ஆளாளுக்கு ஒரு ரூட்!
நடக்கவிருக்கும் ராஜ்யசபா தேர்தலில் தூத்துக்குடி அ.தி.மு.க.வின் எக்ஸ் மா.செ. ஆறுமுக நயினார், சசிகலா புஷ்பாவின் கோட்டாவைப் பிடிக்க எடப்பாடியை நாடியிருக்கிறார். அதேசமயம், எக்ஸ் எம்.பி. நட்டர்ஜியும் எடப்பாடியிடம் கோரிக்கை மேல் கோரிக்கை வைக்கிறாராம்.
மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த மனோஜ்பாண்டியனும், முன்னாள் எம்.பி.யும், மா.செ.வுமான பிரபாகரனும் இந்த ரேஸில் இருக்கிறார்கள். அதேபோல், நெல்லை எக்ஸ் மேயரும், மகளிரணியைச் சேர்ந்தவருமான புவனேஸ்வரி, மத்திய அரசை அட்ஜெஸ்ட் செய்யும் இந்துபெண் வேண்டும் என்ற டெல்லியின் தகவலால், தெம்பாக இருக்கிறார்.
பதவிக்காலம் முடியும் தறுவாயில் இருக்கும் முத்துக்கருப்பனும், விஜிலா சத்யானந்துமே செகண்ட் இன்னிங்ஸ்க்கான முயற்சிகளில் தீவிரம் காட்டுகிறார்கள். இதில், சமுதாய அடிப்படையில், ஓ.பி.எஸ். மூலம் காய் நகர்த்துகிறார் முத்துக்கருப்பன்.
எடப்பாடியை சந்தித்து கோரிக்கை விடுத்திருக்கி றார் விஜிலா. சமீபத்தில், பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு, "இந்த சைக்கிள்களுக்கு நிதி ஒதுக்கியதே நிர்மலா சீதாராமன்தான்' என்று அவரது தயவைப்பெற ஏகத்திற்கும் அடித்துவிட்டார். துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு மூலமாகவும் காய் நகர்த்துகிறார்.
ஆனால், சாதிபலம், பணபலம் பார்த்து ஆட்களை ஏற்கனவே தேர்வுசெய்து வைத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
-பரமசிவன்
வண்ணத்தை மாற்றினால் போதுமா?
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்டது கீழ் கருங்காலிகுப்பம். இங்கிருக்கும் எம்.ஜி.ஆர். சிலைக்கு ஜனவரி 17-ந் தேதி அவரது பிறந்த நாளை முன்னிட்டு வண்ணம் பூச திட்டமிடப்பட்டது.
தங்களது கட்சித் தலைமையைப் போலவே, பா.ஜ.க. விசுவாசத்தைக் காட்ட சிலைக்கு காவிநிறம் பூசச் சொன்னார் கீழ் பென்னாத்தூர் பேரூராட்சியின் அ.தி.மு.க. செயலாளர் முருகன். பெயிண்டரும் அதையே செய்துவிட, ர.ர.க்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன், மா.செ. தூசி மோகன் ஆகியோர் இதைக் கண்டுகொள்ள வில்லை. கட்சித் தலைமைக்குப் புகார் சென் றும் பலனில்லை. இது செய்தியாக, சமூக ஊடகங்களிலும் விமர்சனம் கிளம்பியது. "எம்.ஜி.ஆருக்கும் காவியா' என்று அவரது ஆதரவாளர்களே கவலை யில் ஆழ்ந்தனர்.
ஒருவழியாக, பிப்ரவரி 21-ந் தேதி எம்.ஜி.ஆர். சிலையின் மீது பூசப்பட்ட காவி வண்ணம் மறைக்கப்பட்டு, சந்தன நிறம் பூசப்பட்டது. இதுபற்றி கட்சி நிர்வாகி களிடம் கேட்டபோது, “""எம்.ஜி.ஆரின் சிலை மீதே காவி வண்ணம் பூசினால் அது சர்ச்சை ஆகாதா? தெரிந்தே தவறு செய்துவிட்டு, இப்போது கட்சித் தலைமை அறிவுறுத்தலின் பேரில் நிறத்தை மாற்றியிருக்கிறார்கள்''’ என்றனர்.
