கன்னடத்துக்கு உண்டு! தமிழுக்கு இல்லை!

signal

Advertisment

தங்கள் ஊரில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு தமிழாசிரியர் வேண்டுமென்று 20 வருடமாக கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் பூதாளபுரம் கிராம மக்கள்.

பள்ளிக் கல்வி அமைச்சரின் ஈரோடு மாவட்டத்தில், சத்தியமங்கலம் மலைப்பகுதியில், கேர்மானம் ஊராட்சிக்கு உட்பட்டது இந்தப் பூதாளபுரம் கிராமம். இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளி 1970-ல் தொடங்கப்பட்டது.

பூதாளபுரம், ஒரத்தி, உருளிக்குட்டை, வி.எம்.தொட்டி, கேரே தொட்டி ஆகிய 5 கிராமங்களைச் சேர்ந்த 19 மாணவர்கள் இப்பள்ளியில் படிக்கிறார்கள். இவர்களில் 7 மாணவர்கள் கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள். மற்றவர்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பழங்குடி மாணவர்கள்.

Advertisment

""இங்கே தலைமை ஆசிரியரும் இடைநிலை ஆசிரியரும் கன்னடமொழிக்காரர்கள். 7 மாணவர்களுக்கு ரெண்டு ஆசிரியர்கள். ஆனால் தமிழ் மாணவர்களுக்கு தமிழ் கற்றுக்கொடுக்க ஆசிரியர் இல்லை. அதனால் கன்னடத்தை மட்டுமே கற்றுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இங்கே மட்டுமில்லை... தர்மபுரி, பர்கூர், தாளவாடி, கடம்பூர் என பல ஊர்களில் தமிழுக்குப் பதில் கன்னடமொழியை கற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயம். 20 வருடமாக மனு போராட்டம் நடத்திவிட்டோம். இப்ப அமைச்சர் செங்கோட்டையனிடமும் மனு கொடுத்துவிட்டோம்'' பரிதாபமாகச் சொன்னார் "சுடர்' தொண்டு நிறுவன நடராஜ்.

பிரச்சினையை மாவட்ட ஆட்சியர் பிரபாகரின் பார்வைக்கு கொண்டுசென்றோம்.

""ஒரு தமிழாசிரியரை டெபுடேஷன் போட்டுள்ளோம். இன்னும் ஓரிரு நாட்களில் அந்தப் பள்ளியின் மாணவர்களுக்கு அவர் தமிழ் கற்றுக்கொடுப்பார்'' உற்சாகமாகச் சொன்னார் ஈரோடு மாவட்ட ஆட்சியர்.

-ஜீவாதங்கவேல்

சர்வ கட்சிகளின் அஞ்சலி!

signal

Advertisment

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் முன்னாள் முதல்வருமான டாக்டர் கலைஞருக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிழக்கு, மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க.வினரின் மவுனஅஞ்சலி ஊர்வலம் திண்டுக்கல் மாநகரில் நடைபெற்றது.

இந்த மவுனஅஞ்சலி ஊர்வலத்தை கழக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார். இந்த மவுனஅஞ்சலி ஊர்வலத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த திண்டுக்கல் பகுதி செயலாளர்களான மோகன், சுப்பிரமணி, சேசு உள்பட சில ர.ர.க்களும் கலந்துகொண்டனர். அதுபோல் தே.மு.தி.க., அம்மா முன்னேற்றக் கழகம் மற்றும் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட அனைத்துக் கட்சிகளும் பெரும்திரளாகக் கலந்துகொண்டனர்.

