அதை மட்டும் செய்யாதீங்க! அதிகாரிகளின் கண்டிஷனான உத்தரவு!

கடலூர் மாவட்டம். பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சித் தலைவர்களின் அவசரக்கூட்டம் மங்களூரிலுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஆணையர்கள் தண்டபாணி, சங்கர், துணை ஆணையர்கள் பாபு, சிவக்குமார் செல்வகுமாரி, பொன்னியரசி, பொறியாளர்கள் மணிவேல், ராமச்சந்திரன் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் முக்கியமாக பெண் தலைவர்கள் உள்ள ஊராட்சிகளில் அவர்களது கணவர்கள் மற்றும் உறவினர்கள் ஊராட்சி நிர்வாகத்தில் தலையிடக்கூடாது மற்றும் நிர்வாகம் சம்பந்தப்பட்ட திட்டப்பணிகள் பயனாளிகள் தேர்வு உள்ளிட்டவற்றில் அவர்கள் தலையிடக்கூடாது, மேலும் ஊராட்சி அலுவலகத்திலுள்ள தலைவரின் இருக்கையில் சம்பந்தப்பட்ட தலைவரைத் தவிர மற்றவர்கள் அமரக்கூடாது என அதிரடியான அறிவிப்புகளை ஆணையர்கள் வெளியிட்டனர்.

அதேபோல் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வுசெய்தல், சிமெண்ட் சாலை அமைத்தல், கிணறு அமைத்தல் ஆகிய பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சித் தலைவர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் அதன் செயல்பாடுகள் பற்றிய வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டது. பெண்கள் தலைவர்களாக உள்ள ஊராட்சிகளில் ஆண்கள் தலையீடு இல்லாமல் இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார்கள் கிராம மக்கள்.

Advertisment

-எஸ்.பி.சேகர்

தொல்லை தந்த மனைவி வீட்டார்! தூக்கில் தொங்கிய கணவன்!

s

Advertisment

வழக்கமாக புகுந்தவீடு தொல்லை தாங்காமல் பெண் தற்கொலை செய்வார். போலீசார் அதன் பின்னணி என்னவென விசாரணை செய்வர். திருச்சி அரியமங்கலத்தில் பெண்வீட்டார் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்வதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு கணவர் இறந்துள்ளது அதிர்ச்சியைத் தந்துள்ளது. திருச்சி அரியமங்கலம் வேலாயுதம் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மகன் பிரபு. 27 வயதான இவர் காமராஜர் நகர் பகுதியில் இனிப்புக் கடை நடத்தி வருகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தாமினி என்பவரோடு திருமணம் நடந்து 7 மாத ஆண் குழந்தை உள்ளது.

கடந்த மே 21 ஆம் தேதி வீட்டில் யாருமில்லாத சமயத்தில் பிரபு தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தியபோது, பிரபுவின் அறையில் கடிதமொன்று சிக்கியது.

அதில் குழந்தை பிறந்த 10 நாளில் என் மனைவி என்னிடமிருந்து பிரிந்துவிட்டார். என் குழந்தையைப் பார்க்கச் சென்றால் காட்டமறுக்கின்றனர். என் மனைவியின் அத்தை சந்திரா என்னிடம் நாங்கள் 10 பேரும் அரசு வேலையில் இருப்பவர்கள். நாங்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று மிரட்டினர்.

கடந்த 20ம் தேதி சமாதானம் பேசி இருவரையும் வாழ வைக்கிறோம் என்று கூறினார்கள். அடுத்த நாளே மதியம் வீட்டுக்கு வந்து என்னிடம் இருந்த டூவீலர், செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு என் குடும்பத்தை அழித்துவிடுவதாக மிரட்டினர். என் குடும்பத்தைக் காப்பாற்ற வேறு வழியில்லாத காரணத்தால் நான் வீரமரணம் அடைகிறேன் என்றும், வேறுபல விஷயங்களையும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து அரியமங்கலம் போலீசார் தாமினி மற்றும் குடும்பத்தார்மீது வழக்குப் பதிந்துள்ளனர்.

-ஜே.டி.ஆர்.

பழைய விரோதம்! புதிய க்ரைம்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எழுத்தராக இருப்பவர் ராமச்சந்திரன். இவருக்கும் அதே பகுதியில் உள்ள மருதங்குடியைச் சேர்ந்த அ.தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர் அலெக்சாண்டர் என்பருக்கும் நடந்துமுடிந்த உள்ளாட்சி தேர்தலில் பகை ஏற்பட்டு தற்போது வரை உரசல் இருந்துள்ளது.

இந்நிலையில் திடீரென ராமச்சந்திரன் வீட்டில் இருப்பதைத் தெரிந்துகொண்ட அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் அலெக்சாண்டரும், அவரது சகோதரர் நேதாஜி உள்ளிட்ட மூன்று பேரும் வீடு புகுந்து ராமச்சந்திரனை தரக் குறைவாக பேசி மிரட்டினர். வாய்த்தகராறாக இருந்தது பிறகு வன்முறையாகி அரிவாளால் வெட்டி, இரும்பு பைப்பால் தாக்கியுள்ளனர்.

இதில் காயமடைந்த ராமச் சந்திரனை அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தலையில் பலத்த காயம் இருந்ததால் பதினெட்டு தையல் போடப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக வைத்தீஸ்வரன்கோவில் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் அலெக்ஸாண்டரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தலைமறைவான இருவரைத் தேடி வருகின்றனர்.

-க.செல்வகுமார்