அதிகாரிக்கு பாதி; பயனாளிக்கு பாதி!

signal

வறுமைக் கோட்டுக்குக் கீழேயுள்ள மக்களுக்கு இலவச வீடு கட்டித்தரும் "மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டம்' இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது தொடங்கப்பட்டது.

இதற்கு, கட்டுமானச் செலவு ஒரு லட்சத்து 80 ஆயிரத்துடன் சோலார் மின் அமைப்பிற்காக 30 ஆயிரமும் தரப்படுகிறது. அந்தந்த யூனியன்களின் திட்ட வளர்ச்சி அதிகாரிகளின் வழியாக, ஊராட்சிகள் பயனாளிகளைத் தேர்வு செய்கின்றன. ஆனால் பல ஊராட்சிகள் வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ள மக்களுக்குத்தான் வீடு என்பதை தாராளமாகப் புறக்கணித்துவிடுகின்றன.

Advertisment

நெல்லை மாவட்டம் குருவிக்குளம் யூனியன், கொளக்கட்டாகுறிச்சி கிராமத்தில் 38 வீடுகளில் மூன்றே மூன்று வீடுகள் மட்டுமே கிறிஸ்தவர்களாக மாறிய தலித் குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. மீதி வீடுகள் வசதியானவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளனவாம்.

""ராஜகோபால் என்பவருக்கு 20 ஏக்கர் நிலம் இருக்கு. அவருக்கு வீடு, ஃபைனான்ஸ் தொழில் செய்யும் கிருஷ்ணம் மாளுக்கு வீடு... இப்படித்தான் வீடுகள் ஒதுக்கப்படுது. முக்கூட்டுமலை ஊராட்சி நடுவப்பட்டியில், பஞ்சாயத்து கிளார்க் முத்துப்பாண்டியின் அப்பா கருப்பசாமிக்கு வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது. கமிஷன் கொடுப்பவர்களுக்கே வீடு என்றாகிவிட்டது'' என்கிறார்கள் உள்ளூர்க்காரர்களான பரணியும் ராஜனும்.

இதுகுறித்து நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சித்திட்ட இயக்குநர் பழனியிடம் கேட்டோம். முதலில் மறுத்தவர், சிலரது பெயர்களைச் சொன்னதும், ""புகார்கள் வந்துள்ளன. விசாரித்து காரணமானவர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படும்'' என்றார் அவர்.

Advertisment

இந்தத் திட்டத்தில் மட்டுமல்ல பாத்ரூம் திட்டம், 100 நாள் வேலை, பசுமை வீட்டுத் திட்டம் அத்தனை திட்டங்களிலும் அதிகாரிக்கு பாதி; பயனாளிக்கு பாதி என ஊழல் புரை யோடிக் கொண் டிருக்கிறது.

-பரமசிவன்

தினமும் 2 கொலைகள்!

signal

ஆம்பூர் நகரில் நாற்கரச் சாலையைக் கடக்கும் பொதுமக்களில், தினமும் இரண்டுபேர் கொல்லப்படு கிறார்கள். கடந்த இரண்டு மூன்று மாதங்களில் 50 பேர் சாலையைக் கடக்கும்போது வாகனங்கள் மோதி கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

வேலூர் மாவட்டத்தில் விபத்துகளில் அதிக உயிர்ப் பலிகள் ஏற்படுவது ஆம்பூரில்தான். ஆம்பூர் நகரத்தை இரண்டாகப் பிளந்துவிட்டது சென்னை-பெங்களூரு தேசிய நாற்கரச் சாலை. "சாலையைக் கடப்பதற்கு எங்களுக்கு ஒரு மேம்பாலம் அமைத்துத் தாருங்கள்' என்று ஆம்பூர் மக்கள் நெடுநாட்களாகக் கேட்டுக்கொண்டி ருக்கிறார்கள்.

