அதிகாரிகளின் அலட்சியத்தால் உயிருக்கு ஆபத்து!
சென்னை ரிப்பன் மாளிகையை ஒட்டியுள்ள சைடன் சாலையில், சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான இரண்டு தளங்களைக் கொண்ட அடுக்குமாடிக் கட்டிடம் இருக்கிறது. ஐம்பது ஆண்டுகள் பழமையான கட்டிடம் என்பதால், எந்தநேரமும் இடிந்துவிழும் நிலையில் உள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மண்டல அலுவலர் லாரன்ஸ், “சிட்டி சிவில் கோர்ட், தாசில்தார் அலுவலகம் மற்றும் கனரா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைகள் இந்தக் கட்டிடத்தில் இயங்குகின்றன. இயல்பிலேயே மக்கள் அதிகமாக வந்துசெல்லும் பகுதியாக இருப்பதால், விபத்துக்கும் உயிர்சேதத்திற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, கட்டிடத்தை மறுசீரமைப்பு செய்யவேண்டும்'' என்று கடந்த ஜனவரியில் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ஏற்று சிட்டி சிவில் கோர்ட்டும், தாசில்தார் அலுவலகமும் காலி செய்து விட்டன. ஆனால், தரைத்தளத்தில் இன்னமும் வங்கி கள் செயல்பட்டு வருகின்றன. இதனால், நாள்தோறும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, மக்கள் இங்கே வந்து செல்கின்றனர். மண்டல அலுவலர்களின் வங்கிக் கணக்குகள், இந்தக் கட்டிடத்தில் இயங்கும் கனரா வங்கியில் இருப்பதுதான், மண்டல அலுவலர் லாரன்ஸ் இதைக் கண்டும் காணாமல் இருப்பதற்குக் காரணம்'' என்கிறார்கள்.
இதுகுறித்து கட்டிடத்தில் இயங்கிவரும் கனரா வங்கி மேலாளர் முருகனிடம் கேட்டால், "மாற்று இடம் கிடைத்துவிட்டது. சீக்கிரமே காலிசெய்கிறோம்' என்கிறார். ஐ.ஓ.பி. மேலாளர் சஷிலேக்கா வும், இதே பதிலைச் சொல்கிறார். ஆனால், ""இரண்டு மாதங்களாக இதே கதைதான். கட்டிடத்தின் இரண்டாவது தளத்தைத் தகர்த்துவிட்டதால், சிறு அசைவுகூட கட்டிடம் சரிந்துவிழ போதுமானதாக இருக்கும். யாரோ சிலரின் நலனுக்காக மக்கள் சிரமப்பட வேண்டுமா'' என்கிறார் வாடிக்கையாளர் ஒருவர்.
-அ.அருண்பாண்டியன்
யாருடைய பிள்ளைக்கு யாருடைய இனிஷியல்?
கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், இரண்டுமாடி ஆய்வுக்கூடம் சமீபத்தில் கட்டப்பட்டது. தனது மேம்பாட்டு நிதியில் ரூ.43 லட்சத்தை இந்தக் கட்டிடத்திற்காக ஒதுக்கிய சி.பி.எம். மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்க ராஜன், தன் சகாக்களோடு கட்டிடத்தைத் திறந்துவைக்க பள்ளிக்கு வந்திருந்தார்.
கட்டிடத்தின் வாசலில் ரிப்பனை வெட்டி உள்ளே சென்றுபார்த்த எம்.பி. உள்ளிட்ட அனைவருக்கும் பேரதிர்ச்சி. காரணம், ஜனவரி 06-ந் தேதியே முதல்வர் எடப்பாடி கட்டிடத்தைத் திறந்து வைத்ததாக தமிழக அரசு சார்பில் கல்வெட்டு வைக்கப்பட்டிருந் தது. திறப்பு விழாவிற்கு தலைமைதாங்கிய தலைமையாசிரியர் தேன்மொழியிடம் கேட்டால், "அதிகாரிகள் ஏற்கனவே கல்வெட்டை வைத்துவிட்டார்களே' என்று சர்வ சாதாரணமாகச் சொன்னார்.
