நக்கீரன் முயற்சியால் மீண்டுவந்த தொழிலாளர்கள்!

நாகை மாவட்டம் சீர்காழி பகுதியிலிருந்து, கேரள மாநிலத்திற்கு ஏராளமானோர் செங்கல் அறுக்கும் வேலைக்காக செல்வது வழக்கம். அதன்படி, ஆலப்புழா, கிழக்காஞ்சேரி பகுதிக்கு எடமணல், வருஷபத்து, திருவெண்காடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து வேலைக்காக சென்றிருந்த தொழிலாளர்கள், ஊரடங்கால் வேலையின்றி வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்தனர்.

snn

‘அன்றாட உணவுக்கே வழியில்லாம தவிக்கிறோம்’ என்று அவர்கள் கண்ணீரோடு வீடியோ எடுத்து, நமக்கு அனுப்பினர். உடனடியாக நம் தரப்பிலிருந்து சீர்காழி எம்.எல்.ஏ. பாரதி, கலெக்டர் பிரவீன் மற்றும் சில அதிகாரிகளுக்கு இதனைத் தெரியப்படுத்தினோம். சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் உதவி செய்திடவும் கேட்டுக் கொண்டோம்.

Advertisment

அவர்களின் கண்ணீர் வீடியோவைப் பார்த்து மனம்நொந்த சீர்காழி எம்.எல்.ஏ. பாரதியும், நாகை கலெக்டர் பிரவீனும் உடனடியாக களப்பணியில் இறங்கினார்கள். கலெக்டர் கேட்டுக்கொண்டபடி, கேரளாவில் தவிக்கும் தொழிலாளர்களான எழிலரசி, குமார் ஆகியோரின் தொடர்புஎண்ணை வாங்கிக் கொடுத்தோம். இதையடுத்து, அரசு நடைமுறைகளைப் பின்பற்றி தொழிலாளர்களை மீட்டு, கடந்த 8ந்தேதி சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர்.

கேரளாவில் இருந்து மீண்டுவந்த தொழிலாளர்கள் பேசுகையில், “இனி அரைவயிற்று கஞ்சி குடித்தாலும் உறவுகளோடும், பெற்ற பிள்ளைகளோடும் குடிப்போம். எங்கள் துயர் தீர்த்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக எங்களைப் பற்றிய தகவலை சரியான இடத்தில் தெரியப்படுத்தி, மீட்க உதவிய நக்கீரனுக்கு மனமார்ந்த நன்றி’’ என்று நெகிழ்ச்சியுடன் வாழ்த்தினர்.

நமது கோரிக்கையை ஏற்று, அடுத்த நிமிடமே தொழிலாளர்களை மீட்க ஏற்பாடுகளை மேற்கொண்டு, மீட்டுக் கொண்டுவந்த சீர்காழி எம்.எல்.ஏ. பாரதியையும், ஆட்சியர் பிரவீனையும் நக்கீரன் மகிழ்வோடு வாழ்த்துகிறது.

Advertisment

க.செல்வகுமார்

அமைதியாகப் போராடினால் அடாவடி கைது!

ஊரடங்கு கெடுபிடிகளுக்கு மத்தியில், டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் தமிழக அரசின் முடிவை பலரும் ரசிக்கவில்லை. தாய்மார்களே தன்னெழுச்சியாக போராட்டத்தில் குதித்தார்கள். அப்படி, மதுக்கடைகளைத் திறப்பதற்கு எதிராக வீட்டுமுன்பு அமைதியாகப் போராடியவர்களைக் கைதுசெய்து சிறையில் தள்ளியிருக்கிறது ஈரோடு காவல்துறை.

signl

கடந்த 06ந்தேதி ஈரோடு எஸ்.எஸ்.பி.நகரைச் சேர்ந்த சிலர், மதுக்கடைகளைத் திறக்க வேண்டாம் என்று எழுதப்பட்ட அட்டைகளை பிடித்தபடி புகைப்படம் எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இதையறிந்த போலீசார், புகைப்படத்தில் இருந்த மூன்று ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என தலா இரண்டுபேரை வடக்கு காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றனர். மாலைவரை அவர்களைத் தீவிரவாதிகளைப் போல விசாரித்து, சிறுவர்கள் உள்ளிட்ட மூவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.

