போட்டுத்தள்ள திட்டம் போட்டுள்ளார் பரமேஸ்வரி.
மணிகண்டனின் கூட்டாளிகளான அருண்குமார், ஹரிகரன், செல்வக்குமார், ராஜேஷ், கண்ணன், நரேஷ் (எல்லோருக்கும் வயது 17தான்) ஆகியோர் கொண்ட டீம் கடந்த 26-ஆம் தேதி முருகன் வீட்டிற்கே சென்று வெளியே இழுத்து வந்து வெட்டிக் கொலை செய்தனர். மணிகண்டனின் கூட்டாளிகளை கூண்டோடு வளைத்த திருச்சி போலீஸ் கோவையில் பதுங்கியிருந்த பரமேஸ்வரியையும் அவரது மகள் முத்துலட்சுமியையும் கைது செய்தனர்.
இந்தக் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த முத்துலட்சுமி மீது நடவடிக்கை எடுத்துள்ளது திருச்சி வழக்கறிஞர்கள் சங்கம்.
-மகேஷ்
போலீசிடமே தீபாவளி மாமூல்!
""சார்... நாங்க பொள்ளாச்சியில இருக்கற ஒரு போலீஸ் ஸ்டேசன்ல இருந்து பேசறோம் சார். எங்க ஆளுகதான் தீபாவளி வசூல்னு எல்லாப் பக்கமும் எக்ஸ்ட்ரா ரெண்டு கைய முளைக்க வச்சு கல்லா கட்டுவாங்க. ஆனா எங்ககிட்டயே மீடியாவுல இருக்கற ஒருத்தன் தீபாவளிய கொண்டாடிட்டுப் போயிட்டான் சார்'' என்றனர்.
""பொள்ளாச்சி நகர காவல்நிலையம், வடக்கிப்பாளையம் காவல்நிலையம், நெகமம் காவல்நிலையம், கிணத்துக்கடவு காவல்நிலையம், ஆனைமலை காவல்நிலையம், பொள்ளாச்சி டிஎஸ்பி ஆபிஸ், ஆனைமலையில் உள்ள வால்பாறை டி.எஸ்.பி. ஆபீஸ்...னு வாடகைக் கார்ல இங்கெல்லாம் போயி பணம், பட்டாசு, ஸ்வீட் பாக்ஸ்னு அள்ளிட்டான் சார். அவன் பேரு நடேசன்... இந்த ஊரு பேரை தன் பேரோடு வச்சு இருக்கற அந்த அரசியல்வாதிக்கு வேண்டப்பட்டவரு. தீபாவளிக்கு மட்டுமில்ல, மாத மாமூல் தரும் ஸ்டேஷன்களும் இருக்குது'' என்றது அந்தக் குரல். "இந்தப் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களிலும் செம வசூல்வேட்டை' என அலுவலர்கள் -ஆளுங்கட்சி பிரமுகர்களும் சொல்கிறார்கள்.
அட... யாருப்பா அந்த நடேசன்?
""செய்தி வெளியிடுவதைவிட, அந்த அரசியல்வாதியைப் பற்றி செய்தி வராதபடி செய்கின்ற லோக்கல் மீடியா புள்ளி'' என்கிறார்கள் சக பத்திரிகையாளர்கள். மீறினால், சம்பந்தப்பட்ட நிருபரின் அலுவலகத்திற்கு போன்செய்து வேலைக்கு வேட்டு வைத்துவிடுவாராம். சம்பந்தப்பட்ட நடேசனைத் தொடர்புகொண்டோம். ""சார்... அத்தனையும் பொய் சார். மாத மாமூல் தர்றாங்களான்னு ஸ்டேஷன்லேயே விசாரிச்சுக்குங்க'' என்றார். மாத மாமூலை ஒப்புக்கொள்கிறார்கள் சம்பந்தப்பட்ட கிணத்துக்கடவு ஸ்டேஷனில். ஆனாலும், மறுக்கிறார் நடேசன்.
-அ.அருள்குமார்