குடல் குழம்பும் ரத்தப் பொரியலும்!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அமைந்திருக்கிறது வைகை அணை. நிரம்பிய வைகை அணையிலிருந்து தேனி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுர மாவட்டங்களின் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்காக வந்தார் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். அமைச்சர் சீனிவாசன் வத்தலக்குண்டு வழியாகத்தான் வந்தாக வேண்டும் என்பதால், அவருக்குப் பிடித்தமான குடல் குழம்பும், ரத்தப் பொரியலும், இட்லி, தோசையும் காலைப் பலகாரத்திற்கு செய்து வைத்து காத்திருந்தார் வத்தலக்குண்டு ந.செ. பீர்முகம்மது ""அருமை.. அருமை... வரும் வழியில் சாப்பிடுகிறேன்'' என்று கூறினார் அமைச்சர்.
ந.செ. பீர்முகம்மதுவுக்கும் ஒ.செ.பாண்டிக்கும் ஒத்து வராது. பீர்முகம்மது செய்திருக்கும் குடல் குழம்பு, ரத்தப் பொரியலை அமைச்சர் சாப்பிடக்கூடாது என்று திட்டமிட்ட பாண்டி பைபாசுக்கு முன்பே காத்திருந்து அமைச்சர் காரை வழிமறித்து, அவர் காரில் ஏறிக்கொண்டு ""அண்ணே! நகரம் பீர்முகம்மதுவைக் காணலை. அவர் டேமுக்கு போயிருப்பார்'' என்று கூறி அழைத்துப் போய்விட்டார்.
ஒ.செ. பாண்டி, அமைச்சரை தடுத்து, திசைமாற்றி அழைத்துப் போவதை அறிந்த ந.செ. பீர்முகம்மது தனது காரில் டேமுக்கு விரைந்தார். அமைச்சர் கண்முன்னால் பாண்டியோடு சண்டை போட்டார். வாக்குவாதம் தடிப்பதைக் கண்ட அமைச்சர் ""சரி விடுங்கப்பா... பங்ஷன் முடிஞ்சதும் போற வழியில ந.செ. வீட்ல குடல் குழம்பு இட்லியை ஒரு பிடி பிடிச்சுடுறேன்'' என்று சமாதானப்படுத்தினார்.
சொன்னபடியே குடல் குழம்பு விருந்துக்குப் போய், ருசித்துச் சாப்பிட்டார்.
-சக்தி
கொடியேற்றத் தடை!
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் எம்.எல்.ஏ. ஜெயந்தி, ஆம்பூர் எம்.எல்.ஏ. பாலசுப்ரமணியம், சோளிங்கர் எம்.எல்.ஏ. பார்த்திபன் ஆகியோர் அ.ம.மு.க. தினகரனோடு அணிவகுத்து நிற்பவர்கள்.
நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக வேலூர் மாவட்டத்திற்கு வந்த அ.ம.மு.க. தினகரன், ""அமைச்சர் வீரமணி செய்த ஊழல், சேர்த்த சொத்து, அடித்த மணற் கொள்ளைக்கான தகவல்களும் ஆதாரங்களும்'' தன்னிடம் உள்ளதாகப் பேசினார்.
23.12.18 அன்று பேரணாம்பட்டு ஒ.செ. பிரபுவின் இல்லத்தில் நடக்கும் திருமணத்திற்கு வரும்போது, குடியாத்தம் நகரில் கட்சிக் கொடியை ஏற்ற வேண்டும் என்று தினகரனிடம் ஒப்புதல் பெற்றனர் அ.ம.மு.க.வினர்.
குடியாத்தம் லட்சுமி தியேட்டர் எதிரில், கட்சிக் கொடிக்காகப் பீடம் அமைத்தனர். போலீஸ் வந்தது. ""இங்கே, கொடிக்கம்பம் ஊன்றக்கூடாது. எல்லாக் கட்சிகளின் கொடிகளும், எம்.ஜி.ஆர். சிலையருகே தானே பறக்கின்றன. அங்கே ஏற்றுங்கள்'' என்று அந்தப் பீடத்தை இடித்துவிட்டுப் போனார்கள்.
