கடத்திய மா.செ.வும் மந்திரியும்!
தூத்துக்குடியின் மேலூர் கூட்டுறவு வங்கியின் உறுப்பினர் தேர்தல், இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டு மூன்றாவது முறையாக 20-09-18 அன்று நடந்தது.
திருவைகுண்டம் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. சண்முகநாதன் நிறுத்தி... செலவும் செய்த அவரது அணியினர் ந.செ. ஏசாதுரை, மாநிலப் பேச்சாளர் எஸ்.டி.சருணாநிதி உள்ளிட்ட ஆறுபேர் உறுப்பினர்களாக வெற்றிபெற்றனர். ந.செ. ஏசாதுரை தலைவராகும் வாய்ப்பு பிரகாசமாய் இருந்தது. இந்த நிலையில்தான் உறுப்பினர்கள் அன்புலிங்கம், சந்தனராஜ், பாலசுப்பிரமணியன், வேல்முருகன் நான்குபேரும் கடத்தப்பட்டிருக்கிறார்கள்.
""சண்முகநாதன் அணியைச் சேர்ந்த ஏசாதுரை தலைவராகிவிடக்கூடாது என்பதற்காக எங்கள் மா.செ. செல்லப்பாண்டியன் மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜுவின் ஆதரவாளர்கள்தான் அ.தி.மு.க. உறுப்பினர்கள் நான்குபேரை கடத்திக் கொண்டுபோய், குற்றாலத்தில் உள்ள மா.செ. செல்லப்பாண்டியன் வீட்டில் அடைத்து வைத்திருக்கிறார்கள்'' என்கிறார்கள் தூத்துக்குடி அ.தி.மு.க.வினர்.
எம்.எல்.ஏ. சண்முகநாதனோ, ""குமரி மாவட்டத்தில் அ.தி.மு.க.வை சீரழித்த தளவாய்சுந்தரம், இப்ப இங்கே வந்து... மா.செ. செல்லப்பாண்டியனோடும், அமைச்சர் கடம்பூர் ராஜுவோடும் சேர்ந்துகொண்டு கட்சியைக் கெடுக்கிறார்'' என்று அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் பொங்கித் தீர்த்தாராம்.
-பரமசிவன்
அதிகாரிகள் அலட்சியம்! மூன்று பெண்கள் பலி!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றின் ஒரு கரையில் அரியப்பம்பாளையமும் எதிர்கரையில் ஆலத்துக் கோம்பை கிராமமும் உள்ளன. ஆலத்துக்கோம்பை விவசாயக் கூலிகள் தினமும் வேலைக்காக அரியப்பம்பாளையம் செல்வார்கள்.
ஆற்றில் தண்ணீர்வரத்து அதிகமாக இருந்தால் மட்டும் பரிசலில் செல்வார்கள். ஆற்றில் தண்ணீர் குறைவாகவே செல்லும்... ஆகவே நடந்தே ஆற்றைக் கடந்து அக்கரை செல்வார்கள். 19-09-18 அன்று காலையில் வழக்கம்போல நடந்துதான் ஆற்றைக் கடந்து அரியப்பம்பாளையம் சென்றார்கள்.
நடுகைப் பணி முடிந்து மாலை 5 மணிக்கு 13 பெண்கள் திரும்பினர். வழக்கம்போல ஆற்றில் இறங்கினர். ஆற்றின் நடுவே வந்தபோது, வெள்ளம் அதிகரிப்பதையும், இழுப்பதையும் தெரிந்துகொண்டார்கள். வேறு வழியில்லை... வேகமாகக் கடக்க முயன்றார்கள். அதற்குள் வெள்ளம் கழுத்தளவு வந்தது. பெண்களைப் புரட்டிப் போட்டு இழுத்துச் சென்றது.
நீச்சல் தெரிந்தவர்கள் வேகமாக நீந்தி கரை சேர்ந்தார்கள். ரஜினி என்ற விவசாயி, தத்தளித்த சில பெண்களைக் காப்பாற்றினார். சரசாள், பெரியமணி, வசந்தா மூவரையும் பவானி ஆற்று வெள்ளம் பலி கொண்டுவிட்டது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பதாக இருந்தால், இரண்டு நாட்களுக்கு முன்பே அறிவிப்பார்கள். ஆனால் 19-09-18 அன்று எந்த அறிவிப்பும் இன்றி திறந்துவிட்டிருக்கிறார்கள் ஆயிரம் கனஅடி தண்ணீரை.
அதிகாரிகளின் அலட்சியம் சரசாள், பெரியமணி, வசந்தா ஆகிய மூன்று விவசாயக் கூலிப் பெண்களின் உயிரைப் பறித்துவிட்டது.
-ஜீவாதங்கவேல்
தம்பிதுரையைத் தடுத்த கிராமத்துக்காரர்!
மக்களவைத் துணைசபாநாயகர் தம்பிதுரை, திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி மற்றும் பல துறை அதிகாரிகளுடன் வையம்பட்டி ஒன்றியத்தில் உள்ள சில கிராமங்களுக்குச் சென்றார்.
சின்னமலைப்பட்டிக்குள் தம்பிதுரை நுழைந்தபோது, அக்கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி, கைகளைக் குவித்து வணங்கி, ""உங்களைக் கும்பிட்டுக் கேட்டுக்கிறேன். இங்கே நடக்கப் பாதைகூட கிடையாது... திரும்பிப் போயிடுங்க'' வழிமறித்தார்.
""வராதே போனு சொன்னா எப்படிய்யா? உன் கோரிக்கை என்ன சொல்லு? கலெக்டரும் அதிகாரிகளும் வந்திருக்காங்க. உன் ஊருக்கு ஒண்ணும் செய்யவில்லையா? 85 லட்சத்துக்கு செஞ்சிருக்கேன் தெரியுமா?'' எரிச்சலோடு கேட்டார்.
""இருக்கட்டும்... ஆனா நடக்க ரோடு இல்லியே... தெருவுக்குள்ள தண்ணி வருதே... அதுக்கென்ன சொல்றீங்க?'' திருப்பிக் கேட்டார் கிராமத்து பழனிச்சாமி.
""யோவ்! நாங்க உன்கிட்ட ஓட்டுக் கேட்டு வரலை. உன் பிரச்சினையைக் கலெக்டர்கிட்ட சொல்லு, சரி செய்வார்'' என்றார் தம்பிதுரை.
""எத்தனை முறை பெட்டிஷன் கொடுக்கிறது?'' சலித்தபடி பழனிச்சாமியை இழுத்துச் சென்றார் ஒரு இளைஞர்.
-ஜெ.டி.ஆர்.