திராவிட விநாயகர் கேட்ட தி.மு.க. நிர்வாகி!
"ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலம், பொது மக்களுக்கு செய்துவரும் நிவாரண உதவிகள் குறித்து வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக நிர்வாகிகளிடம் பேசிவருகிறார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். அப்போது, தங்களது கோரிக்கைகளையும் நிர்வாகிகள் முன்வைப்பதுண்டு. அப்படியொரு நிகழ்வில், விநோதமான கோரிக்கையை முன்வைத்து ஸ்டாலினையே அதிரவைத்திருக்கிறார் தி.மு.க. நிர்வாகி ஒருவர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள குஜிலியம்பாறை தி.மு.க. ஒ.செ.வாக இருக்கிறார் சீனிவாசன். இவர், வீடியோ கான்ஃபரன்சிங்கில் ஸ்டாலினோடு பேசுகையில், மா.செ.க்கள், துணைப் பொதுச்செயலாளரின் ஆலோசனையின்படி சிறப்பாக செயல்பட்டு வருகிறோம் என்று கூறிவிட்டு, ஒரு தாழ்மையான வேண்டுகோள் தலைவரே என்று கேட்டிருக்கிறார்.
ஸ்டாலினும் ஆமோதிக்க, ""ஆரியக் கடவுளான விநாயகரை, இந்தியா முழுவதும் இந்துத்வவாதிகளே கொண்டாடுகிறார்கள். எனவே, விநாயகர் சதுர்த்தியின்போது, ’திராவிட விநாயகரை’ வைத்து வழிபாடு செய்யவேண்டும் என்று எண்ணுகிறோம். அதற்கு தாங்கள் ஆணையிடவேண்டும். தி.மு.க.வினரை சாமி கும்பிடமாட்டோம் என்றும், தி.மு.க.வை இந்துவிரோத கட்சி என்று சொல்பவர்களுக்கு இதன்மூலம் பதிலடி கொடுக்கவேண்டும்'' என்று முடித்தார். இது பேஸ்புக், வாட்ஸப்பில் காட்டுத்தீ போல் வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக ஒ.செ. சீனிவாசனிடம் கேட்டபோது, ""விநாயகரின் பெயரில்தானே இந்தியா முழுவதும் பி.ஜே.பி.காரங்க ஆட்டம் போடுறாங்க. அரசியல் பண்ணுறாங்க. ஆகவே, நாமளும் திராவிட விநாயகரை வைத்து சதுர்த்தி கொண்டாட வேண்டுமென்று தலைவரிடம் என் தனிப்பட்ட கருத்தைக் கூறினேன். கடவுள் மறுப்பாளரான கலைஞர்தான் அறநிலையத்துறையை உருவாக்கி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அறிவித்தார். அதனடிப்படையில்தான் இந்தக் கோரிக்கையை முன்வைத்தேன்'' என்றார்.
-சக்தி
செருப்பு சர்ச்சையில் சிக்கிய எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள அரங்கல்துருகம் பொன்னப்பள்ளி கிராமத்தில் இருக்கிறது துருகம் காப்புக்காடு. இங்குள்ள கானாற்றில் கட்டப்பட்ட தடுப்பணை, ஜூன் 30ந்தேதி பெய்த கனமழையால் உடைந்தது. இந்தத் தகவலறிந்த ஆம்பூர் தி.மு.க. எம்.எல்.ஏ. வில்வநாதன், மறுநாள் காலையிலேயே கட்சி நிர்வாகிகளுடன் தடுப்பணையைப் பார்வையிடச் சென்றார். அப்போது, கானாறு மண்ணில் செருப்பு புதைந்ததால், கழற்றிவிட்டுச் சென்றுள்ளார்.
இதைப்பார்த்த வெங்கடசமுத்திரம் ஊராட்சிமன்ற கழகச் செயலாளர் சங்கர், அந்த செருப்பைக் கையில் தூக்கிக்கொண்டு நடந்தார். இந்நிலையில், பட்டியல் சாதியைச் சேர்ந்த அரசு ஊழியரை, உயர்சாதி எம்.எல்.ஏ. என்ற திமிரோடு செருப்பு தூக்கவைத்தார் என்று வில்வ நாதனுக்கு எதிராக சோஷியல் மீடியாக்களில் பரப்பிவிட்டார்கள்.