""மக்கள் வரிப்பணத்தை மக்களின் சேவைக்காக ஒதுக்கித்தான் இந்தக் கட்டிடத்தைக் கட்டினோம். மாவட்ட நிர்வாகத்தின் செயலால், அதில் ஒருபகுதி கமிஷனாக கரைந்திருக்கிறது. நிதி ஒதுக் கிய எம்.பி.க்குத் தெரிவிக்காமல் கட்டி டத்தைத் திறந்தது ஒருபுறம் இருந்தாலும், கட்டிடத்தில் முதல்வரின் பெயர் மட்டுமே இருக்கிறது. எவ்வளவு நிதி, எந்தத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டது என்ற விவரங்கள் இல்லை'' என்று கண்டித்துப் பேசிய எம்.பி. டி.கே.ரங்கராஜன், மாவட்ட ஆட்சியருக்கு இதுகுறித்து கடிதம் எழுதப்போவதாக குறிப்பிட்டார்.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை நிதி ஒதுக்கீடு செய்து, அதன்மூலம் கட்டப்பட்டது போன்ற தோற்றத்தை ஏற் படுத்தி உள்ளனர். அடுத்தவர் பெற்ற பிள்ளைக்கு தனது இனிஷியலை வைப்பது போன்ற தமிழக அரசின் இந்தச் செயலால், பள்ளிக் கல்வித் துறையின் நிதி ஒதுக்கப் பட்டதாக கணக்கெழுதி, பணத்தை சுருட்டி யிருக்கலாம் என்ற அச்சமும் ஏற்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்தவேண் டும் என்று வலியுறுத்துகிறார்கள் விழாவில் கலந்து கொண்டவர்கள்.
-காளிதாஸ்
இன்ஸ்பெக்டரின் அட்ராசிட்டி!
கந்தசாமி திருக்கோவில், ஜெ.வின் சிறுதாவூர் பங்களா என எப்போதும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் இருந்தது திருப்போரூர். இதனால், இங்கிருக்கும் காவல்நிலையம் எப்போதுமே அலர்ட் டாக இருக்கும். ஜெ. மறைவுக்குப் பிறகு, களையிழந்துபோன இந்தக் காவல்நிலை யத்தைப் பற்றித்தான் இப்போது ஊரெல் லாம் பேச்சு. புதிதாக ஆய்வாளராக பதவியேற்ற ராஜேந்திர னின் அலப்பறைதான் அதற்குக் காரணம். 1907-ல் ஆங்கி லேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் காவல்நிலையத்தில் இருந்த ஆய்வாளர் அறையை, பொறுப்பேற்ற முதல்நாளே புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் உள்ள கைதிகள் அறைக்கு மாற்றியது அலப்பறைகளுக்கு சிறு உதாரணம்.
இவர் ரோந்து செல்லும்போது, வழியில் யாராக இருந்தாலும் பவ்வியமாக எழுந்து நிற்கவேண்டும். இல்லை யென்றால் பளார் விழும். எதிர்த்துக் கேட்டால், ஸ்டேஷ னுக்கே தூக்கிச்சென்று தனியாக கவனிப்பார். அப்படித் தான் மார்ச் 03-ந் தேதி இன்ஸ். ராஜேந்திரன் ரோந்து சென்ற ஜீப், சன்னதி தெருவில் சாலையோரம் நடந்துசென்ற முனுசாமி என்ற 80 வயது முதியவர் மீது மோதியது. இதைப் பார்த்து ஆத்திரமான முரளி என்கிற இளைஞர், "ஏங்க வய சானவரை இடிச்சுத் தள்ளிட்டு கண்டுக்காம போறீங்களே. பார்த்துப் போகமாட்டீங்களா' என்று தட்டிக்கேட்டார்.
இதில் கடுப்பான இன்ஸ் ராஜேந்திரன், அடுத்த நொடியே வண்டியை நிறுத்தி கீழறங்கி, முரளியை பொது இடமென்றும் பார்க்காமல் புரட்டி எடுத்தார். அதோடு அடங்காமல், ஸ்டேஷனுக்கு தூக்கிச்சென்று சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். இன்ஸ் ராஜேந்திரனின் இந்த அடாவடிப் போக்கால் கோபமடைந்த பொதுமக்கள், உடனடியாக முரளியை விடச்சொல்லி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். காவலர்கள் சமாதானம் செய்தபின்பே கூட்டம் கலைந்தது.
-அரவிந்த்