Skip to main content

சிக்னல்!

காணாமல் போவார்கள்?

signalனாமாகக் கேட்டால் வண்டி வண்டியாய் நெல்மூட்டைகளை அனுப்புவேன். ஆனால், வரி, வட்டி, கப்பம் என்றால் ஒற்றை நெல்மணியைக்கூட தரமாட்டேன் என்று வெள்ளையரின் ஈஸ்ட் இண்டியா கம்பெனியை எதிர்த்தவர் நெல்லை நெல்கட்டான்செவல் பாளையத்தை ஆண்ட பூலித்தேவன்.

பூலித்தேவனின் 303-ஆவது பிறந்தநாள் 1-9-2018. அவரது சிலைக்கு மாலை போட வரும் அரசியல் தலைவர்கள், சாதியத் தலைவர்கள், மன்ற அமைப்பாளர்கள் கூட்டமாக... கோஷமாக... ஆவேசமாக வருவதால் பிரச்சினைகளும் படைதிரட்டி வருகின்றன. அவற்றின் எதிரொலியாக இந்த வருடமும் பத்து நாட்களுக்கு முன்பே 144 தடைச் சட்டம் போடப்பட்டுவிட்டது.

பூலித்தேவன் பிறந்தநாளன்று தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் நெல்கட்டான்செவலில் முகாமிட்டிருந்தார்.

தலைவன்கோட்டை கிராமத்தில் துணைமுதலமைச்சர் ஓ.பி.எஸ். அணியினரை எதிர்ப்பதற்கு அ.ம.மு.க.வினர் தயாராகிக்கொண்டிருப்பதாக உளவுத்துறை தகவல் தந்தது. ஏற்பாடு செய்திருந்த வழியை மாற்றி ஓ.பி.எஸ்.ஸையும் உடன்வந்த அமைச்சர்கள், நிர்வாகிகளையும் சங்கரன்கோயில் ஆணையூர் வழியில் அழைத்துச் சென்றனர்.

நண்பகல் 12:30-க்கு நெல்கட்டான்செவலில் மணிமண்டப முகப்பிலுள்ள பூலித்தேவன் சிலைக்கு ஓ.பி.எஸ்.ஸும் அவருடன் வந்த கடம்பூர் ராஜுவும், ராஜலட்சுமியும், திண்டுக்கல் சீனிவாசனும், எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் மாலை அணிவித்தனர். அங்கிருந்து கிளம்பும் முன்பு ""இடைத்தேர்தலுக்குப் பிறகு டி.டி.வி. அணி காணாமல் போகும்'' என்றார் ஓ.பி.எஸ்.

இரண்டு மணிக்கு வரவேண்டிய டி.டி.வி.தினகரன் நான்கு மணிக்கு ஐயாயிரம் தொண்டர்களோடு வந்து பூலித்தேவனுக்கு மரியாதை செலுத்திவிட்டு, ""இடைத்தேர்தலுக்குப் பிறகு ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். இருவருமே காணாமல் போய்விடுவார்கள்'' உற்சாகமாகச் சொன்னார்.

-பரமசிவன்
படம்: ராம்குமார்

எம்.எல்.ஏ.வின் செல்வாக்கு!

signal

.தி.மு.க. எம்.எல்.ஏ. பூம்புகார் பவுன்ராஜின் இளையமகளுக்கு 30-8-18 அன்று திருமணம்.

திருக்கடையூரில் 15 ஏக்கர் பரப்பில் பிரமாண்டமான திருமணப் பந்தல். சீர்காழி வட்டத்தின் கடைக்கோடியான கொள்ளிடத்தில் துவங்கி திருக்கடையூர் வரையிலும் மயிலாடுதுறை ரயில்நிலையத்தில் துவங்கி திருக்கடையூர் வரையிலுமாக இரண்டு வழிகளிலும் நூறு அடிக்கு ஒரு ஃப்ளக்ஸ் பேனர். ஒரு கிலோமீட்டருக்கு ஒரு வரவேற்பு வளைவுத் தோரணவாயில்.

காண்ட்ராக்டர்கள், அரசுப் பணியாளர்கள், அதிகாரிகள், கட்சிக்காரர்கள், மாற்றுக் கட்சியினர் என்று லட்சக்கணக்கான அழைப்பிதழ்கள் தரப்பட்டிருந்தன. திருமணத்தை நடத்தி வைக்க முதலமைச்சர் எடப்பாடியும், துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்.ஸும் வருகிறார்கள் என்று விளம்பரப்படுத்தப்பட்டன.

ஆனால் முதல்நாள் இரவே முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் வந்துவிட்டார்கள்.

