பணம் கொடுத்தால் உடனே போஸ்டிங்! எஸ்.பி.யிடம் சிக்கிய மோசடி கும்பல்!
அரசு வேலை வாங்கித் தருவதாக சொல்லி, பணம் வாங்கி ஏமாற்றுபவர்களைப் பற்றிய செய்திகள் அவ்வப்போது வரும். குறுக்கு வழியில் சென்றாவது அரசு வேலை வாங்க நினைப்பவர்களால், இது வாடிக்கையாக நடக்கிறது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் டெய்சி. இவர் தனது உறவினர் ஒருவருக்கு அரசுப்பணி வாங்கித் தரச்சொல்லி ஜார்ஜ் பிலிப் என்பவரை அணுகி இருக் கிறார். டி.என்.பி.எஸ்.சி.யில் தனது நண்பர் வேலை பார்ப்பதாக அளந்துவிட்ட ஜார்ஜ் பிலிப், ஒரு வேலைக்கு ரூ.5 லட்சம் வீதம் 3 பேருக்கு மொத்தம் ரூ.15 லட்சம் டெய்சியிடம் வாங்கி இருக்கிறார். ஆனால், சொன்னபடி வேலையும் வாங்கித் தரவில்லை, அதற்காக வாங்கிய பணத்தையும் திரும்பத் தரவில்லை. டெய்சி தொடர்புகொண்டு கேட்டபோது, ""நான் வாங்கிய பணத்தைச் சென்னையைச் சேர்ந்த நாவப்பன் என்பவரிடம் கொடுத்துவிட்டேன். இனி என்னை தொடர்புகொண்டால் நடப்பதே வேறு'' என்று மிரட்டலாக பேசி இருக்கிறார் ஜார்ஜ் பிலிப்.
தாம் ஏமாற்றப்பட்டதை தாமதமாக உணர்ந்த டெய்சி, இதுதொடர்பாக ராமநாதபுரம் எஸ்.பி. வருண்குமாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, எஸ்.பி. உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் ஜார்ஜ் பிலிப்பையும், நாவப்பனையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் அதிகாரிகள் எனக்கூறி பலரிடம் பண மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. மேலும், அவர் களிடம் இருந்து அரசு முத்திரை யிட்ட போலியான சிபாரிசு கடி தங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதில், நாவப்பன் ஏற்கனவே மோசடி புகாரில் சிக்கி சிறைக்குச் சென்றவன். வெளியே வந்ததும் மீண்டும் ஆட்டத்தை அரங்கேற்றி வந்திருக்கிறான். ஏமாறுபவன் இருக்கும் வரையில் ஏமாற்றுபவன் இருக்கத்தானே செய்வான்.
-நாகேந்திரன்
""நாலு காசு பார்க்கணும்னா மோசடி செய்யணும்!''அதிகாரத்தின் திமிர்ப் பேச்சு!
அதிகாரத்தில் இருப்பவர்கள் வயிறு வளர்க்க அரசுப் பணிகளை வாய்ப்பாக்கிக் கொள்கிறார்கள். அப்படிச் செய்யாமல் இருப்பது குடும்பத்தோடு விஷம் குடிப்பதற்குச் சமம் என்று, மக்கள் பிரதிநிதிகள் இருவர் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சத்தியவாடி கிரா மத்தின் ஊராட்சி செயலாளராக இருப்பவர் அமிர்தலிங்கம். இதே கிராமத்தின் ஊராட்சிமன்றத் துணைத் தலைவராக பாண்டியன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அரசுப் பணிகள் தொடர்பாக இவர்கள் இரு வரும் பேசிக்கொள்ளும் தொலைபேசி ஆடியோவில், “அரசு வீடுகள் கட்டுதல், மினி டேங்க் அமைத்தல் போன்ற அரசுப் பணிகளில் மனசாட்சியுடன் நடந்துகொண்டால், சம்பாதிக்க முடியாது. மண்ணை வாரிக்கொட்டி மக்களை ஏமாற்றினால் மட்டுமே நாலு காசு பார்க்க முடியும் என்று பேசிக் கொள்கிறார்கள்.