இந்த மவுனஅஞ்சலி ஊர்வலம் திண்டுக்கல் பஸ்-ஸ்டாண்டில் தொடங்கி நாகல் நகர் சோலைமஹால் தியேட்டர், பயர் சர்வீஸ் கடைவீதி, பழனி ரோடு வழியாக கலைஞர் மாளிகை வந்து அடைந்தது. இதில் இரண்டு மாவட்ட செயலாளர்களும் எம்.எல்.ஏ.க்களுமான கொறடா சக்கரபாணி, ஐ.செந்தில்குமார் மற்றும் நத்தம் எம்.எல்.ஏ. ஆண்டிஅம்பலம் உள்பட மாவட்டத்தில் உள்ள பொறுப்பில் உள்ள உ.பி.களும் தொண்டர்களும் கருப்புச்சட்டை அணிந்து பெரும்திரளாக கலந்துகொண்டனர். அதுபோல் ஆளும்கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சியினருடன் பொதுமக்கள் மற்றும் அங்கங்கே உள்ள வியாபாரிகள் என ஐந்தாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இந்த மவுனஅஞ்சலி ஊர்வலத்தில் கலந்துகொண்டு திண்டுக்கல் மாநகரத்தையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டனர்.

-சக்தி

3 கோடியில் மஞ்சள் நீராட்டுவிழா!

signal

ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா, பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக சர்ச்சையில் இருந்தபோது, ஜெயலலிதா பங்களாவில் தங்கியிருந்த வேளையில் புரட்சிபாரதம் கட்சி சார்பில் பங்களாவை முற்றுகையிட்டுப் போராடிய சம்பவத்தில் தலைமை வகித்தவர் குமரவேல் இவர் அ.தி.மு.க.வில் இணைந்தபின், கடந்த 2011-2016-ல் தையூர் ஊராட்சிமன்றத் தலைவர் ஆனார். அவரின் மனைவி மரகதம்குமரவேல் திருப்போரூர் ஒன்றிய சேர்மேன் ஆனார். பின்னர் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வந்தபோது சின்னம்மா (சசிகலா) ஆதரவில் காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு வெற்றிபெற்றார். ஜெ. மறைவுக்குப் பின்னர் டி.டி.வி. தினகரன் பக்கமிருந்த மரகதம்குமரவேல் அங்கிருந்து அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவில் ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் பக்கம் வந்தார்.

இந்தநிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை பதினோரு சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க. ஸ்ரீபெரும்புதூர் மற்றும் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. அதனால் மாவட்டத்துக்கு அமைச்சர்கூட இல்லை. திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினரோ டி.டி.வி.தினகரன் அணி என்பதால், மரகதம்குமரவேல்தான் இந்த மாவட்டத்தின் பவர்ஃபுல் என்ற பெயரில் வலம்வருகிறார். அவர் கணவர் குமரவேல்தான் மாவட்டத்தில் ஆல்இன் ஆல் வேலைகளும் செய்கிறார். அரசு வேலை, அரசு காண்ண்ராக்ட் அனைத்தும் இவர்கள் அசைவிலே இந்த மாவட்டத்தில் நடந்து வருகின்றன. அதேபோல செல்வத்திலும் அசுர வளர்ச்சியடைந்துள்ளனர். இவர்களது மகள் மஞ்சள்நீராட்டு விழாவை மிக பிரமாண்டமாக நடத்தவுள்ளனர். செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி நடக்கவுள்ள இந்த மஞ்சள்நீராட்டு விழாவுக்கு தலைமை தாங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மா.செ.க்கள் உட்பட சுமார் இருபத்தைந்தாயிரம் பேருக்கு அழைப்பு கொடுத்துள்ளனர். விழா ஏற்பாடுகள் ஈ.சி.ஆர். சாலை, மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி கூட்டு ரோடு அருகேயுள்ள மிகப்பிரம்மாண்ட மண்டபமான கன்வன்ஷன் ஹாலில் நடக்கப்போகிறது. விழா பட்ஜெட் மட்டும் மூன்று "சி'யை தாண்டுதாம். அதில் அறுசுவை உணவு ஏற்பாடே ஒரு "சி'யை தாண்டுகிறதாம் என்றால் பாருங்களேன்!

-அரவிந்த்