Skip to main content

சிக்னல்!

கிடைக்காது; ஆனால் கிடைக்கும்!

signal

"போக்கத்தவன்தான் போலீஸ் வேலைக்குப் போவான்' என்று கிராமங்களில் உப கதை சொல்வதுண்டு. "போக்கத்தவன்' என்றால் "போவதற்கு எந்த இடமும் இல்லாதவன்' என்பது பொருள்.

இந்தியாவில் விவசாயிகளுக்கு இணையாகத் தற்கொலை செய்துகொள்பவர்கள் போலீஸ்காரர்கள்தான். அமைச்சர்களுக்காக ஏழுமணி, எட்டுமணி நேரம் ரோடு காப்பதில் இருந்து போராட்டக்காரர்களிடம் அடிவாங்குவது வரை; அரசாங்கத்திற்கு கப்பம் வசூலிப்பதிலிருந்து அதிகாரிகள் வீடுகளுக்கு காய்கறி வாங்கி, நாய் குளிப்பாட்டுவது வரை அடையும் அவமானத்திற்கும் டார்ச்சருக்கும் அளவே இல்லை. அவர்கள் வாங்கி வந்த வரம் அப்படி.

தமிழகத்தில் போலீஸ்காரர்களோ, உதவி ஆய்வாளர்களோ இறந்தால் ஒருலட்ச ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டு வந்தது. கொள்ளையர்களால், கொலைகாரர்களால் உயிர்போனால் கொஞ்சம் கூடுதல் தொகை சிறப்பு நிதியாக கிடைத்தது.

"இனிமேல் பணிக்காலத்தில் விபத்து ஏற்பட்டு இறந்தாலும், உடல்நலக் குறைவால் மரணம் ஏற்பட்டாலும் போலீசார் குடும்பத்துக்கு நிவாரண நிதி கிடையாது' என்று காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட எஸ்.பி. அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

""பேரிடரில் சாகும் சாதாரண பிரஜைகளுக்கு 4 லட்சம் கொடுக்கிறாங்க. கடலில் மீனவர் இறந்தால் 10 லட்சம் கொடுக்கிறாங்க. கட்டாயம் கொடுக்கட்டும், கொடுக்க வேண்டும்தான், ஆனால் போலீஸ்காரங்க செத்தால் கொடுத்த ஒரு லட்சத்தையும் நிப்பாட்டலாமா? போலீஸ்காரன் போக்கத்தவன், எதிர்த்துக் கேட்க நாதியத்தவன் என்பதால்தானே இப்படியெல்லாம் செய்கிறார்கள்?'' என்று புழுங்கிக்கொண்டிருக்கிறார்கள் போலீஸ்காரர்கள்.

இதற்கிடையில் 29-04-18 அன்று இரவு, கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி, ""போலீஸார் நிவாரணநிதி தொடரும்'' என்றார்.

அறிக்கையை நம்புவதா? முதலமைச்சரின் பேச்சை நம்புவதா? அல்லது இரண்டுக்கும் சம்பந்தமில்லையோ?

-நாகேந்திரன்

யாருக்காக இது யாருக்காக?

signal

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பேருந்துநிலையம் ரொம்பப் பழையது. ரொம்ப சிறியது. மூன்று பேருந்துகள் மட்டுமே நிற்க முடியும்.

""தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துபோகும் பஸ் நிலையம் நெருக்கடியாக, எந்த வசதியும் இல்லாமல் இருக்கலாமா? பேருந்துநிலையத்தை ஒட்டியுள்ள காவல்நிலையத்தை அல்லது காவலர் குடியிருப்பை அல்லது வட்டாட்சியர் அலுவலகத்தை இடித்துவிட்டு, புதிய பேருந்து நிலையம் அமைத்துத் தாருங்கள் என்று பலமுறை நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றினோம். அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. தற்போதைய மாவட்ட ஆட்சியர் ராமனிடம் முறையிட்டோம்.

காவல்நிலையம் உள்ள இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்புங்கள்'' என்று நகரசபை அதிகாரிகளிடம் சொன்னார் ஆட்சியர். ஆட்சியர் கேட்டுக்கொண்டபடி அதிகாரிகளும் செய்தார்கள். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை இப்போது பேரணாம்பட்டு நகரத்தில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள சாத்கர் கிராமத்தில் பேருந்து நிலையம் அமைக்கிறார்கள். அங்கிருந்து 100 ரூபாய் கொடுத்துத்தான் ஆட்டோவில் இங்கே வரவேண்டியிருக்கும்'' என்கிறார் பேருந்துநிலைய மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் காங்கிரஸ் ந.செ. சுரேஷ்குமார்.

