அமைச்சரின் அதிரடி!
வேலூர் மாவட் டம் ஜோலார்பேட் டையை அடுத்த சின்ன மூக்கனூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தியது பள்ளிக் கல்வித்துறை.
இதற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை 25.8.18 அன்று நடத்தியது அப்பள்ளி நிர்வாகம்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி "கல்வித்துறைக்கு எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்திலும் ஜெ. காலத்திலும் செய்த நலத்திட்டங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, அ.தி.மு.க. தொண்டர் ஒருவர், குடிபோதையின் உச்சத்தில் ரகளையில் ஈடுபட ஆரம்பித்தார்.
பேச்சை நிறுத்திய அமைச்சர், ""அவரை அப்புறப்படுத்துங்க'' என்று போலீசாருக்கு உத்தரவிட்டார். ""யோவ்! நான் கிளைக்கழகச் செயலாளர் என்னை விடுங்க...'' திமிறிய இளைஞரை இழுத்துச் சென்று அப்புறப்படுத்தியது போலீஸ்.
அதன்பிறகு மீண்டும் தனது பேச்சைத் தொடங்கிய அமைச்சர் கே.சி.வீரமணி, ""அவர் குடிச்சது அவரை ரகளைச் செய்யச் சொல்லுது. அவர்கிட்ட நீ குடிக்காதேனு நான் தடுக்க முடியாது. ஏன்னா நான் அரசாங்கத்தை நடத்தி ஆகணும். இன்னக்கி டாஸ் மாக் கடைகளின் வருமானம் முழுக்க என் துறைக்குதான் வருது. இந்த டாஸ்மாக் வருமானத்தை வச்சுதான் புது ஸ்கூல் திறக்கணும். டீச்சர்களுக்கு சம்பளம் கொடுக்கணும். குடிக்க வேணாம்ப்பானு சொன்னா அப்புறம் என் பொழப்பு கெட்டுப் போயிரும்...'' அமைச்சர் செம ஜாலிமூடில் பேசத் தொடங்கினார். கட்சியினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
சமூக வலைத்தளங்களில் பரவியதும் தான் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புக் கிளம்பியது. அறிவியல் பொழிவமைச்சர் கள் செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் வரிசையில் கே.சி.வீரமணியும் இடம்பிடித்துக் கொண்டிருக்கிறார்.
-து.ராஜா
நாறிப்போன நகராட்சி!
தமிழகத்தில் சிறந்த நகராட்சிக்கான போட்டியில் மூன்றாவது பரிசை பெற்றிருக்கிறது சீர்காழி.
சுதந்திர தின விழாவில், சிறந்த நகராட்சிக்கான முதல் பரிசை கோயில்பட்டிக்கும், இரண்டாவது பரிசை கம்பத்திற்கும், மூன்றாம் பரிசை சீர்காழிக்கும் வழங்கியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி.
""எதன் அடிப்படையில் எங்க நகராட்சியைத் தேர்ந்தெடுத்தாங்க?'' குமுறிக் கொண்டிருக்கிறார்கள் சீர்காழி மக்கள்.
""பத்து நிமிஷம் மழை பேஞ்சாப் போதும் சகதியிலயும் சாக்கடையிலும் சீர்காழி மிதக்கும். பழைய பேருந்து நிலையத்தில் நிழல்குடை கூட இல்லை. புது பேருந்து நிலையத்தில் கழிப்பறைக்குள் யாராவது நுழைய முடியுமா? சீர்காழிதான் சிறந்த மூன்றாவது நகராட்சி என்றால், மற்ற அத்தனை நகராட்சிகளும் மனிதர்கள் வாழவே முடியாத கொடூரங்கள் என்றுதான் சொல்ல வேண்டும்'' என்கிறார் சீர்காழியின் சுகாதாரத்திற்காக அடிப்படை வசதிகளுக்கான தொடர் போராட்டங் களை நடத்திக்கொண்டிருக்கும் தி.மு.க. கிள்ளை ரவீந்திரன்.
