அனைவரையும் கலங்க வைத்த டீச்சரம்மா!
அருப்புக்கோட்டை அருகே மல்லாங்கிணறு கிராமத்தில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு- தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரின் தாயார் ராஜாமணியின் மறைவு கட்சி கடந்த சோகத்தை ஏற்படுத்திவிட்டது. டீச்சரம்மா என்பதுதான் அவருக்கான அடைமொழி. மறைந்த முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மனைவியான ராஜாமணி அம்மாள் நேரடியாக கட்சிப்பணியில் ஈடுபடாவிட்டாலும் தனது கணவர் மற்றும் பிள்ளைகளின் அரசியல் வளர்ச்சிக்குத் துணை நின்றவர். உடல்நலக்குறைவால் அவர் இறந்த நிலையில், பலரிடமும் சோகம் படர்ந்ததை சமூக வலைத்தளங்களில் காண முடிந்தது.
அண்மைக்காலமாக எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருக்கும் மு.க.அழகிரி தன் குடும்பத்துடன் மல்லாங்கிணறுக்கு வந்து ராஜாமணி தங்கபாண்டியனின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி, தங்கம் தென்னரசு மற்றும் தமிழச்சி தங்கப்பாண்டியன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். நீண்ட இரங்கல் அறிக்கையை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட நிலையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
கொரோனா அச்சம் முழுமையாக விலகாத நிலையிலும் மூத்த நிர்வாகிகள் பலர் ராஜாமணி தங்கபாண்டியனுக்கு அஞ்சலி செலுத்தினர். விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தொடங்கி அ.தி.மு.க. எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து தங்கள் இரங்கலைத் தெரிவித்தனர். நமது நக்கீரன் ஆசிரியர் தனது அஞ்சலியை செலுத்தி தங்கம் தென்னரசுக்கும் தமிழச்சிக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
கணவர் தங்கபாண்டியன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு அருகிலேயே ராஜாமணி அம்மாளின் உடல் அடக்கம் செய்யப்பட, இறுதி நிகழ்வின்போது அம்மாவின் உடல் மீது தங்கம் தென்னரசு விழுந்து கதறியதும், தமிழச்சி ஆறுதல்படுத்தியதும் அனைவரையும் கலங்க வைத்துவிட்டது.
-ராம்கி
காய்கறி மூட்டைக்குள் போதை பாக்கு!
தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுதாகர், ரவிச்சந்திரன் ஆகியோர் அக்டோபர் 4 அன்று நெல்லிக்குப்பம் அருகே காராமணிக்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடலூரில் இருந்து வேகமாக வந்த சரக்கு வாகனம் நிற்காமல் சென்றதால் சந்தேகமடைந்த போலீசார் வாகனத்தைத் துரத்திச் சென்று கீழ்ப்பட்டாம்பாக்கத்தில் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது ஓட்டுநர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதையடுத்து சந்தேக மடைந்த தனிப் பிரிவு காவலர்கள் வாகனத்தை சோதனை செய்தனர். அதில் காய்கறி மூட்டைகளுடன் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் 10 மூட்டைகள் மற்றும் 30 டிரேடுகளில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. வாகனத்தை பறிமுதல் செய்து நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தியதில் வாகனத்தை ஓட்டி வந்தது நெல்லிக்குப்பம் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த 43 வயது சரவணகுமார் என்பதும் உடன் வந்தவர் 28 வயது முகமது ஷெரீப் என்பதும் தெரியவர, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். அவர்கள் கடத்தி வந்த 10 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் போதை பாக்குகளையும் வாகனத்துடன் பறிமுதல் இந்தப் போதை பொருட்கள் எங்கிருந்து, யாரிடம் இருந்து வாங்கிக் கொண்டு வரப்படுகிறது? எங்கு கொண்டு செல்கிறார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சூனா.பானா
பதவிப் போட்டியில் ரசிகர் மன்றத் தலைவர் படுகொலை!
இரவு 11 மணியளவில் டூவீலரில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார் புதுச்சேரி மாநில விஜய்சேதுபதி ரசிகர் மன்றத் தலைவர் மணிகண்டன். நெல்லித்தோப்பு மார்க்கெட் எதிரே பின் தொடர்ந்து வந்த 3 பேர் மணிகண்டனை வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உருளையன்பேட்டை போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மணிகண்டனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் மணிகண்டன் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மணிகண்டனை கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்ம கும்பலை தேடத் தொடங்கியது புதுச்சேரி போலீஸ்.
மணிகண்டன், நடிகர் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவராக இருந்து வந்த நிலையில், அவரது உறவினரான ஆட்டுப்பட்டியை சார்ந்த ராஜசேகர் என் பவர் செயலாள ராக இருந்து தற்போது தனியாக செயல்பட்டு வருகின்றார். மணி கண்டன் தலைமையிலான மன்றத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனித்து செயல்படும் ராஜசேகர் மன்றத்திற்கு அனுமதி இல்லை என்று சொல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளதாகவும் கூறப்படும் நிலையில், சம்பவ நாளன்று இருவரும் நண்பர்கள் மூலம் சமாதானம் பேசியுள்ளனர். இதில் ராஜசேகர் தலைவர் பதவியை கேட்டதாகவும், அதற்கு மணிகண்டன் ஒத்துக்கொள்ளாமல் அவர்களை மிரட்டிவிட்டு சென்றுள்ளதாகவும் நண்பர்கள் தரப்பில் சொல்கிறார்கள். இதனாலேயே மணிகண்டனை ராஜசேகர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டிக்கொலை செய்யப்பட்டிருப்பதாக புதுவை போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. ராஜசேகர் உள்ளிட்ட மூவரைப் பிடிப்பதில் வேகம் காட்டியது போலீஸ். புதுச்சேரியில் அண்மைக்காலமாக பழிக்குப்பழியாக நிறைய மர்மக் கொலைகள் அரங்கேறுகின்றன.
-சுந்தரபாண்டியன்