""என்னை எம்.எல்.ஏ. ஆக்குங்கள்... ஒருசில மாதங் களில் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தருகிறேன்'' வாக்குறுதி அளித்து, ஆம்பூர் எம்.எல்.ஏ.வானார் அ.தி.மு.க. பாலசுப்பிரமணி. சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார். ஜெ. உயிரோடு இருந்தபோது, இதற்காக 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஜெ. இறந்தார். கூவத்தூர் பஞ்சாயத்தில் எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணி, டி.டி.வி. தினகரன் அணிக்குச் சென்று பதவி பறிக்கப்பட்ட 18 பேரில் ஒருவரானார்.

ஆம்பூர் மக்கள் வேலூர் மாவட்ட அமைச்சர்களான வீரமணியிடமும், நிலோபர் கபிலிடமும் கோரிக்கை வைத்தார்கள். அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

18-09-18 அன்று நியாயவிலைக் கடை திறக்க வந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு காரையும், நிலோபர் கபில் காரையும் ரெட்டித்தோப்பு பகுதியில் மறித்து, இரண்டு அமைச்சர்களையும் முற்றுகையிட் டார்கள் ஆம்பூர் மக்கள். காவல்துறையினர் அதிக அளவில் வந்த பிறகுதான், அங்கிருந்து அமைச்சர்களால் கிளம்ப முடிந்தது.

-து.ராஜா

இரண்டு ஒன்றானது!

signal

டெல்டா தி.மு.க.வில் பழனிமாணிக்கம் மா.செ. பதவியில் இருந்தபோது தனது தம்பி ராஜ்குமார் மூலம் ஒரு அணியை உருவாக்கியிருந்தார். அந்த நேரத்தில் மாற்று அணி உருவாகி யிருந்தாலும் அந்த அணி நீடிக்கவில்லை. அதன்பிறகு தஞ்சை எம்.பி. தொகுதியை குறிவைத்த டி.ஆர்.பாலு, அடிக்கடி தஞ்சைப் பக்கம் வந்து பழனிமாணிக்கத்திற்கு நெருக்கடி கொடுத்து அவருக்கான இடத்தில் போட்டியிட்டதால் இருவரும் நேரடியாகவே மோதிக் கொள்ளும் நிலை உருவானது. செய்தியாளர்களைச் சந்தித்து டி.ஆர்.பாலுவைப் பற்றி குறை சொன்னார் பழனிமாணிக்கம். இந்த நிலையில் தேர்தல் முடிந்த பிறகு டி.ஆர்.பாலு சென்னைக்குப் போய்விட, அவருக்காக அணியாக நின்றவர்கள் தனியாக நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில்தான் அணி மாறியவர்கள் மீண்டும் பழனிமாணிக்கம் பக்கம் வந்தார்கள். நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாகக் கலந்துகொண்டாலும் சரியாகப் பேசிக்கொள்வது கூட இல்லை. கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தச் சென்றபோதுகூட தனி அணியாகச் சென்றனர்.

அ.தி.மு.க. அரசுக்கு எதிராக தஞ்சையில் தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தில் முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலுவும், பழனி மாணிக்கமும் கலந்துகொண்டனர். அதில் பழனிமாணிக்கத்திடம் ஒட்டி உரசி பேசிக்கொண்டிருந்த டி.ஆர்.பாலு 16 முறை பழனிமாணிக்கம் பெயரைச் சொல்லி அடிக்கடி வாழ்த்தினார். இதைப் பார்த்து பழனிமாணிக்கமும் சிரித்துக்கொண்டார்.

கீழே நின்ற தொண்டர்களோ... ""இப்படி இணக்கமா இருந்திருந்தால் தஞ்சை பாராளுமன்றத் தொகுதியை தி.மு.க. இழந்திருக்குமா? தஞ்சை சட்டமன்றத் தொகுதியை இழந்திருக்குமா?... இருந்தாலும் இனிமேல் வெற்றிதான்'' என்றனர் உ.பி.க்கள்.

-செம்பருத்தி