முன்னுதாரணச் செயல்பாடு!
கொரோனா இந்திய மக்களை வீட்டுக்குள் மட்டும் முடக்கவில்லை. பல தொழில்துறைகளிலும் வேலையிழப்பு, சம்பளக் குறைப்பு, பொருளாதார வீழ்ச்சி என பரவலான தாக்கத்தை இந்திய சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஊடகங்களில் பணிபுரியும் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் என பல்லாயிரக்கணக்கான ஊழியர்களும் பொருளாதார நெருக்கடிக்கு தப்பவில்லை.
கொரோனா வைரஸ் நெருக்கடி நேரத்தில், பணிபுரியும் செய்தியாளர்களுக்கு அரசு சார்பில் 3000 ரூபாய் இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு ஆரம்பகட்டத்தில் அறிவித்தது. ஆனால் இந்த நிதியுதவி ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த செய்தி மக்கள்தொடர்புத்துறை அலுவலகம் அங்கீகாரம் செய்த பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கப்பெற்றது.
பெரும்பாலும் மாவட்ட தலைநகரங்களில் பணிபுரியும் செய்தியாளர்களுக்கு மட்டுமே இந்தத் தொகை போய்ச்சேர்ந்தது. மாவட்டத் தலைநகரையடுத்துள்ள ஏரியா செய்தியாளர்கள், தாலுகா செய்தியாளர்கள் பலருக்கும் இந்த உதவி கிடைக்கவில்லை. ஆக பல்லாயிரக் கணக்கானோருக்கு தமிழக அரசின் நிதியுதவி கிடைக்கவில்லை..
இதை கருத்தில்கொண்ட ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்கம் தமி ழகத்திற்கே முன்னுதாரணமாக ஒரு புதிய திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. மாவட்ட தலைநகர் மற்றும் தாலுகா அளவில் அரசு நிவாரண உதவி கிடைக்காதவர்களுக்கு, சங்கத்தின் நிதியிலிருந்து தலா 2000 கொடுக்கலாம் என தீர்மானித்தது.
அதனடிப்படையில் ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்க நிர்வாகிகளான தலைவர் ரமேஷ், செயலாளர் ஜீவாதங்கவேல், பொருளாளர் ரவிச்சந்திரன் மற்றும் இதர நிர்வாகிகள் ஏற்பாட்டின்படி ஈரோடு மாவட்ட பத்திரி கையாளர்கள் நலச்சங்கத்தில் உறுப்பினராக உள்ள சுமார் 60 பேருக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது.
-ஜீவாதங்கவேல்
தாய்மனது ரொம்பப் பெரிசு!
அழையா விருந்தாளியாய் வந்து தமிழக மக்களைப் படுத்திக்கொண்டிருக்கும் கொரோனா நோயை எதிர்கொள்ள தமிழக முதல்வர், தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார். தொழில் நிறுவனர்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இப்படி வரும் நிதியுதவிகள் பல நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. அப்படியொரு சம்பவம் திண்டுக்கல்லில் நிகழ்ந்துள்ளது. திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம், அம்மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் ஆர்வத்துடன் தேடிவந்து நிதியுதவி அளித்து வருகின்றனர். அப்படித்தான் கடந்த மே 27-ஆம் தேதி கீர்த்தனா நிதியுதவி அளிக்கத் தேடிவந்தார்.
கீர்த்தனாவின் மகன் ராய்தாமஸுக்கு மே 27-ஆம் தேதி முதல் பிறந்த நாள். இதைக் கொண்டாட சிறுகச் சிறுக ரூபாய் 10000 வரை சேர்த்துவைத்திருந்தார் கீர்த்தனா. ஆனால் கொடிய கொரோனாவின் வரவால் மக்கள் அவதிப்பட்டு வருவதையும். அதை எதிர்த்து நிதிச் சிக்கலுக்கு நடுவில் தமிழக அரசு போராடிவருவது கீர்த்தனாவின் கவனத்தை ஈர்த்தது.
இதனால் தனது மகனின் பிறந்த தினத்தன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று, ""கலெக்டரிடம் “இந்த வருடம் என் மகன் ராய்தாமஸுக்கு பிறந்தநாள் கொண்டாட விரும்பவில்லை. அந்தப் பணத்தை கொரோனா நிவாரண நிதியில் சேர்த்துக்கொள்ளுங்கள்'' எனக் கூறி பத்தாயிரம் ரூபாயை அளித்தார்.
மனம்நெகிழ்ந்த கலெக்டர் விஜயலெட்சுமி. கீர்த்தனாவையும் அவரது மகனையும் பாராட்டினார்.
-சக்தி
""அவகாசம் கொடுங்க'' கலெக்டரிடம் மனு கொடுத்த தி.மு.க. எம்.எல்.ஏ.
கொரோனா ஊரடங்கு அறிவித்து கிட்டத்தட்ட இரு மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் பெரும்பான்மையான மக்கள் வேலைக்குச் செல்லமுடியாமலும் மாதாந்திரச் செலவுகளையும் சமாளிக்கமுடியாமல் தவித்துவருகின்றனர். ஆனால் தனியார் நிதிநிறுவனங்களோ இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் கடன்வாங்கியவர்களை தவணைப் பாக்கியைக் கட்டச்சொல்லி நெருக்க ஆரம்பித்துள்ளன.
இராஜபாளையம் தொகுதியில் தனியார் பைனான்ஸ், மற்றும் நிதிநிறுவனங்களில் கடன்வாங்கிய மகளிர் குழுக்களை வட்டியையும் தவணையையும் கட்டச்சொல்லி வற்புறுத்துவதாக இராஜபாளையம் திருவள்ளுவர் தெரு குழு 1-லிருந்து பொன்களஞ்சியம் என்பவர், எம்.எல்.ஏ. தங்கபாண்டியனை தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தங்கபாண்டியன், ஆசீர்வாத் மைக்ரோபைனான்ஸ் நிறுவனத்திற்கு நேரில்சென்று மேலாளர் ப்ரித்விராஜிடம் “வட்டியைச் செலுத்த மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் 3 மாதகால அவகாசம் கொடுத்துள்ளன. அதுவரை பொதுமக்களை வட்டியைச் செலுத்த வற்புறுத்தக்கூடாது’’ என கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து மேலாளர் ப்ரித்விராஜும் யாரையும் வட்டியைக் கட்டும்படி நாங்கள் வற்புறுத்த மாட்டோம் என உறுதியளித்தார்.
மேலும் இராஜபாளையம் தொகுதியில் தனியார் நிதிநிறுவனம், தனியார் வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில் கடன்வாங்கிய மகளிர் குழுக்களையும் பொதுமக்களையும், வியாபாரிகளையும் தவணை மற்றும் வட்டிகட்ட வற்புறுத்துவதைத் தடுக்கக்கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து தி.மு.க. எம்.எல்.ஏ.வான தங்கபாண்டியன் மனு அளித்தார்.
மேலும் இந்தத் தவணையை ஆறு மாதங்களுக்கு அதிகரிக்கக் கோரியும், வட்டிகளை தள்ளுபடி செய்யக் கோரியும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
-கீரன்