போலி இ-பாஸ் மோசடி! சீல் வைத்த அதிகாரிகள்!

இ-பாஸ் கொடுமையைவிட கொரோனா தாக்குதலே பரவாயில்லை என்கிற அளவுக்கு வெளியூர் பயணிப்பவர்கள் பாஸ் கிடைக்காமல் அல்லாடுகிறார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் கம்ப்யூட்டர் சென்டர்கள், போலியான இ-பாஸ் தயாரித்து ஆயிரக்கணக்கில் லாபம் பார்க்கிறார்கள். அரசு அதிகாரிகள் சிலரும், பணத்தை வாங்கிக் கொண்டு இதற்கு அப்ரூவல் வழங்குகிறார்கள். அரசு கண்டுகொள்வதில்லை. புரோக்கர்களின் காட்டில் பணமழை.

Advertisment

ss

இந்த நிலையில்தான், இ-பாஸ் மோசடி குறித்து உயர்நீதிமன்றம் கண்டித்தது. மனித உரிமை ஆணையம் அனுப்பிய நோட்டீஸ், மக்களிடம் கொதிப்பு என நாளுக்குநாள் எதிர்ப்பு கிளம்பியதால், போலி இ-பாஸ் குறித்து மாவட்ட நிர்வாகங்கள் தீவிரம் காட்டுகின்றன. திருவண்ணாமலை நகரத்தில் இயங்கிவந்த ரோஸ் கம்ப்யூட்டர் செண்டரில், போலி இ-பாஸ் தயாரிப்பதாக கிடைத்த தகவலின்பேரில், ஆகஸ்ட் 10ந்தேதி அதிரடியாக ஆய்வு நடத்தினார்கள் அதிகாரிகள். இதில், மோசடி உறுதியானதும், அந்தக் கம்ப்யூட்டர் சென்டருக்கு சீல் வைத்தனர்.

அதேபோல், ‘எங்கு செல்ல வேண்டுமானாலும் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். இ-பாஸ் ரெடி, வாகனம் ரெடி’ என தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரப்பிவந்தார் விக்ரம் என்பவர். இதுபற்றி மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், காஞ்சி சாலையிலிருக்கும் அவரது கம்ப்யூட்டர் சென்டருக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய மோசடிகள் பெருகியதால்தான் விண்ணப்பித்தவர்களுக்கெல்லாம் இ-பாஸ் என அறிவித்தது எடப்பாடி அரசு.

-து.ராஜா

பத்தாவது பாஸ்! எடப்பாடிக்கு வாழ்த்துப் போஸ்டர்!

Advertisment

பள்ளிகள் திறந்திருந்தபோது கொரோனா அடங்கியிருந்தது. பள்ளிகளை மூடிய பிறகு, கொரோனா கூத்தாட ஆரம்பித்துவிட்டது. அதனால், மார்ச் மாத இறுதியில் தொடங்கவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும் தேதி மாற்றி அறிவிக்கப்பட்டு, இறுதியில் வேறு வழியின்றி ரத்து செய்யப்பட்டது.

ss

இந்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்களை ஆல்பாஸ் செய்து, காலாண்டு- அரையாண்டு தேர்வு முடிவுகள் மற்றும் வருகைப் பதிவின் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியலை கடந்த 10ந்தேதி வெளியிட்டது பள்ளி கல்வித்துறை. அரசின் இந்த முடிவால் தேர்ச்சிபெற்ற, கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகேயுள்ள குறுங்குடி கிராமத்தைச் சேர்ந்த நிஷாந்த் என்ற மாணவன், தான் தேர்வில் வெற்றிபெற்ற நற்செய்தியை போஸ்டர் ஒட்டி அதகளப்படுத்தி இருக்கிறார்.

Advertisment

அந்தப் போஸ்டரில், "பத்தாம் வகுப்பில் என்னை பாஸ் போட்டு வரலாற்றுச் சாதனை படைத்த ஐயா எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நன்றி'’என்றும், "என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்த எனது ஆசிரியர்களுக்கு இந்த வெற்றியைச் சமர்ப்பிக்கிறேன்' என்றும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், மாணவன் நிஷாந்த், தன் தலைக்கு மேலே இரு கைகளையும் உயர்த்தி கும்பிட்டபடி, நன்றி நன்றி நன்றி என்றபடி, மக்களிடம் ஓட்டு கேட்டுச்செல்லும் வேட் பாளரைப் போல தனது படத்தையும் அதில் சேர்த்திருக்கிறார்.

உள்ளாட்சித் தேர்தலில் தன்னைத் தோற்கடித்த வாக்காளர்களுக்கு வேட்பாளர் ஒருவர் போஸ்டர் ஒட்டியது வைரலானதைப் போலவே, மாணவன் நிஷாந்தின் இந்தப் போஸ்டரும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

-எஸ்.பி.சேகர்

மணல் அள்ள உரிமை கேட்டு போராட்டம்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள குமாரமங்கலம், கோபாலபுரம் பகுதியின் மணிமுத்தாற்றில், தமிழக அரசின் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை சார்பில், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய அனுமதியுடன் 4.87 ஹெக்டேர் பரப்பளவில், ஓராண்டுக்கு மணல் அள்ள மணல்குவாரி அமைக்கப்பட்டது.

ss

அதேசமயம், சுற்று வட்டாரத்தில் உள்ள 30 கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களின் ஒரே நீராதாரமாக இந்த ஆறு இருப்பதால், 1865லேயே நீர்ப்பாசன அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கு அருகிலேயே மணல் குவாரி தொடங்கப்பட்டதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசாயம் பாதிக்கப்படும் என்று பா.ம.க. வினர் மற்றும் கிராமமக்கள் முற்றுகையிட்டனர். இதனால், மணல்குவாரி தற்காலிகமாக மூடப்பட் டது. இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட மணல்குவாரியில் லாரிகளுக்கு மட்டுமே மணல் அள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் வண்டிகளுடன் மணல் குவாரியை முற்றுகையிட்டனர்.

அப்போது, “குமாரமங்கலம் கிராமத்தில் மாட்டுவண்டித் தொழிலாளர்களுக்காக அரசு மணல்குவாரி அமைக்க அளவீடு செய்திருந்தார்கள். ஆனால், அதில் லாரிகளில் மணல் அள்ள மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், எங்களது வாழ்வாதாரம் பாதிக்கிறது. இதைச் சரிசெய்ய மாட்டுவண்டித் தொழிலாளர்களுக்கு அரசு மணல் குவாரியில் மணல் அள்ள அனுமதிக்கவேண்டும். இல்லையென்றால், குவாரியில் குடியேறும் போராட்டம் நடத்துவோம்’’ என எச்சரித்து தொடர் முழக்கத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் முற்றுகையில் ஈடுபட்டவர்களின் கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்துவதாக உறுதியளித்து, சமாதானப்படுத்தினர்.

-சுந்தரபாண்டியன்