போலீஸ் சொன்னபடி எம்.ஜி.ஆர். சிலையருகே புதிய பீடம் அமைத்தார்கள். அதையும் இடித்தது போலீஸ். அங்கு வந்த முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் ""அத்தனை கட்சிகளின் கொடிகளும் பறக்குது. அ.ம.மு.க. கொடி மட்டும் பறக்கக்கூடாதுனா என்ன அர்த்தம். தலைவரை அழைத்து வந்து ஏற்றிக்காட்டுவோம்'' சவால்விட்டார்.
23.08.18 அன்று திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக குடியாத்தம் வந்த டி.டி.வி.தினகரன், எம்.ஜி.ஆர். சிலையருகே இரவு 7 மணிக்கு அதிரடியாக கம்பத்தை ஊன்றச் செய்து அ.ம.மு.க. கொடியை ஏற்றிவிட்டுப் போனார். இதை எதிர்த்து 7:30 மணிக்கு முன்னாள் கவுன்சிலர் மாயாபாஸ்கர் தலைமையிலான அ.தி.மு.க.வினர் சாலை மறியல் செய்தனர். 8 மணிக்கு வந்த போலீசார், தினகரன் ஏற்றிய கொடிக்கம்பத்தைப் பிடுங்கிக்கொண்டு போனார்கள்.
-து.ராஜா
சரிந்தன கலசமும் அம்மனும்!
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள அருள்மிகு மகாலிங்க சுவாமி கோயில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானது.
இக்கோயிலில், ஆடி மாதத்தில் நடந்து கொண்டிருந்த பூரணத் தேரோட்டம் புகழ்பெற்ற ஒன்றாகும். இத்தேரின் சக்கரங்கள் பழுதடைந்ததால், 1932ஆம் ஆண்டிலிருந்து ஆடிப்பூரணத் தேரோட்டம் நின்று போனது.
மரத்தால் செய்வதால் அடிக்கடி பழுதுபடுகிறது என்று, இரும்பால் தேர் செய்து இழுக்கலாம் என்ற முடிவுக்கு வந்தது திருவாவடுதுறை ஆதீனம். இதையறிந்த, பக்தர்கள் பலர் ""அய்யா! தேர் என்றால் மரத்தால் கலாபூர்வமாக அமைக்க வேண்டும். ஒரு எந்திரம் போல இரும்பால் செய்வது தெய்வ குற்றமாகிவிடும். ஏதாகிலும் விபரீதத்தை உண்டாக்கிவிடும். ஆதீனம் நன்கு யோசிக்க வேண்டும்'' என அன்றைய ஆதீனகர்த்தா அம்பலவாண தேசிகரிடம் முறையிட்டனர்.
""அட விடுங்கப்பா மரமும் இரும்பும் பூமியில் இருந்துதான் விளையுது'' என்று கூறிய ஆதீனம், மூகாம்பிகை வடிவில் இரும்பாலான தேர் செய்ய உத்தரவிட்டார். தேரும் உருவானது. வெள்ளோட்டமும் நடந்தது.
86 ஆண்டுகளுக்குப் பிறகு, திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோயில் இரும்புத்தேர் ஆதீனம் கொடியசைக்கப் புறப்பட்டது. 100 மீட்டரைத் தாண்டுவதற்குள் தேர் மீதிருந்த கவசம் ஒருபுறமும், தேரில் இருந்த அம்மன் ஒருபுறமும் சரிந்தன. திடுக்கிட்டார் ஆதீனம்.
4 மணிநேரப் போராட்டச் சரிபார்ப்பிற்குப் பிறகு, சரி செய்யப்பட்டு மீண்டும் தேரிழுக்கப்பட்டது; மக்கள் காத்திருக்கவில்லை.
-க.செல்வகுமார்