ஆட்டுக்கறியை ஆட்டையப் போடும் காக்கிகள்!
கொரோனா தொற்றிலிருந்து காத்துக்கொள்ள தனிமனித இடை வெளியைக் கடைபிடிக்கச் சொல்லி, ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள் ளது. இதனால், வீடுகளில் முடங்கிக் கிடக்கும் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக் காகவே வெளியில் வருகிறார்கள். அப்படி இறைச்சிக் கடைகளுக்கு செல்லும் பெரும்பாலானோர் தனிமனித இடைவெளியைக் கடைபிடித்ததாகத் தெரியவில்லை. இதனால், சமூகப் பரவல் ஏற்படலாம் என எண்ணி, இறைச்சிக் கடை களை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகங்கள் கெடுபிடிகளை விதித்து வருகின்றன.
இதையடுத்து, திண் டுக்கல்லில் பல இடங்களில் இறைச்சிக் கடைகள் மூடப் பட்டுள்ளன. ஆனால், சிலர் மறைமுகமாக கோழி மற்றும் ஆட்டு இறைச்சியை விற்பனை செய்கின்றனர். கொள்ளை லாபத் திற்கு இறைச்சி விற்பனையாகிறது. சிறுமலை அடிவாரத்தில் ஆட்டிறைச் சிக் கடை நடத்திவரும் அபுதாகீர், இதே பாணியில் விற்பனை செய்ய இறைச்சியை கிலோக் கணக்கில் பொட்டலம் போட்டு, சாணார்பட்டியில் உள்ள தனது வீட்டில் வைத்திருந்தார்.
இந்தத் தகவல் தாலுகா டி.எஸ்.பி. வினோத் காதிற்கு எட் டவே, உடனடியாக காக்கிப் படையுடன் ஸ்பாட்டுக்குச் சென்றார். அங்கே கையும் களவுமாக அபுதாகீர் சிக்கிவிட, ரூ.58 ஆயிரம் மதிப்புள்ள ஆட்டிறைச்சியை பறிமுதல் செய்து, திண்டுக்கல் தாலுகா காவல்நிலை யத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு, அபுதாகீர் மீது தாலுகா எஸ்.ஐ. ராஜேஷ் வழக்குப்பதிவு செய்தார். அடுத்த கணமே, அங்கிருந்த காவலர்கள் பறிமுதல் செய்த ஆட்டிறைச்சியைக் கிலோக் கணக்கில் பிரித்து வீட்டிற்கு எடுத்துச் சென்றார்கள்.
வழக்கமாக பறிமுதல் செய்யப் படும் இறைச்சியை ஏதாவதொரு இடத்தில் குழிதோண்டி புதைக்க வேண்டும் என்பது விதி. இறைச்சிக்கு ஆசைப்பட்டு இந்த விதிமுறையைக் காற்றில் பறக்கவிட்ட காக்கிகளைப் பற்றித்தான் மாவட்டம் முழுவதும் பரபரப்புப் பேச்சு.
- சக்தி
காட்டமான கமல்! உதவும் இயக்கத்தினர்!
மார்ச் 24ந்தேதி பிரதமர் மோடி முழு ஊரடங்கு அறிவித்த போது, பொதுமக்களுக்கு எஞ்சி யிருந்ததோ வெறும் நான்கு மணி நேரம்தான். ஏற்கனவே தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், மார்ச் மாத இறுதிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், பிரதமர் மோடியின் 21 நாள் ஊரடங்கு உத்தரவு சாமான்ய மக்களை ஸ்தம்பிக்கச் செய்தது.
கொரோனாத் தொற்று அடுத்த நிலையை நோக்கி நகரும் அபாயம் உள்ளதால், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் வலுக்கிறது. இந்த நிலையில்தான், ஊரடங்கு உத்தரவு முறையான திட்டமிடல் இல்லாமல், அவசரகதியில் எடுக்கப்பட்ட முடிவு. இதனால், சமூகத்தைக் கட்டமைத்துக் கொண்டிருக்கும் கோடிக்கணக் கான ஆதரவற்ற அடிமட்ட, உழைக்கும் மக்கள் வீதிகளில் தனித்து விடப்பட்டிருக்கிறார்கள் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் காட்டமாகக் குறிப்பிட்டி ருந்தார்.
