சிக்கிய கள்ளநோட்டுக் கும்பல்!

நாய் வாலைக்கூட நிமிர்த்திவிடலாம். கள்ளநோட்டுக் கும்பலை முற்றிலும் முடக்குவதுதான் சாத்தியமில்லாதது. இந்தியா முழுவதும் கள்ளநோட்டுக் கும்பல் பிடிபட்டுச் சிறை செல்வதும், பிறகு புதியதொரு கும்பல் அந்த வேலையில் இறங்குவதும் வாடிக்கையானது தான்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகிலுள்ள மூங்கிதானப்பட்டி கிராமத் திலுள்ள டாஸ்மாக் கடையில் மே 16-ஆம் தேதி கீழதுருவாசகபுரம் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் மது வாங்கிக்கொண்டு இரண்டு 200 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தார். அந்தத் தாள்கள்மீது சந் தேகப்பட்ட டாஸ்மாக் முருகானந்தம் ரகசியமாகத் திருமயம் போலீசாருக்குத் தகவல்சொல்ல அங்குவந்த போலீசார் சந்தோஷ்குமாரைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து ஒழுகப்பட்டி சின்னையா மகன் ராமச்சந்திரன், திருமயம் முகமது இப்ராகிம், நசுருதீன் ஆகியோரைக் கைதுசெய்ததுடன், சென்னை வில்லிவாக்கம் சுரேஷையும் கைதுசெய்து அவரிடமிருந்த ரூ 49,900 மதிப்பிலான கள்ளநோட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisment

அவர் கொடுத்த தகவலின்பேரில் நாகர்கோயில் மணிகண்டனைக் கைதுசெய்து அவரிடமிருந்த ரூபாய் 64,91,540 மதிப்பிலான கள்ளநோட்டுகளையும், ஒருபக்கம் மட்டும் அச்சடிக்கப்பட்ட ரூபாய் 3 லட்சத்திற்கான கள்ளநோட்டுகளையும் போலீசார் கைப்பற்றினர். கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்திய இயந் திரங்களையும் அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர்.

இதேபோல கொத்தமங்க லத்தில் ஒரு வங்கியில் கடந்த வாரம் ஒருவர் ரூபாய் 8 ஆயிரத்திற்கான கள்ளநோட்டுகளை வங்கியில் செலுத்தியுள்ளதாகவும் அதுபற்றி வங்கி அதிகாரிகள் கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார்கொடுக்க தயாராகி யுள்ளதாகவும் கூறப்படுகிறது.

-பகத்சிங்

Advertisment

கவனத்தை ஈர்த்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!

signal

உலகம் முழுவதும் கொரோனாவால் மக்களும் அரசுகளும் முன்னெப்போதுமில்லாத சிரமங்களை அனுபவித்துவருகின்றனர். இந்நிலையில் மத்திய பா.ஜ.க. மோடி அரசு, மக்களின் வாழ்வாதாரம் பற்றிய சிந்தனை யில்லாமல் நாட்டில் வாழும் கோடிக்கணக்கான மக்களை வீதியில் அலையவிட்டு, அவர்களின் துன்ப துயரங்களை வேடிக்கை பார்க்கிறதென என பா.ஜ.க அரசுமீது குற்றச்சாட்டுகளை வைத்து இந்தியா முழுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மே 19-ஆம் தேதி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

கொரோனா கால நெருக்கடி களைச் சமாளிக்க தொழிலாளர்கள் அனைவருக்கும் ரூ 10,000 நிவாரணம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தை பலவீன மாக்கக்கூடாது, புலம்பெயர்ந்த தொழிலாளர் அனைவரும் பாது காப்புடன் அவரவர் ஊர்திரும்ப நடவடிக்கை, தொழிலாளர் நலச் சட்டங்களை சீர்குலைக்கக்கூடாது, ஓய்வுதியம் பெறுவோர், முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கவேண்டும், டாஸ்மாக் கடைகளைத் திறந்து நோய்த்தொற்றை பரப்பக்கூடாது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன் வைத்து கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் செய்தது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம், தாளவாடி என 27 இடங்களிலும் தமிழகம் முழுக்க நூற்றுக்கணக் கான ஊர்களிலும் கம்யூனிஸ்டுகள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

-ஜீவா தங்கவேல்

சிறுவன் பலி! சிக்கிய மருந்துக் கடைகள்!

சேலம் அன்னதானப் பட்டி வள்ளுவர்நகரைச் சேர்ந் தவர் கருப்பண்ணன். இவருடைய மகன் அஜித்குமார் கடந்த 15- ஆம் தேதி தனது நண்பர்கள் மூவருடன் வெளியே சென்றுவிட்டு, வீட்டிற்கு போதையேறிய நிலையில் தள்ளாடிய படி வந்துள்ளான். தனக்கு மயக்கம் வருவதுபோல் இருப்பதாக பெற் றோரிடம் கூற, பெற்றோர் 108 ஆம்புலன்சுக்குத் தகவல் கொடுத் துள்ளனர். ஆம்புலன்ஸ் வாகனம் வீட்டுக்கு வந்துசேர்ந்த நிலையில், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல்நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. ஆய்வாளர் சரவணன் விரைந்துசென்று சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். முதல்கட்ட விசாரணையில், சிறுவன் அஜித்குமார், தனது நண்பர்களுடன் போதைக்காக வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டப் பயன்படுத்தப்படும் சொலூசன், பெயிண்டில் கலப்பதற்காக பயன்படுத்தக் கூடிய தின்னர், தூக்க மாத்திரை ஆகியவற்றை நீரில் கலக்கிக் குடித்துள்ளதோடு, உடம்பில் போதை ஊசியும் செலுத்தியிருப்பது தெரியவந்தது.

போலீஸ் விசாரணையில் கொண்டலாம்பட்டி, தாதகாப்பட்டி கேட் பகுதிகளிலுள்ள இரண்டு மருந்துக் கடைகளில் அஜீத்குமாரும் நண்பர்களும் இருதய நோயாளிகள் வலிதெரியாமல் இருப்பதற்காக விழுங்கக்கூடிய, 160 ரூபாய் மதிப்புடைய மாத்திரைகளை 1,600 ரூபாய்க்கு வாங்கியுள்ள தும், கடை ஊழியர்கள் அவற்றை விதிமுறைகளை மீறி விற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த சேலம் மண்டல மருந்துக் கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் குருபாரதி மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் சம்பந்தப்பட்ட மருந்துக் கடைகளில் நேரில் விசாரணை நடத்தினர். அவர்கள் சிறுவர்களிடம் மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு இல்லாமலேயே போதை மாத்திரை, ஊசி மற்றும் மருந்துகளை விற்றிருப்பது உறுதியானது.. அந்த இரு மருந்துக் கடைகள்மீது மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, அன்னதானப்பட்டி காவல்துறையினர், மருந்துக் கடைகளின் உரிமையாளர்களைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். இறந்த சிறுவனின் உடற்கூறாய்வு அறிக்கை வந்ததும், மருந்துக் கடை உரிமையாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது காவல்துறை.

-இளையராஜா