ஈஷாவுக்கு விளம்பரம் செய்யும் கோவை காவல்துறை!
கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பலநூறு ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து ஆதியோகி சிலையை நிறுவியிருக்கிறார் சாமியார் ஜக்கி வாசுதேவ். அந்த சிலையின் முகம் ஜக்கியின் சாயலிலேயே இருப்பதை பக்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதனை கோவையின் அடையாளமாக மாநகர காவல்துறை இணையத்தில் பதிவேற்றியதை நக்கீரன் ராங்கால் பகுதியில் அம்பலப்படுத்தியிருந்தோம்.
சில தினங்களுக்கு முன்பு, அந்த சிலையை கோவையின் அடையாளமாகக் காட்டி, அனைத்து ரயில்களுக்குப் பின்னாலும் ஒட்டப்பட்டது. இது கோவையின் அடையாளம் கிடையாது. எனவே உடனடியாக அகற்ற வேண்டும் என சமூகநீதிக் கட்சியின் தலைவரும், வழக்கறிஞருமான பன்னீர்செல்வம் தலைமையில் போராட்டம் நடத்திய பிறகே, இந்தப் படங்கள் அகற்றப் பட்டன. ஆனால், கோவை மாநகரக் காவல்துறையின் இணையதளப் பக்கத்தில் இன்னமும் கோவையின் அடையாளமாக அந்த சிலைதான் உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்கறிஞர் பன்னீர்செல்வம், “அரசின் முகமான காவல்துறையின் இணையதள முகப்பில், மத அமைப்புக்குச் சொந்தமான படத்தை கோவையின் அடையாளமாகக் காட்டியது கண்டனத்துக்குரியது. அரசிய லமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.
ஒருவேளை ஈஷாவுக்குள் நடக்கும் எந்த முறைகேடுகளையும், வனங்களை சிதைப்பதையும் போலீசார் தட்டிக் கேட்க மாட்டார்கள் என்று உணர்த்தும் விதமாக இப்படிச் செய்தார்களா என்று தெரியவில்லை. வன வளங்களைச் சிதைக்கும் இந்த சிலையை அகற்றவேண்டி நாங்கள் போராடுகிறோம். இதனை தங்களது இணையதளப் பக்கத்திலிருந்து உடனடியாக காவல்துறை நீக்கவேண்டும். இல்லையென்றால் காவல்துறைக்கு எதிராக போராடவும் நாங்கள் தயங்க மாட்டோம் என்றார் கோபமான குரலில்.
சட்டத்திற்குப் புறம்பாக மத அடையாளத்தை அரசு இணையதளத்தில் பயன்படுத்தலாமா? என கோவை மாநகர போலீசாரிடம் கேட்டோம். தவறுதலாக பதிவிடப்பட்டது. அகற்றிவிடுவோம் என்றார்கள். ஆனால், இப்போதுவரை அந்தப் படத்தை அகற்ற கோவை காவல்துறைக்கு மனம் வரவில்லை.
-அ.அருள்குமார்
அரைகுறையே வேண்டாம்! போராட்டத்தில் பொதுமக்கள்!
கொரோனா நெருக்கடியிலும் குடிமராமத்துப் பணிகளுக்காக சமீபத்தில் நிதி ஒதுக்கியது தமிழக அரசு. இப்படி ஒதுக்கப்படும் நிதியை, பெரும்பாலும் ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு சேரும் விதமாகவே டெண்டர் ஒதுக்கப்படுவதாக குற்றச் சாட்டு எழுந்தது. இவர்களிடம் போதுமான அனுபவமோ, பொருட்களோ இல்லாததால் பல இடங்களில் பணி கள் முழுமையாக நடப்பதும் இல்லை. அப்படியொரு அரைகுறை வேலையைக் கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச் சேரி ஒன்றியம், அபிவிருத்தீஸ்வரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி வழியாக செல்கிறது வெட்டாறு. இதில் நடைபெற்ற தூர்வாரும் பணியின்போது, ஆற்றின் ஒருபக்க கரை முழுவதும் சேதமடைந்தது. இந்தக் கரையின் வழியேதான் கொரடாச்சேரியில் இருந்து குடவாசல் செல்லும் பொதுப் போக்குவரத்து சாலை இருப்பதால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.
இந்நிலையில், பணியின்போது சேதமடைந்த கரையை சீரமைக்காமல், தூர்வாரும் பணியை திடீரென நிறுத்தி விட்டார்கள் அதிகாரிகள். வெட்டாறு இந்தப் பகுதியின் முக்கிய வடிகால். ஏற்கனவே இதன் கரை சேதமடைந்துள்ள நிலையில், மழைக்காலங்களில் அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டால், அபிவிருத்தீஸ் வரம், கமுககுடி, சிட்டிலிங்கம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படும். எனவே, நிறுத்தப்பட்ட பணிகளை உடனடியாக முடித்து, கரையை பலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணன் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.
அப்போது வந்த காவல்துறையினர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள், இரண்டே நாட்களில் பணிகளை மீண்டும் தொடங்கி, விரைவாக முடிக்கப்படும் என வாக்குறுதி அளித்தபிறகே, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
-க.செல்வகுமார்
பிறந்த தினத்திலும் கோஷ்டியாக பிரிந்த காங்கிரஸ்!
காங்கிரஸ் கட்சியையும் கோஷ்டிகளையும் பிரிக்கவே முடியாது. இதனை உணர்த்தும் விதமாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்த தினத்தையே கோஷ்டிகளாகப் பிரிந்து கொண்டாடி இருக்கிறார்கள் ஈரோடு மாவட்ட காங்கிரஸார்.
இதில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராமன் தலைமையில் நடந்தது. இவர் தற்போதைய தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரின் ஆதரவாளர். விழா தொடங்கும் முன்பு, எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பிறகு, ராகுல்காந்தி பிறந்ததினத்தை கேக் வெட்டிக் கொண்டாடாமல், கொரோனாவால் பெரும் இழப்பைச் சந்தித்திருக்கும் விவசாயிகளுக்கு உதவும் விதமாக, விவசாயிகள் பாதுகாப்பு தினமாகக் கொண்டாடப்பட்டது. இதற்காக, ஈரோடு தெற்கு மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் மரக்கன்றுகளை நட முடிவுசெய்து, தெற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் வைத்து முதற்கட்டமாக ஆயிரம் மரக்கன்று கள் வழங்கப்பட்டன. மேலும் விதைப்பொருட்கள், பனை விதைகள், அத்தியாவசியப் பொருட்களும் கொடுக்கப்பட்டது.
இதேபோல், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஆதரவாளர்கள், மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், மூலப்பட்டறையில் உள்ள ஜவகர் இல்லத்தில் வைத்து, ராகுல்காந்தியின் பிறந்த தினத்தைத் தனியாக கொண்டாடினார்கள். நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி தலைமை தாங்கினார். பிறகு விவசாயிகளுக்கு விதைகள், மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும், நசியனூர், சென்னிலமை வட்டாரம் வெள்ளோடு பகுதி விவசாயிகளுக்கும் விதைகளையும், மரக்கன்றுகளையும் வழங்கினார்கள்.
-ஜீவாதங்கவேல்