அதேசமயம், மக்கள் நீதி மய்யம் மற்றும் கமல் நற்பணி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆதரவற்றோருக்கு உதவ முன்வர வேண்டும் என்று கமல்ஹாசன் கேட்டுக் கொண்டி ருந்தார். இதையடுத்து, மத்திய சென்னை கமல் நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த கமல் கோமகன், ஆளவந்தான் ரவி ஆகி யோரின் ஏற்பாட்டில், கமல் நற்பணி இயக்கத் தைச் சேர்ந்தோர், சென்னை எழும்பூர், திரு.வி.க.நகர் தொகுதி களில் பல இடங்களில் ஆதரவற்றோருக்கு உணவுப் பொருட்களும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரக் குடிநீரும் தினந்தோறும் வழங்கி வருகிறார்கள்.
இதுகுறித்து, கமல் கோமகனிடம் கேட்டபோது, ""எங்களால் முடிந்த சிறு உதவியைச் செய்துவருகிறோம். ஊரடங்கு முடியும் வரையில் இதைத் தொடரும் நம்பிக்கை இருக்கிறது'' என்றார் மனநிறைவுடன்.
- பரமு
மக்களை ஒருங்கிணைக்கும் தமிழ்ப் படைப்புலகம்!
முழு ஊரடங்கால் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள் பொதுமக்கள். இதனால், மன அழுத்தம், உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளுக்கு அவர்கள் ஆளாகிறார்கள். இதிலிருந்து விடுபட பொழுதுபோக்கோடு சேர்த்து, தனித்திறன் செயல்பாடுகளையும் மேற்கொள்ளலாம் என மருத்துவர்கள் ஆலோசனை தருகிறார்கள்.
இந்நிலையில், திரை இயக்குனர் வசந்தபாலன், குழந்தைகளுக்கு ஓவியப் போட்டி நடத்துவதாக அறிவித்தார். இதையடுத்து, சுமார் ஆயிரக்கணக்கான போட்டியாளர்கள் தங்களது ஓவியங்களை வரைந்து, வசந்தபாலன் அறிவித் திருந்த மின்னஞ்சலுக்கு அனுப்பிவைத்து ஆர்வத்தை வெளிப்படுத்தினர். இயக்குனர் வசந்தபாலனின் இந்த முயற்சியைப் பார்த்து தமிழகத்தின் பல்வேறு மாவட்ட நிர்வாகங்களும், தனித்திறன் போட்டிகளை அறிவித்து, பரிசுத் தொகையும் வழங்க முன்வந்துள்ளன.
இதேபோல், எழுத்தாள ரும், மதுரை எம்.பி.யுமான சு.வெங்கடேசன் பள்ளி மாண வர்களுக்கு கலை இலக்கியப் போட்டிகளை அறி வித்தார். இந்தப் போட்டியில் வெற்றி பெறுகிறவர்களுக்கு அபராஜிதா என்கிற நிறுவனம் பரிசுத் தொகை வழங்குவ தாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
தமிழ்ப் படைப்புலகம் இதுபோன்ற செயல்பாடுகளின் மூலம் சமூகப் பங்களிப்பு செய்துவரும் நிலையில், எழுத்தாளர் மணிமாலா அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். "தேர்தல் சமயத்தில் மக்களுக்கு பணப்பட்டுவாடாவும், சில பத்திரிகையாளர்களுக்கு கவரும் கொடுக்கும் வேட்பாளர்களே. இந்த இக்கட்டான நேரத்தில் அந்தப் பணத்தில் ஆதரவற்ற மக்களுக்கு ஒருவேளை உணவு வழங்கினாலும், உங்களைக் கைக்கூப்பி வணங்குவார்கள். உதவ முன்வாருங்கள்' என்று அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
உடலால் தள்ளிநின்று, மனதால் ஒருங்கிணைய வேண்டிய கட்டாயத்தை படைப்புலகத்தைச் சேர்ந்தவர்கள் உணர்த்தி வருகிறார்கள்.
- மதி