மேலும், அரசுப் பணிகளை வாங்க கீழ்மட்டம் முதல் உயர்மட்டம்வரை இருக்கும் அதிகாரிகளைக் கவனிப்பதாகவும், அப்படி வாங்கிய வேலைகளை உருப்படியாக செய்தால், குடும்பத்தோடு விஷம் குடிப்பதற்கு சமம். ஆகவே, பணம் பார்ப்பதற்கான வழிகளை நானே சொல்லித் தருகிறேன் என்று ஊராட்சி செயலாளர் அமிர்தலிங்கம் சொல்கிறார்.
அதேபோல், இதே கிராமத்தில் பாஸ்கர் என்பவர் முறைகேடுகள் செய்ததால் மட்டுமே, நல்ல லாபம் பார்த்திருக்கிறார். இப்படி கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிந்துவிழும் நிலையில் இருக்கின்றன’’ என்றும் அவர் கூறுகிறார். இதுதொடர்பாக திட்ட இயக்குனர், உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கொடுத்துள்ள நிலையில் கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புச் செல்வன் உத்தரவின்பேரில் ஊராட்சி செயலாளர் அமிர்தலிங்கம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
- சுந்தரபாண்டியன்
ஆர்வக் கோளாறு ஆர்மியால் எம்.எல்.ஏ.வுக்கு சங்கடம்!
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக் குண்டு அருகேயுள்ள சேவுகம்பட்டி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிலருக்கு, அ.தி.மு.க. சார்பில் நிவாரணப் பணிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சேவுகம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து நிவாரண உதவிகள் வழங்குவதற்காக, டோக்கன் கொடுக்கப்பட்ட 130 பேருக்கு தன் பங்கிற்கு 5 கிலோ அரிசியை அனுப்பி இருந்தார் நிலக்கோட்டை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தேன்மொழி சேகர். இவரது தலைமையில் நடக்கும் விழாவென்ப தால், ஓ.பி.எஸ். ஓ.பி.ஆர். ஆர்மி அ.தி.மு.க. இளைஞ ரணி சார்பில் ஊர்முழுக்க வரவேற்பு போஸ்டர் ஒட்டினார்கள்.
இதைப் பார்த்த பொதுமக்களும், டோக்கன் இல்லாத பெண்களும் நிவாரண உதவிக்காக பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். டோக்கனோடு வந்தவர்களும், டோக்கன் இல்லாதவர்களும் நிவாரணப் பொருட்களை வாங்க முண்டியடித்ததால், தனிமனித இடைவெளி காணாமல் போனது. தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக எடுத்து வைத்திருந்த நிவாரணப் பொருட்களை, அங்கிருந்த தி.மு.க. உ.பி.க்கள் எடுத்துக்கொடுக்க முயன்ற போது, எம்.எல்.ஏ.வின் உதவியாளர் வெங்கடேசன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இறுதியில், காத்திருந்த மாற்றுத்திறனாளிகள் பலர் வெறுங்கையோடு கிளம்பினார்கள். இதில் டென்ஷனான எம்.எல்.ஏ. தேன்மொழி சேகர், நிலக்கோட்டையில் இருந்து அரிசிப் பைகளை வரவைத்து மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கிவிட்டுச் சென்றார்.
இதுவரை இல்லாத ஓ.பி.எஸ்., ஓ.பி.ஆர். ஆர்மி என்ற புதிய அமைப்பின் ஆர்வக் கோளாறான முயற்சியால், எம்.எல்.ஏ. தேன்மொழி சேகருக்கு மிஞ்சியதோ தர்மசங்கடம் மட்டும்தான். இக்கட்டான சூழலில் எம்.எல்.ஏ. உதவுவார் என்று நம்பிவந்த மக்களோ, ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றனர்.
-சக்தி