""சீர்காழியில் முப்பது வருஷம் முன்பு 30 ஆயிரம் மக்கள் வசித்தார்கள். 120 துப்புரவுத் தொழிலாளர் இருந்தனர். இப்போது ஒரு லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இப்போது 25 துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். ஆனால் 90 பேர் வேலை செய்வதாக கணக்கெழுதி பங்கு போடு வார்கள்'' என்கிறார்கள் சீர்காழி நகராட்சி ஊழியர்கள் சிலர்.
""சிறந்த நகராட்சிப் பட்டியலில் சீர்காழியின் பெயர் வந்தால், பாதாளச் சாக்கடைத் திட்டத்தில் பலனடையலாம் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் நிழலான ரமேஷ்பாபு, இந்த அவார்டுக்காக மெனக்கெட்டார், அவார்டு கிடைத்து விட்டது. ஆனால் அவர் இப்போது இல்லை'' -பரிசுக்கான காரணத்தைச் சொன்னார் ஒரு அ.தி.மு.க. பிரமுகர்.
-க.செல்வகுமார்
ஆஞ்சியோவில் இருதயப் பிரிவு!
சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், இருதயச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் டாக்டர் களுக்குள் ஏற்பட்டிருக்கும் மோதலால் இருதயப் பிரிவே சீரியஸ் கண்டிஷனில் திணறிக்கொண்டிருக்கிறது.
இந்த மருத்துவமனை இருதய நோய் சிகிச்சைப் பிரிவுக்கு டாக்டர் கண்ணன் துறை தலைவராக உள்ளார். இவருடன் டாக்டர் குணசேகரன், முனுசாமி, தங்கராஜ், பச்சையப்பன், ஞானவேல், சுரேஷ்பிரபு ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.
இவர்களில் டாக்டர் முனுசாமி மீது, டாக்டர் கண்ணன் உட்பட ஆறுபேரும் புகார்களை... டீன், கலெக்டர், மருத்துவக் கல்வி இயக்குநர், சுகாதாரத்துறைச் செயலாளர் ஆகியோருக்கு பறக்க விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
""இத்தனைபேர் இருக்கிறோம். வெளியிலிருந்து ஒரு டாக்டரை அழைத்து வந்து ஆஞ்சியோகிராம் அளிக்க வைத்தார். அரசு மருத்துவமனையில் உள்ள செயற்கை சுவாசம் அளிக்க உதவும் பேஸ்மேக்கர், ரத்தக்கட்டிகளை உறிஞ்சி எடுக்கப் பயன்படும் த்ராம்பஸ் சக்ஸன் கதீட்டர் ஆகிய உபகரணங்களை சொந்தக் கிளினிக்குக்கு எடுத்துக் கொண்டு போய் பயன்படுத்து கிறார். புற நோயாளி களுக்கு சிகிச்சையளிக்க வருவதே இல்லை. பொறுப்பாக வும் சிகிச்சையளிப்பதில்லை. அவர் ஆபரேஷன் செய்தவர் களில் பாதி பேர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர்'' என்று சகட்டுமேனிக்கு டாக்டர் முனுசாமி மீது குற்றம்சாட்டுகின்றனர்.
குற்றச்சாட்டுகள் பற்றி டாக்டர் முனுசாமியிடம் கேட்டோம்.
""சேலம் அரசு மருத்துவமனையில் நான்தான் இரண்டாவது யூனிட் சீஃப் டாக்டர். எனக்குக் கீழே ஐந்து டாக்டர்கள். யாரும் டைமுக்கு வர்றதில்லை. எல்லாரும் இங்கேயிருந்து நோயாளிகளை கடத்திட்டுப் போனாங்க. தட்டிக் கேட்டதால் என் மீது எல்லாருக்கும் வெறுப்பு'' என்றார் அவர்.
விரைவில் உயர்மட்ட விசாரணை நடக்குமென எதிர்பார்க்கிறார்கள் டாக்டர்கள். -இளையராஜா
-இளையராஜா