மீட்புக்குழு இணை ஒருங்கிணைப்பாளர் தி.மு.க. ராஜேந்திரபிரசாத், பா.ஜ.க. ந.செ. கோவிந்தராஜ் பி.எஸ்.பி. தலித் பாஸ்கரன் வணிகர் சங்கம் அகமத் ஆகியோர் நம்மிடம், ""இப்போது பேருந்துநிலையம் அமைக்கின்ற இடத்திற்கு அருகில் அமைச்சர் வீரமணி தனக்கு வேண்டியவர்கள் பெயரில் நிலங்களை வாங்கிவைத்துள்ளார். பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள எட்டு ஏக்கர் நிலத்தை பாபு ரோணக், சரண்குமார் ஆகியோரிடம் இருந்து அமைச்சரின் ஆட்கள் கிரயம் வாங்கி, ஒரு ஏக்கரை பேருந்து நிலையத்திற்காக இலவசமாகக் கொடுத்துவிட்டு, மீதி ஏழு ஏக்கரை பிளாட் போட்டு விற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள். சதுர அடி 150 ரூபாய் விற்ற இடம், இப்போது 2500 ரூபாய்'' என்றார்கள்.

-து.ராஜா

மா.செ. வீட்டில் அடிதடி!

signal

விழுப்புரம் தெற்கு அ.தி.மு.க. மா.செ.யான குமரகுருவை சந்திப்பதற்காக முன்னாள் மா.செ. தண்டபாணி, ஒ.செ.அருணகிரி, எம்.ஜி.ஆர். இளைஞர் சண்முகம் ஆகியோர் ஒன்றிய நிர்வாகிகளோடு 26-04-18 அன்று வந்தனர். அவர்கள் கையில் ரிஷிவந்தியம் ஒன்றிய கூட்டுறவு சங்கத் தலைவர் இயக்குநர்களுக்கான தேர்வுப்பட்டியல் இருந்தது.

மா.செ.யிடம் பேசிக்கொண்டிருந்தபோது, எம்.ஜி.ஆர். இளைஞரணி சண்முகம் ஏதோ சொன்னார். உடனே முன்னாள் மா.செ. தண்டபாணி, ""இந்தப் பட்டியலில் உள்ள சில பெயர்களை மாற்றியாக வேண்டும்'' என்றார். வீட்டிற்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியபோது குறுக்கிட்ட மா.செ. குமரகுரு, ""உங்க வாய்ச்சண்டையை வெளியில் வச்சுக்கிங்க... போங்க'' அனைவரையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார்.

வெளியே வந்ததும், வாய்ச்சண்டை அடிதடி குத்தாக மாறியது. சட்டை கிழிந்த எம்.ஜி.ஆர். இளைஞரணி சண்முகம் ""சாதியைச் சொல்லி அடிக்கிறாங்க'' என்றபடி மா.செ. வீட்டிற்குள் ஓடினார்.

சண்முகத்தை சமாதானப்படுத்தி, மாற்றுச் சட்டை ஒன்றையும் கொடுத்து, ""தண்டபாணியைக் கண்டிக்கிறேன்'' என்று அனுப்பிவைத்தார்.

நான்கு நாட்கள் ஆகியும் கூப்பிட்டு விசாரிக்கவில்லை. உளுந்தூர்பேடடை காவல்நிலையத்தில் "மேற்படி மூவர் மீதும் தீண்டாமை ஒழிப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று புகார் கொடுத்தார் சண்முகம். ஆனால் காவல்நிலையத்திலும் அலையவிடுகிறார்கள்.

""காவல்நிலையத்திற்கு ஐந்து நாட்கள் அலையவிட்டார்கள். அதனால்தான் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாரிடம் நேரில் புகார் கொடுத்திருக்கிறேன். நான் ராணுவத்தில் இருந்தவன். சும்மா விடமாட்டேன்'' என்கிறார் சண்முகம்.

இந்நிகழ்வு பற்றி உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் சாகுல்அமீதிடம் கேட்டோம்..

""விசாரணை செய்துகொண்டிருக்கிறோம். இரண்டு தரப்பையும் வரச்சொல்லியிருக்கிறோம்'' என்றார் அவர்.

முன்னாள் மா.செ. தண்டபாணியோ, நேரில் சந்திக்கவும், போனில் பேசவும் மறுக்கிறார்.

-எஸ்.பி.சேகர்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்