இணை ஆணையருக்கு அரோகரா!

signal

அண்ணாமலையார் கோயிலுக்கு 06-09-18 அன்று ஆய்வுக்கு வந்தார் திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி மகிழேந்தி.

சாமியை தரிசிப்பதற்காக கோயிலுக்குள் சுட்டெரிக்கும் வெய்யிலில் க்யூவில் நின்ற பக்தர்களிடம் குறைகளைக் கேட்டார்.

Advertisment

""பாருங்கய்யா... மலையையே சுத்திட்டு வந்து வரிசையில நிற்கிறோம். உக்கார ஒரு பெஞ்சு கூட இல்லை. ஆனால் நிறைய பேரை, புரோக்கர்கள் குறுக்கு வழியில் கூட்டிப்போய் சாமி சன்னதியில் விடுறாங்க'' குறைகளைக் கொட்டினார்கள் பக்தர்கள். பிறகு, அன்னதானக் கூடத்துக்குச் சென்றார். அசுத்தமாகக் காட்சியளித்தது.

கோயில் வளாகத்திற்குள் பராமரிக்கப்படும் கோசாலைக்குச் சென்றார், காலி பீர் பாட்டில்களை அங்கே கண்டார்... எடுத்து முகர்ந்து பார்த்து முகஞ்சுழித்தார். இவை பற்றி கோயில் இணைஆணையர் ஞானசேகரனிடம் கேட்டார் நீதிபதி மகிழேந்தி.

""உண்மைதான்; புரோக்கர்கள் ஆதிக்கம் இருப்பது உண்மைதான். போலீசில் புகார் கொடுத்தோம். அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை!'' என்று நீதிபதியிடம் சொன்ன கோயில் இணை ஆணையர், மறுநாள், ""இவர்கள் எல்லாரும் கோயிலுக்குள் உலவுகிறார்கள்!'' என்று 13 புரோக்கர்களின் பட்டியலோடு திருவண்ணாமலை நகரக் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். மூவரைக் கைது செய்த போலீஸ் மற்றவர்களைக் கண்டுகொள்ளவில்லை.

Advertisment

கோயில் ஊழியர்கள் சிலர் நம்மிடம், ""இணை ஆணையர் ஞானசேகரனுக்கும் கோயில் மணியக்காரர் செந்திலுக்கும் தெரியாமல் எந்தப் புரோக்கரும் இங்கே வருவதில்லை. அதிகாரிகளுக்கு புரோக்கர்கள் பங்கு கொடுப்பது உண்மையே. பங்கு தராத மூவர் மட்டுமே கைதாகி உள்ளனர்'' என்றார்கள்.

-ராஜா

முட்டுக்கட்டை போடும் எம்.பி.!

signal

கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்த ஏற்கனவே மூன்று முறை தேதி குறிப்பிட்டும் அதை நடத்தவிடாமல் தளவாய்சுந்தரம்தான் தடுத்தார் என்று கூறினார் அப்போது இருந்த மா.செ.யும் எம்.பி.யுமான விஜயகுமார். தற்போது விஜயகுமாரிடமிருந்த மா.செ. பதவி பறிக்கப்பட்டு, தளவாய்சுந்தரம் ஆதரவாளர்களான அசோகன் (கிழக்கு), ஜான்தங்கம் (மேற்கு) மா.செ.க்களாக நியமிக்கப்பட்டதையடுத்து வருகிற 22-ம் தேதி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்த அறிவிப்பு வெளியிட்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறார்கள் தளவாய்சுந்தரமும் புதிய மா.செ.க்களும்.

இதற்காக கடந்த 6-ம் தேதி பந்தல்கால் நாட்டுவிழா ஓ.பி.எஸ் தலைமையில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 6-ம் தேதி சுபமுகூர்த்த நாளாக இருந்தபோதும் அது ஓ.பி.எஸ்க்கு உகந்த நாளாக இல்லையாம். பதவிக்கு எதாவது ஆபத்து வந்துவிடும் என்ற அச்சத்தில் அந்த தேதியை மாற்றி அடுத்த தேதியான, ஜெயலலிதாவின் ராசி எண்ணான 9-ம் தேதியை அறிவித்து அதில் 4 அமைச்சர்கள் 2 எம்.பி.க்கள் கலந்துகொண்டு பந்தல்கால் நாட்டினார்கள்.

