ஏட்டும் 8 கிலோ இறாலும்!

திருச்சி மாவட்டம் லால்குடியில் தடையை மீறி ஆட்டிறைச்சி விற்றவரிடம் 15 கிலோ இறைச்சியைப் பறிமுதல் செய்த லால்குடி காவல்நிலைய எஸ்.ஐ. சதீஸ்குமார், அதை ஸ்வாஹா செய்த சம்பவம் பரவலாகப் பேசப்பட்டது.

signal

தற்போது எஸ்.ஐ. சதீஸ்குமார் மணப்பாறைக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ள நிலையில், அதே லால்குடி ஸ்டேஷனைச் சேர்ந்த ரைட்டர் செல்வராஜ் பிரச்சனையில் சிக்கியிருக்கிறார்.

Advertisment

கடந்த சில தினங்களுக்கு முன்பு, லால்குடி மீனவத் தெருவைச் சேர்ந்த கார்த்தி என்பவர், கொள்ளிடம் ஆற்றில் 8 கிலோ இறால்மீன் பிடித்து வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். அதை மோப்பம் பிடித்து கார்த்தியின் வீட்டிற்கு வந்த ரைட்டர் செல்வராஜ், அங்கிருந்த பெண்களைத் தகாத வார்த்தையில் திட்டியதோடு, கார்த்தியைக் கூட்டிச்சென்று லாக்கப்பில் வைத்து முரட்டுத்தனமாக தாக்கி இருக்கிறார்.

இதற்கிடையே, கார்த்தியின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 8 கிலோ இறாலையும், ரைட்டர் செல்வராஜ் ஸ்வாஹா செய்திருக்கிறார். இதேபோல், அந்தப் பகுதியில் இருக்கும் சந்தையில் கடை போட்டிருப்பவர்களிடமும் ரைட்டர் செல்வராஜ் அடாவடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கவனத் துக்கு சென்ற நிலையில், லால்குடி மற்றும் முசிறி டி.எஸ்.பி.க்களிடம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட வர்களின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு, ரைட்டர் செல்வராஜை திருச்சி ஆயுதப்படைக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்ய திருச்சி எஸ்.பி. ஜியாவுல்-ஹக் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

கொரோனா சமயத்தில் இரவுபகல் பார்க்காமல் உழைக்கும் காவலர்களுக்கு மத்தியில், செல்வராஜைப் போன்ற தவறான முன்னுதாரணக் காவலர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

-ஜெ.டி.ஆர்.

தீட்சிதர்களின் திடீர்ப் பாசம்!

signal

கொரோனா அச்சுறுத்தலைக் காட்டிலும் பசி, பட்டினி, வறுமைதான் உலக மக்களை அதிகம் வாட்டிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் தமிழகத்திலும் அரசு கொடுத்திருக்கும் உதவியால் அரை வயிற்றை நிரப்பிவிட்டு, அமைதியாக இருக்கிறார்கள் விளிம்புநிலை மக்கள். அதுகூட கிடைக்காத மக்களுக்கு தன்னார்வலர்கள் சிலர் செய்யும் உதவிதான் இப்போதைக்கு ஆறுதலாக இருக்கிறது. அந்த வகையில், உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் அக்கம்பக்கத்து கிராம மக்களுக்கு உதவி வருகிறார்கள்.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்றாலும், தினந்தோறும் அபிஷேகம், தீபாராதனைகள் தொடர்ந்து நடக்கின்றன. அப்போது நடராஜருக்கு படைக்கப்படும் பிரசாதங்களை, சிதம்பரம் நகரம் மற்றும் அருகாமை கிராமங்களான சி.கொத்தங்குடி, வக்கராமாரி, கவரப்பட்டு பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வழங்கி வருகிறார்கள் சிதம்பரம் தீட்சிதர்கள்.

தினந்தோறும் இரண்டுவேளை உணவு சிதம்பரம் தீட்சிதர்களால் தடையில்லாமல் கிடைப்பதைக் கேள்விப்பட்ட, மற்ற கிராம மக்களும் உணவு கேட்டு கோரிக்கை வைத்துள்ளார்கள். ஏற்கனவே சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் முன்னனுமதி பெற்றுள்ள நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தைக் கணக்கில் கொண்டு பாஸ்கர தீட்சிதர் மற்றும் கோவில் தீட்சிதர்களே நேரில் சென்று உணவு வழங்குவது மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினர் உள்ளிட்டோருக்கும் தீட்சிதர்கள் உணவு வழங்கி வருகிறார்கள்.

- காளிதாஸ்

செவிலியர்களைப் பரிதவிக்க விட்ட அரசு!

signal

வேலூர் மாவட்டத்தில் 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மட்டுமின்றி, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலரும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுடன், 44 செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர். இவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை ஏழு நாட்கள் அரசு காப்பகத்தில் தனிமையில் இருக்கவேண்டியது அவசியம். அதன்படி, 28ந்தேதி பணிமுடித்து வெளியே வந்த 40க்கும் மேற்பட்ட செவிலியர்கள், தனிமைப்படுத்திக்கொள்வதற்கு தங்கும் விடுதிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமோ, மருத்துவக் கல்லூரி நிர்வாகமோ செய்து தரவில்லை.

இதனால், செய்வதறியாமல் தவித்துப் போன செவிலியர்கள், அடுக்கம்பாறை பகுதியிலிருக்கும் பேருந்துநிலையத்தில் ஒடுங்கி நின்றனர். அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க. மத்திய மா.செ.வுமான நந்தகுமார், ""கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பணியில் மருத்துவர்களுக்கு இணையாக செவிலியர்கள் பங்காற்றுகிறார் கள். அவர்கள் பணிமுடிந்து வீட்டிற்குக் கிளம்பும் முன்பாக, தனிமைப்படுத்திக் கொள்ள விடுதி ஏற்பாடு செய்து தந்திருக்க வேண்டியது மாவட்ட மற்றும் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் கடமை. அதைச் செய்யாமல் விட்டதோடு, போக்குவரத்து வசதிகூட செய்து தராமல் அலட்சியம் காட்டிய அரசையும், சுகாதாரத்துறை யையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்'' என்றார் கோபமான குரலில்.

செவிலியர்களின் அரும்பணியைப் பாராட்டாவிட்டாலும் சரி. அவர்களுக்கு எந்த உதவியையும் செய்து தராமல் தவிக்கவிடுவது அரசுக்கே நியாயமா என்கிறார்கள், அப்பகுதி மக்கள்.

- து.ராஜா