தனிமைப்படுத்தியதில் குழப்பம்! பெண்ணுக்கு தொற்று!

டெல்லி சென்று திரும்பிய, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த 8 பேர், கடந்த ஏப்ரல் 1ந்தேதி முதல் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களில் இரண்டு பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியான நிலையில், அவர்களை வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், மற்றவர்களை வாணியம்பாடி அரசு மருத்துவமனையிலும் தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், ஏப்ரல் 03ந்தேதி, 8 பேரின் குடும்பத்தினர் 52 பேரை வாணியம்பாடி தனியார் இடங்களில் தனிமைப்படுத்தி கண்காணிக்கத் தொடங்கியது சுகாதாரத்துறை. இதில், நோய்த்தொற்று ஏற்பட்ட இருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 12 பேரின் ரத்தமாதிரி ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. ஆய்வு முடிவில் நோய்த்தொற்று இல்லை என்பது உறுதியானது.

இதன் அடிப்படையில், மற்ற 6 பேரின் குடும்பத்தைச் சேர்ந்த 40 பேரிடம் ரத்த மாதிரிகளைச் சேகரிக்காமலேயே, 09ந் தேதி சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆலோசனையின்படி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், 52 பேரையும் பூங்கொத்து கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.

Advertisment

அடிப்படையில், தொற்றுக்கான சந்தேகம் இருப்பவர்கள் குறைந்தபட்சம் 14 நாட்கள் சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் இருக்கவேண்டும். ஆனால், இவர்களை ஆறே நாட்களில் விடுவித் தது சர்ச்சையானது. இதன்பிறகு, இரு தினங்களுக்கு முன்புதான், சம்பந்தப்பட்ட 40 பேரின் வீடுகளுக்குச் சென்று, அவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்துள்ளனர் மருத்துவக் குழுவினர்.

இதில், வாணியம்பாடி கோட்டையைச் சேர்ந்த 48 வயது பெண்ணுக்கு, நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்தே, அவசர அவசரமாக ஏப்ரல் 16 முதல் நகராட்சியை தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்திருக்கிறது மாவட்ட நிர்வாகம்.

-து.ராஜா

Advertisment

இந்த உதவி போதாது! த.மா.கா இளைஞரணியின் குரல்!

s

கொரோனா தாக்கத்தைத் தடுக்க, மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் பணியில் இருக்கும் அரசியல் கட்சிகள், தனிமனித இடைவெளியைக் கடைபிடிப்பதற்காக, வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் கூட்டங்களை நடத்துகின்றன.

இதேபோல், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியைச் சேர்ந்தவர்கள், கடந்த 21 நாட்களில் மக்கள் சந்தித்த இன்னல்கள் குறித்து வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் செயற்குழுக்

கூட்டத்தை நடத்தியுள்ளனர். கூட்டம் முடிந்துவந்த இளைஞரணி தலைவர் ஈரோடு யுவராஜாவிடம் நாம் பேசியபோது, ""அரசு தற்காலிகமான உதவிகளையே செய்து கொடுத்துள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்கான அத்தியாவசிய, பொருளாதார தேவையை மக்களுக்குப் பூர்த்தி செய்து தரவேண்டும்.

ஊரடங்கால் வீட்டுக்குள் மக்கள் முடங்கியிருப்பதால், மின் கட்டணம் செலுத்துவது அனைவருக்கும் சாத்தியமில்லாத விஷயம். தொழில்கள் முடங்கிப் போயிருப்பதால், யாரிடமும் வருமானம் இல்லை. ஆகவே, வருமான வரியைப் போலவே, எல்.டி., எச்.டி., யூனிட்டுகளுக்கு மூன்று மாதங்களுக்கான விலக்கு தரவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

அதேபோல், கல்விக் கட்டணம் செலுத்த மூன்றுமாத காலம் கூடுதல் அவகாசம் தரவேண்டும். ஆர்.பி.ஐ. அறிவுறுத்தினாலும் இ.எம்.ஐ. வசூலிப்பது தொடர்கிறது. அவ்வாறு செலுத்தாவிட்டால் வட்டியை செலுத்த வங்கி நிர்வாகங்கள் நிர்பந்திக்கின்றன. இதுபோன்ற சூழலில், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை மக்களிடம் வளர்க்கும் அறிவிப்புகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட வேண்டும்''’என்று கூறியவர், இதுதொடர்பாக அரசுகளுக்கு விரிவாக கடிதம் எழுதியிருப்பதாகவும் தெரிவித்தார்.

- ஜீவாதங்கவேல்

உயிரோடு இருந்தால்…! வெளிநாட்டுத் தமிழர்கள் நிலை!

ssகொரோனா பாதிப்பினால் வெளி மாநிலங்களில் இருந்து வீடு திரும்பியவர்கள் சந்திக்கும் துயரை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஏற்கனவே தனிமையில் இருக்கும் அவர்களைத் தொடர்ந்து அச்சுறுத்தும் அவதூறுகளால், மன உளைச்சல் ஏற்பட்டு சிலர் தற்கொலை செய்துகொண்ட அவலமும் நடந்தேறியது.

உள்ளூரில் இருப்பவர்களுக்கே இந்த நிலையென்றால், குடும்ப சூழலுக்காக வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்று சிக்கித் தவிப்பவர்களின் கதியோ இன்னும் மோசம். எனவே, அவர்களது மன உளைச்சலைப் போக்கும் விதமாக மருத்துவர்களின் ஆலோசனை வழங்க இந்தியத் தூதரகத்தைத் துரிதப்படுத்த இந்திய அரசை வலியுறுத்துகிறார்கள் சமூக ஆர்வலர்கள் பலரும்.

இப்படி வெளிநாடுகளில் இருக்கும் சில இந்திய இளைஞர்கள், "உயிரோடு இருந்தால் ஊருக்கு வருகிறோம்! இல்லாமல் போனால் எழுதிவைத்துக் கொள்ளுங்கள், அடுத்த தலை முறையை வெளிநாட்டுக்கு அனுப்பமாட்டோம்' என்று வெதும்பி எழுதிய பதிவு அதிக கவனம் பெற்றுள்ளது.

அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய அரசைக்கோரும் இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப்பிரிவு மாநிலத்தலைவர் தங்க சண்முகசுந்தரம், ""மனரீதியிலான ஆலோசனை வழங்குவதோடு, முகக்கவசம் உள்ளிட்ட பாது காப்பு உபகரணங்களையும், அத்தியாவசியப் பொருட்களையும் வழங்குவதை இந்திய தூத ரகம் உறுதி செய்யவேண்டும். வெளிநாட்டில் இருந்தாலும், அவர்களும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள்தான் என்பதை அனைத்து சமூக ஆர்வலர்கள் சார்பாக வலியுறுத்துகிறோம்'' என்றார்.

- எஸ்.பி.சேகர்