இதுபற்றி அறிய சங்கரைத் தொடர்புகொண்டபோது, அவரை லைனில் பிடிக்க முடியவில்லை. ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. வில்வநாதனிடம் கேட்கையில், ""பொய்யான தகவலைப் பரப்பிட்டு இருக்காங்க. நீங்க சொல்கிற சங்கர் என் பக்கத்துலதான் இருக்காரு; அவர்கிட்ட பேசுங்க'' என போனை சங்கரிடம் கொடுத்தார்.
""15 ஆண்டுகளா நான் இவருடன்தான் இருக்கேன். இதுவரை சாதி பார்த்து பழகியதில்லை. என் மனைவி அனிதா பேரணாம்பட்டு தி.மு.க. துணைச்செயலாளராக இருக் கிறார். அன்னைக்கி, அணையைப் பார்வையிடப் போனப்ப, எம்.எல்.ஏ. செருப்பைக் கழட்டிப் போட்டு போனாரு. சுகர் பேஷண்டான அவருக்கு காலில் கல்பட்டு காயமானால் பிரச்சனை யாச்சேன்னு செருப்பைக் கையில் தூக்கிட்டுப் போனேன். அதுக்குக்கூட அவரு சத்தம்தான் போட்டாரு. சுயமரியாதை இயக்கமான தி.மு.க.வில் இருக்கிற நான், எம்.எல்.ஏ.வே சொன்னாலும் செருப்பைக் கையில் எடுத்திருக்க மாட்டேன்'' என்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தார் சங்கர். ஆனாலும், அரசியல் நெருப்பு பற்றியெரிகிறது.
-து.ராஜா
வள்ளலார் மண்ணில் வாழமுடியாத மக்கள்!
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்றார் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார். இன்று அவர் வாழ்ந்த மண்ணான வடலூரில், குடிக்க தண்ணீரின்றி வாடுகிறார்கள் பொதுமக்கள். சொந்தத் தூய்மைப் பேண சொல்லும் இந்தக் கொரோனா காலத்தில், சாக்கடைகள், குப்பைகள் என மூச்சுத்திணறும் வாழ்க்கையே வடலூர்வாசிகளுக்கு எஞ்சியிருக்கிறது.
இதுகுறித்து நுகர்வோர் உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பேரவையின் தலைவர் கல்விராயர் நம்மிடம், ""வள்ளலார் வாழ்ந்து வழிபட்ட சபையைப் பார்க்க உலகம் முழுவதும் இருந்து மக்கள் வருகிறார்கள். இங்கிருக்கும் ஐயன் ஏரி கழிவுநீர் கலந்து சாக்கடை ஏரியாக மாறிவிட்டது. புதுநகர் பூங்கா ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கபூர்பாய் தெரு, பாரதிதாசன் தெரு போன்ற பல்வேறு தெருக்கள் சாக்கடை நீரால் சூழ்ந் திருக்கின்றன. தண்ணீர்த் தட்டுப்பாடும் தலைவிரித் தாடுகிறது.
இதுபற்றி பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டு எந்தப் பிரயோஜனமும் இல்லை. எனவே கலெக்டரிடம் மனு கொடுத்துள் ளோம்'' என்றார்.
வடலூர் நகரத்திற் குட்பட்ட பகுதிகளில் தேடிப் பார்த்தாலும் சுகாதாரம் இல்லை. தினசரி ஆயிரக்கணக்கான ஆதரவற்றோர் தங்கும் வள்ளலார் சபை இருந்தும், சுத்தமும் சுகாதாரமும் காணக்கிடைக்காத ஒன்றாக மாறிவருகிறது என்கிறார்கள் வடலூர்வாசிகள்.
இதுகுறித்து வடலூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதனிடம் கேட்டோம். ""தூய்மைப்பணிகள் முழுமையாக நடக்கின்றன. சிறுவர் பூங்கா ஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்ற உத்தரவு எதுவும் எங்களுக்கு வரவில்லை. அப்படி வந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம். நான் பணிமாறுத லில் இங்குவந்து மூன்று மாதங்களே ஆகின்றன. என் கவனத்திற்கு வரும் குறைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறேன்'' என்றார்.
- எஸ்.பி.சேகர்