கஞ்சித்தொட்டி திறந்த நெசவாளர்கள்!

விருந்தாளியாக வந்த கொரோனா, குடும்ப உறவினர்போல தங்கிக்கொண்டு இந்தியாவைவிட்டு அகல மறுக்கிறது. ஊரடங்குக்கு மேல் ஊரடங்கால் மக்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவித்துவருகிறார்கள். இதன் ஒருகட்டமாக ஜெ.புதுக்கோட்டை நெசவாளத் தொழிலாளர்கள் கஞ்சித்தொட்டி திறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

ss

திண்டுக்கல் அருகேயுள்ள சின்னாளப்பட்டியில் உள்ள 4000-க்கு மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் சுமார் 1,500 நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளனர். கடந்த 75 நாட்களாக ஊரடங்கால் நெசவுத் தொழிலை மேற்கொள்ளமுடியாத நிலையே காணப்படுகிறது.

Advertisment

கூட்டுறவு சங்க மேலாளர்கள் தங்களிடம் உறுப்பினராக உள்ள நெசவாளர்களுக்கும் பாவு மற்றும் நூல்களை வழங்காததால் அவர்கள் வறுமையில் வாடிவருகின்றனர்.

இந்தநிலையில்தான் சின்னாளப்பட்டி அருகே உள்ள ஜெ. புதுக்கோட்டை நெசவாளர் காலனியில் சுமார் 400-க்கு மேற்பட்ட நெசவாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து புதுக்கோட்டை நெசவாளர் காலனியிலுள்ள வலம்புரி விநாயகர் கோவில் அருகே கடந்த ஒரு வாரமாக கஞ்சித் தொட்டி திறந்து நெசவாளர்கள் குடும்பங்களுக்கு தினசரி கஞ்சி ஊற்றி வருகின்றனர்.

""மாவட்ட நிர்வாகம் இந்த கொரோனா காலகட்டத்தில் நெசவாளர்களுக்கு பாவுநூல்களை வாங்கிக்கொடுத்து நெசவாளர்களை வாழவைக்க அக்கறை காட்டவில்லை. அதனால்தான் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பசிக்கொடுமையால் கஞ்சித்தொட்டி திறக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் வீடுகள்தோறும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் குதிப்போம்'' என்றார் நெசவாளர்கள் சங்கத் தலைவர் சடையப்பன். விஷயம் கைமீறிப் போனபிறகு விரைவில் நெசவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் பாவுநூல்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றிருக்கிறார் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி.

Advertisment

-சக்தி

வீணாகும் தண்ணீர்! பாழாகும் நிலங்கள்!

சிதம்பரம் தாலுகாவிலுள்ள பாசிமுத்தான் ஓடையில் வடக்கு தில்லைநாயகபுரம் அருகிலிருந்த குருமா திட்டு ஷட்டர் உடைந்து கிட்டத்தட்ட இருபது வருடங்கள் ஆகின்றன. இதனால் மீதிகுடி வாய்க்கால் மற்றும் குருமாந்திட்டு வாய்க்காலுக்கு பாயவேண்டிய நீர் விவசாயத்திற்குப் பயன்படாமல் வீணாகிக் கொண்டிருக்கிறது. இதனால் இப் பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 1800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாழாகி மானாவாரி நிலங்களாகிவிட்டன.

ss

மீதிகுடி வாய்க்காலால் பயன்பெறும் கிராமங்கள் வடக்கு தில்லைநாயகபுரம், பள்ளிப் படை, காரப்பாடி, கோவிலாம்பூண்டி, சி.கொத்தங் குடி, மீதிகுடி, சிதம்பரநாதன்பேட்டை, நவாப் பேட்டை, குண்டுமேடு ஆகிய கிராமங்களிலுள்ள விளைநிலங்கள் தரிசாகப் போய் பாழ்பட்டுள்ளது.

இந்த ஷட்டர் சரிசெய்யப்படும் பட்சத்தில் சுமார் 12,000 விவசாயக் குடும்பங்கள், தவிரவும் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். மேற் குறிப்பிட்ட கிராமங்களிலுள்ள கால்நடைகள் ஆற்றுநீர் இல்லாத காரணத்தினால் குடிக்க நீரின்றி உயிரிழக்க நேரிடுகிறது.

இதனை உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கவனத்தில்கொண்டு சரிசெய்ய வேண்டும் என்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் சித்தார்த்தன் மற்றும் அந்தப் பகுதியிலுள்ள விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

-காளிதாஸ்

குண்டாஸில் உள்ளே தள்ளப்பட்ட ரவுடி!

சேலம் சன்னியாசிகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் கடந்த மே 20-ஆம் தேதி, அப்பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியருகே நடந்துசென்றபோது, மர்ம நபர் ஒருவர் அவரிடம் கத்தியைக்காட்டி மிரட்டி செல்போன் மற்றும் ரொக்கம் ரூ 1250-ஐ பறித்துக்கொண்டு தப்பி யோடினார்.

இதுகுறித்து வெங்கடேஷ் அளித்த புகாரின்பேரில், கிச்சிப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி. காலனியைச் சேர்ந்த ஆறுமுகன் மகன் மணிகண்டன் என்ற தம்பா மணிகண்டன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைத்தனர். பிரபல ரவுடியான மணிகண்டன் ஏற்கெனவே பலமுறை வழிப்பறி, அடிதடி வழக்குகளில் கைதானவர். சிறையிலிருந்து பிணையில் விடுதலையாகும் அவர், மீண்டும் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளார்.

சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

அதன்பேரில், காவல்துறையினர் ரவுடி தம்பா மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி கைதுசெய்தனர். கைது ஆணையை சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தம்பா மணிகண்டனிடம் அளித்தனர். மணிகண்டன் இரண்டாவது முறையாக குண்டாஸ் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பட்டப் படிப்பு படிப்பவர்கள் டபுள் எம்.ஏ. தகுதிபெறுவதுபோல, மணிகண்டன் போன்றவர்கள் டபுள் குண்டாஸ், ட்ரிபிள் குண்டாஸ் என சிறைக்குச் செல்கிறார்கள்.

-இளையராஜா