காரில் வந்த எடப்பாடியை கொள்ளிடம் அருகே ஒ.செ. நற்குணம் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரவேற்றனர்.

ரயிலில் வந்த ஓ.பி.எஸ்.ஸை ரயில்நிலையத்தில் மயிலாடுதுறை ஒ.செ. சந்தோஷ்குமார் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரவேற்றனர்.

இருவரையும் வரவேற்ற அ.தி.மு.க. நிர்வாகிகளும் கட்சியினரும், திருமண வரவேற்புக்கு வரவில்லை.

""என்னய்யா எங்களை வரவேற்க அவ்வளவு பேர் வந்திருந்தாங்க. பந்தலில் யாரையும் காணலை?'' மயிலாடுதுறை எம்.பி. பாரதிமோகனிடம் கேட்டார் ஓ.பி.எஸ்.

""நாளைக்கு கல்யாணத்துக்குத்தானே அழைப்பிதழ் கொடுத்திருக்காங்க...'' சமாளித்தார் அவர். மணமக்களுக்கு பூங்கொத்துகள் கொடுத்து வாழ்த்திவிட்டு இருவரும் கிளம்பினார்கள்.

மறுநாள்... கல்யாண நேரத்திலும் பந்தலில், கட்சியினர் இல்லை.

-க.செல்வகுமார்

இல்லாத இடத்துக்கு வழிகாட்டும் கூகுள்!

signalகுற்றாலத்தை அடுத்துள்ள செங்கோட்டையில் "ஃபன் லேண்ட் அம்யூஸ்மெண்ட் பார்க்' உள்ளது. "குழந்தைகளிலிருந்து பெரியவர்கள்வரை 24 மணி நேரமும் குதூகலிக்கலாம்' என, இணையதளத்தில் படங்களுடன் விளம்பரப்படுத்தியுள்ளனர். கூகுள் வரைபடமும் செங்கோட்டை அருகில் பிரானூர் என்ற பகுதியில் காளீஸ்வரி தியேட்டர் எதிர்புறம் ஃபன் லேண்ட் அம்யூஸ்மெண்ட் பார்க் இருப்பதாக அடையாளம் காட்டுகிறது. பல மாநிலங்களிலிருந்தும் மனைவி, குழந்தைகளுடன் உற்சாக மனநிலையில் குற்றாலம் வருபவர்கள் இந்தத் தகவலை நம்பி, கூகுள் மேப் காட்டும் திசையில் வாகனத்தைச் செலுத்துகின்றனர்.

மிகத்துல்லியமாக இங்குதான் ஃபன் லேண்ட் அம்யூஸ்மெண்ட் பார்க் உள்ளது’ என்று கூகுள் மேப் அம்புக்குறியிட்டு காட்டும் இடத்தில், அப்படி எதுவுமே இல்லை. வெட்டவெளியாகவும், வயல் காடாகவும் உள்ளது. அக்கம்பக்கத்தில் விசாரித்தால், ""அட, போங்கப்பா... உங்கள மாதிரி ஆளுங்களுக்குப் பதில் சொல்லிச் சொல்லி நாங்க ஓய்ஞ்சு போயிட்டோம். செல்போனைத் தடவித்தடவி, இன்டர்நெட்ல இருக்கிறதெல்லாம் உண்மைன்னு நம்பி வர்றவங்க நடு ரோட்டுலதான் நிக்கணும்... அதுதானே இப்ப நடந்திருக்கு''’என்று கலாய்க்கிறார்கள்.

நமது தேடலின் பலனாக ஃபன் லேண்ட் ரிஸார்ட்ஸ் மேனேஜர் ரமேஷை தொடர்புகொள்ள முடிந்தது. “ஃபன் லேண்ட் ரிஸார்ட்ஸை முஹம்மத் ஃபாரூக் என்பவரிடமிருந்து லீசுக்கு எடுத்திருக்கிறார் புளியரை ஷ்யாம். ஃபன் லேண்ட் அம்யூஸ்மெண்ட் பார்க் இன்னும் ரன்னிங் ஆகல.' எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். வலைத்தளத்திலும், கூகுள் மேப்பிலும் மோசடியான ஒரு தகவலைப் பதிவுசெய்து, இன்றுவரையிலும் மக்களை ஏமாற்றிவருவதை எப்படி அனுமதிக்க முடியும்? தமிழக அரசும், சட்டமும், குற்றாலத்தில் பொய்யான ஒரு முகவரியைத் தேடி சுற்றுலாப் பயணிகள் அலைவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

-சி.என்.இராமகிருஷ்ணன்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்