ஆனால் ஓ.பி.எஸ். அன்றும் கலந்துகொள்ளவில்லை. அதற்கும் பல காரணங்கள் கூறினார்கள். இந்தநிலையில் பந்தல்கால் நாட்டும் நிகழ்ச்சியை புறக்கணித்த எம்.பி.விஜயகுமார் "22-ம் தேதியும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இங்கு நடக்கவே நடக்காது' என்று தனது ஆதரவாளர்களிடம் சவால்விட்டுப் பேசிவருகிறார். ஆனால் விழாவை நடத்தும் முயற்சியில் தளவாய்சுந்தரம் வரிந்துகட்டி வேலை செய்கிறார்.

-மணிகண்டன்

லோக்கல் மல்லையாக்கள்!

signal

விருதுநகரில் ஓ.எம்.எஸ். என்ற பெயரில் பருப்பு மில் நடத்திவரும் வேல்முருகனும் இவருடைய உறவினரான செண்பகனும் கடந்த சில வருடங்களாக, தொழிலாளர்கள், லோடுமேன்கள், வறுமையில் உழலும் ஏழைகள் என நூற்றுக்கணக்கானோரை "விவசாயிகள்' என்று கணக்கு காட்டி, சேமிப்புக் கிடங்கில் நவதானியம் இருப்பு வைத்திருப்பதாக போலி ஆவணங்கள் தயாரித்து, ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சம் வரையிலும் கடன் பெற்று வந்திருக்கிறார்கள். கடனுக்கான வட்டியை வங்கிகளில் தவறாமல் செலுத்தினார்கள். கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் இனி செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதனால், மோசடியாகக் கடன் பெற்று கோடிகளில் கறுப்புப்பணம் வைத்திருந்த வேல்முருகன் தரப்பு நிலைகுலைந்து போனது. ஒரு அளவுக்குமேல் மாற்ற முடியவில்லை. வங்கிகளில் உரிய வட்டியையும் செலுத்தவில்லை. எனவே யார், யார் பெயரில் வங்கிகளில் கடன் இருந்ததோ, அவர்களுக்கெல்லாம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான வெயில்முத்து என்பவர் பெரியகுளம் தென்கரை காவல்நிலையத்தில், வேல்முருகன் தரப்பினர் மீது புகார் அளித்தார்.

இன்சூரன்ஸ் பேப்பர்கள் எனச் சொல்லி அப்பாவிகளிடம் கையொப்பம் வாங்கி, அவர்களிடமிருந்து ஆதார் கார்டு, ரேஷன் கார்டு விவரங்கள் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களை பெற்றிருக்கின்றனர். வேல்முருகன் சொன்ன இடங்களுக்கே வங்கி அதிகாரிகள் வந்து, போலி ஆவணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். யார் யார் பெயர்களிலோ 360 கோடிகளைக் கடனாகத் தந்த வங்கி அதிகாரிகளைக் குளிர்விக்கும் விதத்தில் சப்ளை&சர்வீஸும் நடந்திருக்கிறது. விசாரணையில் இதனைத் தெரிந்துகொண்ட காவல்துறையினர் வேல்முருகன், செண்பகன், கலைச்செல்வி, சன்னாசி, புரோக்கர்கள் சோலையப்பன், பெரியகுளம் ஸ்டேட் வங்கி மேலாளர் தாமோதரன் மற்றும் வங்கி ஊழியர் ஆகியோரை கைது செய்திருக்கின்றனர்.

அமலாக்கத் துறையினர் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து, சென்னை, மதுரை, கோவை விருதுநகர் உட்பட 9 இடங்களில், ஓ.எம்.எஸ். நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில், ஒரே நேரத்தில் சோதனை நடத்தி, சீல் வைத்திருக்கின்றனர்.

-சி.என்.இராமகிருஷ்ணன்