மீதமிருந்த 80 வயது முதியவர் உட்பட நான்குபேரில், இரண்டு பெண்களை கோவை மத்திய சிறையிலும், மற்றவர்களை ஈரோடு சப்-ஜெயிலிலும் இரவோடு இரவாக அடைத்திருக்கிறார்கள். இந்தக் கைது நடவடிக்கைக்கு எஸ்.பி. சக்திகணேசன் கூறும் காரணம், “144 தடை உத்தரவு இருக்கும் நிலையில், சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல், போராட்டம் நடத்தினார்கள்’’ என்பதுதான்.

“‘உணவுக்கே வழியில்லாத காலத்தில் மதுக்கடைகளைத் திறந்தால், அது குடும்ப வன்முறைக்கு வழிவகுக்கும். எனவே டாஸ்மாக் வேண்டாம்’ என்றுதானே அமைதியாகப் போராடினார்கள். இத்தனைக்கும் அவர்கள் ஏழை விசைத்தறி தொழிலாளர்கள். இதை சட்டவிரோதமாக நினைத்து கைது செய்ததில் நியாயமே இல்லை’’ என்று ஈரோடு காவல்துறையைச் சேர்ந்தவர்களே குமுறு கிறார்கள்.

வழக்கறிஞர்கள் சுபாஷ், ப.பா.மோகன் ஆகியோரின் முயற்சியால், சிறையில் அடைக்கப்பட்ட நான்குபேரும் ஜாமீனில் விடுதலை பெற்றுள்ளனர். டாஸ்மாக் மூலம் கொரோனா பரவலுக்குக் காரணமான அரசுக்கு என்ன தண்டனை.

- ஜீவாதங்கவேல்

தகவல் கொடுத்தவரை மாட்டிவிட்ட போலீஸ்!

ஊரடங்கில் மது விற்பனை தடைப்பட்டதில் இருந்து, கள்ளச்சாராய விற்பனை மீண்டும் தலையெடுத்திருக்கிறது. கடந்த 40 sநாட்களில் திருவண்ணாமலை மாவட் டத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்டோரைக் கைது செய்திருக்கிறது காவல்துறையின் சிறப்புப்படை.

இப்படி போளூர் அடுத்த விளாப்பாக்கம் கிராமத்தில் சாராயம் காய்ச்சுவது தொடர்பாக தகவல் கொடுத்த ஊராட்சிமன்றத் தலைவர் மீதே தாக்குதல் நடந்திருக்கிறது. விளாப்பாக்கம் ஊராட்சிமன்றத் தலைவரான நாகராஜ் இதுதொடர்பாக கொடுத்துள்ள புகாரில், “சாராயம் காய்ச்சியது குறித்து எதற்காக போலீசுக்கு தகவல் கொடுத்தாய் என்று விளாப்பாக்கத்தைச் சேர்ந்த குமார் என்னை செல்போனில் மிரட்டினார். பிறகு அவரது கூட்டாளிகளுடன் வந்து, வீட்டிலிருந்த என்னைத் தாக்கியதோடு, பொருட்களையும் அடித்து நொறுக்கினார்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி நாகராஜிடம் நாம் பேசியபோது, “என்னைத் தாக்க முயல்வதாக நான் போலீசுக்கு தகவல் சொன்னதும், ஒரு எஸ்.ஐ. வந்தார். அவர் முன்னிலையில் வைத்தே என்னைத் தாக்கினார்கள். கொலை மிரட்டலும் விடுத்தார்கள். இதுகுறித்து நான் புகார் கொடுத்தேன். சாராய கும்பலும் புகார் தந்தது. இரண்டையும் வாங்கிக்கொண்டு, பேசி தீர்த்துக்கொள்ளச் சொன்னார்கள். இந்த சாராய கும்பலைச் சேர்ந்தவரின் உறவுக்காரப் பெண், அதே ஸ்டேஷனில் போலீசாக இருக்கிறார். அவர் மூலமாகவே, நான் காவல்துறைக்கு தகவல் சொன்னது, சாராய கும்பலுக்கு தெரிந்திருக்கிறது. உயரதிகாரிகள் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்றிருக்கிறேன்’’ என்றார்.

சமூகக் கேடுகள் பற்றி தகவல் கொடுப்பவர்களை, காவல்துறையைச் சேர்ந்தவர்களே உள்நோக்கத்துடன் மாட்டிவிடுவதால்தான், காவல்துறை மீதான நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் குறைந்திருக்கிறது.

து.ராஜா