மீண்டு(ம்) வந்த ராஜேந்திரபாலாஜி!
நக்கீரன் சொன்னது நடந்திருக்கிறது...’என்கிறார்கள், விருதுநகர் மாவட்ட ஆளும் கட்சியினர். காரணம்- கடந்த ஜூன் 17-19 நக்கீரன் இதழில் அதிமுகவுக்கு 3 மா.செ.! அப்படின்னா கே.டி.ராஜேந்திரபாலாஜி?’ என்னும் தலைப்பில் வெளிவந்த கட்டுரைதான்!
அதில், தேர்தலைச் சந்திக்கும் நேரத்தில், புதிய மா.செ.க்கள் நியமனம், எந்த தரப்பிலிருந்தும் அதிருப்தியையோ, சலசலப்பையோ ஏற்படுத்திவிடக் கூடாது என்பதை கட்சித் தலைமை கவனத்தில் கொள்ளாமல் இல்லை. அதனால், விருதுநகர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டாலும், மூன்றையும் கவனித்துக்கொள்ளும் மண்டல அளவிலான பொறுப்பினை கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு தரக்கூடும் என்று குறிப்பிட்டிருந்தோம்.
கடந்த 22-3-2020 அன்று, தமிழக பால்வளத்துறை அமைச்சர், கே.டி.ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்தது. கடந்த 102 நாட்களாக, விருதுநகர் மாவட்டத்துக்கு புதிய மாவட்ட செயலாளர் யாரும் நியமிக்கப்படாத நிலையில், 3-ஆம் தேதி விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமனம் செய்யப்படும் வரை, மாவட்ட கழகப் பணிகளைக் கவனிப்பதற்கு பொறுப்பாளராக, கே.டி.ராஜேந்திரபாலாஜி நியமிக்கப்படுகிறார், என்று அறிவித்துள்ளனர். ‘அமைச்சர் பதவியும் அம்பேல்தான்...’ என, சென்னை வரை சிலர் கம்பு சுற்றிய நிலையில், இளம் வயதிலிருந்தே அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வரும் ராஜேந்திரபாலாஜி, என்ன மாயமோ செய்து, தன்னை ஒதுக்க நினைத்த கட்சித் தலைமையின் மனதில் மீண்டும் இடம் பிடித்திருக்கிறார், எதிர்க் கட்சியான திமுகவையும், குறிப்பாக மு.க.ஸ்டாலினையும், கடுமையாக விமர்சிப்பதற்கு, இவர்தான் மிகச்சரியாக இருப்பார்...’ என எடப்பாடி கணித்ததே, விருது நகர் மாவட்ட அரசியலில், மீண்டும் கே.டி. ராஜேந்திர பாலாஜியை ஏற்றம் காணச் செய்துள்ளது.
-ராம்கி
விமான சேவையை விரிவாக்கிய கனிமொழி!
இரவு நேரங்களிலிலும் இனி தூத்துக்குடிக்கு விமான சேவை உண்டு என மத்திய விமானப் போக்கு வரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி அறிவித்திருக் கிறார். இதற்கான ஒப்புதலையும் மத்திய அரசிடம் பெற்றுள்ளது விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம்.
தூத்துக்குடி விமான நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்றும், இரவு பகல் இரு வேளைகளிலும் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்க வேண்டும் என்றும் கடந்த ஒரு வருடமாக மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தார் தொகுதி எம்.பியான தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி. இதனை அடுத்து கடந்த மார்ச் மாதம் தூத்துக்குடி விமான நிலையத்தை 4-ஆம் நிலையில் இருந்து 3 நிலைக்கு தரம் உயர்த்தப்படுகிறது என மத்திய அரசு அறிவித்திருந்ததை நக்கீரன் பதிவு செய்திருந்தது. தரம் உயர்த்தப்பட்ட விமான நிலையத்தில், கொரோனா காலத்தை பயன்படுத்தி, விரிவாக்கப் பணிகள் நடைபெற்றன. இதனையடுத்தே, விமானங்கள் இரவு பகல் இரு வேளைகளிலும் தூத்துக்குடி விமான நிலையத்தில் தரையிறங்கி கிளம்பி செல்லும் உத்தரவை அமைச்சர் ஹர்தீப்சிங்பூரி தற்போது அறிவித்துள்ளார். இதன்மூலம் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட தொழில் வளர்ச்சிக்கான பயண வழி நன்மைகள் அதிகரிக்கும்.
அதிகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி தனது சொந்த மாவட்டமான சேலத்தின் மீது தனி கவனம் செலுத்தி வரும் நிலையில், தன்னை எம்.பியாக்கிய தூத்துக்குடி மக்களின் நலனில் இரவு-பகல் பாராமல் அக்கறை கொண்டு, இரவு-பகல் விமான சேவையைக் கொண்டு வந்த கனிமொழிக்கு பாராட்டு குவிகிறது.
-இளையர்
ஆர்.எஸ்.எஸ்.காரர் அப்பா கொலையில் பா.ஜ.க. பிரமுகர்!
தஞ்சை மாவட்டம் கும்ப கோணத்தை அடுத்த நாச்சியார்கோவில் மடவிளாகத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன். ஆர்.எஸ்.எஸ். மண்டலப் பொறுப்பாளராக இருந்தவர். இவரது தந்தை கோபாலன், ஓய்வுபெற்ற ஆசிரியர். பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட ஸ்ரீ108 அபிநவ உத்திராதி மடத்தின் மேலாளராக செயல்பட்டு வந்தார்.
அந்தவகையில், நாச்சியார்கோவில் பகுதியில் மடத்திற்குச் சொந்தமான 13 கடைகளையும் இவரே நிர்வகித்து வந்தார். அதில் ஒன்றில், டெய்லர் கடை நடத்திவரும் சரவணன், சமீப நாட்களாக வாடகை தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். பா.ஜ.க. நகரச் செயலாளரான சரவணன், கடையைக் காலிசெய்ய மறுத்து, அடாவடி செய்திருக்கிறார்.
ஒருகட்டத்தில் “மூணு தலைமுறையாக இந்தக் கடையை நாங்கதான் வச்சிருக்கோம். அதனால், கோர்ட்டுக்கே போனாலும் தீர்ப்பு எங்களுக்கே சாதகமா வரும். கொரோனா முடியும் வரையில் வாடகை தரமுடி யாது’என்று சரவணன் கூறியிருக்கிறார். இதனை சற்றும் எதிர்பார்க்காத கோபாலன், மடத்தின் மேல்மட்ட நிர்வாகிகளிடம் பேசிவிட்டு, சரவணனிடம் ரூ.2 லட்சம் தருவதாக பேரம் பேசியிருக்கிறார். அப்போதும் சரவணன் மசியவில்லை.
பிறகு, மடத்தின் ஆலோசனைப்படி நீதிமன்றத்தை நாடிய கோபாலன், மடத்திற்கு சாதகமாக தீர்ப்பைப் பெற்றார். அதன்படி, சரவணனிடம் கடையை காலிசெய்யுமாறு மீண்டும் வற்புறுத்தி இருக்கிறார். பேரமாகப் பேசிய பணத்தையும் கொடுக்க முடியாது என்று விரட்டியதில், ஆத்திரமடைந்த சரவணன், போதையை ஏற்றிக்கொண்டு போய் கோபாலனை வெட்டிச் சாய்த்துவிட்டார்.
ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஒருவரின் தந்தையை, பாஜக நகரச் செயலாளரே வெட்டிப் படுகொலை செய்த சம்பவம், கும்பகோணத்தை பரபரப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
-க.செல்வகுமார்