ரயில்வே ஊழியர்களின் அவசரகால உதவி!
தென்னிந்திய ரயில்வேயில் மிகவும் முக்கியமானது திருச்சியில் இருக்கும் பொன்மலை பணிமனை. இங்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆண்டுக்கு சுமார் ஆயிரம் ரயில் பெட்டிகளைப் பழுதுபார்ப்பது, புதுப்பிப்பது, சரக்கு ரயில்களில் இணைக்கப்படும் வேகன்களைத் தயாரித்துக் கொடுப்பது, டீசல் என் ஜின்களைப் பராமரிப்பது ஆகிய பணிகள் தொடர்ந்து நடைபெறும்.
கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக, நாடு முழுவதும் ரயில்சேவை முழுமையாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ள நிலையில், முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதால், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையும் மூடபட்டுள்ளது.
இந்த நெருக்கடியான சூழலில், இந்திய ரயில்வே வாரியம் விடுத்துள்ள உத்தரவின் அடிப்படையில், மருத்துவமனைகளுக்குத் தேவையான இரும்புக் கட்டில்கள் தயாரிக்கும் பணியினை, பொன்மலை பணிமனையைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொடங்கிய சில நாட்களிலேயெ, 60 கட்டில்களை இவர்கள் தயாரித்து முடித்துள்ளனர்.
பொன்மலையில் உள்ள திருச்சி கோட்ட தலைமை ரயில்வே மருத்துவமனையில், கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக பிரத்யேகமாக தனிமைப்படுத்தப்பட்ட வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டிற்கு 10 கட்டில்களும், சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனைக்கு மீதமிருக்கும் 50 கட்டில்களையும் பொன்மலை பணிமனையிலிருந்து அனுப்பிவைக்க இருப்பதாக ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
வழக்கமாக ரயில் தொடர்பான பொருட்களை மட்டுமே தயாரித்துவந்த பொன்மலை ரயில்வே பணிமனை ஊழியர் கள், அவசரகால நடவடிக்கையாக நோயாளிகளுக்கு இரும்புக் கட்டில்கள் செய்துதருவது பெரிதும் பாராட் டைப் பெற்றுள் ளது.
- ஜெ.டி.ஆர்
இதோ கட்சி அலுவலகம்! அரசியல் கடந்த மனிதநேயம்!
தமிழகத்தில் நான்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளை, முழுமையாக கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு சிறப்பு மருத்துவமனை களாக மாற்றி அறிவித்துள் ளது தமிழக அரசு. அதே போல், தனியார் மருத்துவ மனைகளில் சிறப்பு வார்டு கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வருமுன் எச்சரிக்கை என்பதுபோல, ஏறக்குறைய 10 பேர் தனி அறையில் சிகிச்சைபெறும் அளவுக்கு ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளன.
இருந்தபோதும், பற்றாக்குறையால் அவசரத் தேவை ஏற்பட்டால்? அதற்காகவே, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. கட்சி அலுவலகம் உள்ள அண்ணா அறிவா லயத்தில், கலைஞர் அரங்கை கொரோனா சிகிச்சைக்கு அரசு பயன் படுத்திக் கொள்ளலாம் என்ற முன்னுதாரண அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகம், சென்னை தியாகராயநகரில் செவாலியர் சிவாஜிகணேசன் சாலையில் உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் பலமாடிக் கட்டிடங்களாகக் கட்டப்பட்டு, இந்த அலு வலகம் திறக்கப்பட்டது. தற்போது, வைரஸ் தொற்று சிகிச்சைக்காக, இந்த அலுவல கத்தில் உள்ள 74 ஆயிரம் சதுரஅடி கொண்ட இரண்டு தளங்களை எடுத்துக் கொள்ள லாம்’’ என்று அறிவித்துள்ளார் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்.
மக்கள் நலனுக்காக வீதியில் இறங்கி போராடுவது மட்டுமே ஒரு இயக்கத்தின் பணியல்ல. ஆபத்தான நேரங்களில் அரசோடு கைக்கோர்த்து, மக்கள் பக்கம் நிற்பதுதான் இயக்கத்தின் தலையாய பணி என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளன தி.மு.க. மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள்.
- ஜீவாதங்கவேல்
மனிதம் போற்றும் மழலைச் செல்வங்கள்!
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வெளியே செல்லும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாகிறது. பலரிடம் பணமிருந்தும் முகக்கவசம் கிடைக்காததால் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள சி.கொத்தங்குடியைச் சேர்ந்த காளிதாஸ் மகள் ராகினிஸ்ரீ, நூற்றுக்கும் மேற்பட்ட முகக்கவசங்களைத் தானே தைத்து, தனது பகுதிவாழ் மக்களுக்கு வீடுவீடாகச் சென்று வழங்கியுள்ளார்.
இந்த எண்ணம் தோன்றியது பற்றி, ஐந்தாம் வகுப்புப் படிக்கும் மாணவியான ராகினிஸ்ரீயிடம் கேட்டோம். ""விடுமுறை விடப்பட்டு வீட்டில்தான் இருக்கிறேன். முகக்கவசம் தட்டுப்பாடு இருப்பதாக செய்திகளில் தொடர்ந்து சொல்லப்படுவதைக் கேட்டேன். அதன்பிறகே, அம்மாவின் ஆலோசனைப்படி நானே முகக்கவசங்களைத் தயாரித்து மக்களுக்குக் கொடுத்தேன். அப்போது, அத்தியாவசியப் பொருட்களை வாங்க மட்டுமே வெளியில் வரவேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறேன்''’ என்றார் மழலை மொழி மாறாமல்.
இதேபோல், கொரோனா தொற்றுத் தடுப்பு செயல்பாடு களில், அரசுக்கு உதவும் விதமாக பொதுமக்கள் நிதிகொடுத்து உதவவேண்டும் என்று பிரதமர் மோடியும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கேட்டுக்கொண்டுள்ளனர். இதையடுத்து, அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள், தொழிலதி பர்கள், சமூகநல அமைப்புகள், சினிமாப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் நிவாரண நிதியை வழங்கிவருகின்றனர்.
அதில் ஒருபகுதியாக, சிதம்பரம் அருகேயுள்ள உசுப்பூரைச் சேர்ந்த பள்ளி மாணவி கௌசிகா, தான் சிறுகசிறுகச் சேர்த்த உண்டியல் பணமான, 1,555 ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இணையதளம் வழியாக அனுப்பி இருக்கிறார்.
உடலால் பிரிந்திருந்தாலும் உள்ளத்தால் இணைந்திருக்க வேண்டிய தேவையின் மகத்துவத்தை அழகாக உணர்த்தி இருக் கிறார்கள் இந்த மழலைச் செல்வங்கள்.
-காளிதாஸ்