அமைச்சர் தொகுதியில் அலட்சிய அவலம்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக அன்னவாசல், விராலிமலை, பொன்னமராவதி ஆகிய பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு முன்புவரை அதிகமாகக் காணப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த ஒருவர், காய்ச்சல் காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த சில நாட்களில் இறந்துவிட்டார். அவரது உடலை ஒப்படைத்தபோது, கொரோனா தொற்று இருக்குமானால் திருச்சியிலேயே அடக்கம் செய்துவிடுங்கள் என்று உறவினர்கள் ஒப்புதல் கொடுத்துள்ளனர். இருந்தும், சோதனை ரிசல்ட் நெகட்டிவ்தான் என்று சொல்லி உடலை உறவினர்களிடமே கொடுத்திருக்கிறது மருத்துவமனை நிர்வாகம்.
உறவினர்களும் உடலை சடங்குகள் செய்து முறைப்படி நல்லடக்கம் செய்துள்ளனர். அதற்கடுத்த நாளில் மீண்டும் அழைத்த மருத்துவமனை நிர்வாகம், இறந்தவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று தகவல்சொல்லி கிலி கிளப்பியது. இதையடுத்து இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களில், முதற்கட்டமாக 20 பேருக்கு சோதனை செய்ததில், சிறு குழந்தைகள் உள்ளிட்ட 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு புதுக்கோட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும், பலர் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர்.
இறந்தவரின் உடலை கொரோனா முடிவு தெரியும்வரை வைத்திருக்காமல் உறவினர்களிடம் ஒப்படைத்த மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால், இப்போது மிகப்பெரிய தொற்று ஏற்பட்டிருக்கிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தொகுதியின் இந்த அவலம், மக்களிடையே வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.
- இரா.பகத்சிங்
மருத்துவர்களை பலிகேட்கும் கொரோனா!
கொரோனா பெருந்தொற்று பாதிப்பால், இந்தியா முழுவதும் இரண்டரை சதவீதம் பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இருந்தும் தங்கள் உயிரையும் துச்சமென எண்ணி மருத்துவப் பணியாளர்களும், காவல்துறையினரும், தூய்மைப் பணியாளர்களும் கொரோனா தடுப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் கொரொனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதுவரை நூற்றுக்கும் அதிகமான மருத்துவர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். இறந்த மருத்துவர்களில் சிலர் சர்க்கரை நோய், இதயநோய், ரத்தக்கொதிப்பு போன்ற பிரச்சனைகளால் தவித்து வந்தாலும், சேவை மனப்பான்மையுடன் தொடர்ந்து பணியாற்றி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக இந்திய மருத்துவர் சங்க இளம் மருத்துவர்கள் அமைப்பின் தலைவர், ஈரோடு அப்துல் ஹாசன் செய்தியாளர்களிடம் பேசுகை யில், ""மருத்துவர்கள் மட்டுமின்றி நூற்றுக்கணக்கான அனுபவம் வாய்ந்த செவிலியர்களையும் நாம் இழந்திருக்கிறோம். இளம் மருத்துவர்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இதை முழுமையாகக் கருத்தில்கொண்டு, கொரோனா நோயாளிகளுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு தரமான கவச உடைகளை அரசு வழங்கவேண்டும். அதேபோல், மருத்துவர்கள் அதிகநேரம் பணியாற்றுவதைத் தவிர்க்கும் வகையில், கூடுதல் மருத்துவர்களை இந்தப் பணியில் அமர்த்தவேண்டும்'' என்று வலியுறுத்தி உள்ளார்.
உயிர்காக்கும் உன்னதப் பணியில் இருப்பவர்களின் உயிரும் மிக முக்கியமானது என்பதை அரசு உணர்ந்து, துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
- ஜீவாதங்கவேல்
காதலிக்க மறுத்ததால் கொலை!
""ஏய் ஐஸ்வர்யா.. வெளியே வாடி. ஏண்டி என்கூட பேச மாட்டேங்குற? போன் அடிச்சாலும் எடுக்க மாட்டேங்குற? சொல்லுடி...'' -கடந்த 17ந்தேதி இரவு கோவை பேரூர் ஆறுமுகக் கவுண்டனூர் எம்.ஆர். கார்டனில் உள்ள தனது காதலி ஐஸ்வர்யாவின் வீட்டு வாசலில் நின்று இப்படித்தான் கூப்பாடு போட்டான் அதே பகுதியைச் சேர்ந்த ரித்தீஷ்.
குடித்துவிட்டு வந்திருந்த அவனிடம், ""லவ்வே வேண்டாம். எங்க அப்பாவுக்கு வேண்டி நான் நல்லாப் படிக்கணும்னு சொன்னேனில்ல. தயவுசெய்து என்னை விட்ரு'' என்றாள் ஐஸ்வர்யா. கடைசியா ஒருமுறை கேட்கிறேன் என்ற ரித்தீஷின் கேள்விக்கும் முடியாது என்றே பதில்வந்தது.
திடீரென, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ""இதோடு ஒழிஞ்சு போ'' எனக் கத்தியபடியே, ஐஸ்வர்யாவின் வயிற்றில் சரமாரியாக இறக்கினான். வலியில் அலறும் மகளின் சத்தம்கேட்டு ஓடிவந்த ஐஸ்வர்யாவின் தந்தை சக்திவேலுவையும் கையில் கீறிவிட்டு அங்கிருந்து தப்பியோடினான் ரித்தீஷ். அக்கம்பக்கத்தார் உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்தும், ஐஸ்வர்யா பிழைக்கவில்லை.
பேரூர் போலீசாரிடம் இதுபற்றி கேட்டபோது, ""பாவம் சார் அந்தப் பொண்ணு. ஸ்கூல் படிக்கும்போது அந்தப்பய கூட பழக்கமாகி இருக்கு. இப்போ காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் போயிட்டிருந்தது. ஊரடங்குனால வெளியே சந்திக்க முடியாம, செல்போனிலேயே பேசியிருக்காங்க. இதைப்பார்த்த அந்தப் பொண்ணோட அப்பா, படிக்காம தப்பான வழியில போயிடாதேம் மான்னு, பக்குவமா எடுத்துச் சொல்லியிருக்காரு. அந்தப் பொண்ணும் அப்பா பேச்சைக்கேட்டு ஒதுங்கியிருக்கு. இதைப் பொறுத்துக்காம, அந்தப்பய கொன்னுப் போட்டுட்டான். பாவம் ஒத்தப்பொண்ணைத் தொலைச்சிட்டு, அவங்கப்பா கதறிட்டு இருக்காரு'' என்றனர் சோகத்துடன்.
தலைமறைவான ரித்தீஷ், பாலக்காடு அருகே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
-அருள்குமார்