வண்ணங்கள் மாறலாம். சிலர் எண்ணங் கள் மாறணுமே என்று எம்.ஜி.ஆர். ஸ்டைலில் சொல்கிறார்கள் அ.தி.மு.க.வின் அடிப்படைத் தொண்டர்கள்.
-து.ராஜா
வாழ்க்கையைத் தேர்ந்தெடு! புகையிலையை அல்ல!
புகையிலையில் 20 வகையான நச்சுப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனை புகைத்தல், மெல்லுதல், நுகருதல் என எந்த வடிவத்தில் பயன்படுத்தினாலும், வாய், குரல்வளை மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட அனேக வாய்ப்புகள் இருக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் 9 லட்சம் பேர் புகையிலை பயன்படுத்துவதால் உயிரை விடுகின்றனர். புகைப்பழக்கம் உள்ளவர்களில் 89 சதவீதம் பேர் 18 வயதுக்குக் குறைந்த வர்கள் என்றும், இவர்களில் 50 சதவீதம் பேர் புகைப் பழக்கம் தொடர்பான பிரச்சனையால் உயிரிழக்கின்றனர் என்றும் ஒரு தகவல் அதிர்ச்சியைக் கிளப்புகிறது.
ஆயுளை நீட்டித்து ஆரோக்கியமாக வாழ புகை யிலையைக் கைவிடுமாறு மருத்துவர்கள் வலியுறுத்து கின்றனர். இதே முழக்கத்துடன், திருவாரூர் மாவட்டத் தைச் சேர்ந்த ஒளிரவன் அறக்கட்டளையைச் சேர்ந்த, அதன் அமைப்பாளர் குணசேகரனின் தலைமையில், 30 தன்னார்வலர்கள் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர். இதில் 12 பேர் பள்ளி மாணவர்கள்.
திருவாரூர் மாவட்டத்தில் பிப்ரவரி 13-ந் தேதி தொடங்கிய இந்தப் பயணத்தில், 15-ந் தேதி அதிகாலை பாண்டிச்சேரி வந்தபோது ரயில்வே டி.ஜி.பி. சைலேந்திர பாபு கலந்துகொண்டு உற்சாகமூட்டினார். திண்டிவனம் தீயணைப்பு நிலையத்தில் வைத்து, பயணத்தில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பதக்கம் வழங்கி கவுரவித்தார். அங்கிருந்து சென்னை அடையாறில் உள்ள வி.ஹெச்.எஸ். பல் நோக்கு மருத்துவமனையில் மாலை பயணம் நிறைவு செய்யப்பட்டது.
-மதி
ஆதரவாளர்கள் மோதல்! அமைச்சரின் பிரகடனம்!
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் உள்ள எம்.ஜி.ஆர். திடலில் ஜெயல லிதா பிறந்தநாள் விழா பிப்ரவரி 22-ந் தேதி நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் அப்துல்ரஹீமின் ஆதரவாளரான ஜெயராமன் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
இந்த விழாவில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டதை அப்துல்ரஹீம் ஆதரவாளர்கள் ரசிக்க வில்லை. தே.மு.தி.க.வில் இருந்து அ.தி.மு.க.வுக்கு வந்த மாஃபாவால், அப்துல்ரஹீமுக்கு தொகுதி கிடைக்காமல் போனதுதான் இதற்குக் காரணமாம். விழா மேடையில் அமைச்சர் மேடையேறியதுமே, இரு தரப்புக்கும் இடையே கைகலப்பானது.
தனது தரப்பில் கூட்டமில்லை என்பதை உணர்ந்த அமைச்சர் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். அவரது ஆதரவாளரான தென்றல் மகி உள்ளிட்ட சிலர் சிக்கிக் கொண்டது பரபரப்பானது.
இந்நிலையில், பிப். 24-ந் தேதி அதே இடத்தில் மீண்டும் நடைபெற்ற ஜெ. பிறந்தநாள் விழாவிற்கு அமைச்சர் பாண்டியராஜன் வந்திருந்தார். அப்போது அ.தி.மு.க.வில் இணைய நூறுபேரைத் திரட்டிக்கொண்டு தென்றல் மகி வருவதைப் பார்த்த அப்துல் ரஹீம் ஆதரவாளர் சுல்தான், தங்களைத் தாக்க ஆட்களைத் திரட்டி வருவதாக அலறிப்போய் கூச்சலிட்டார்.
நிலைமை கைமீறாமல் கட்டுக்குள் கொண்டு வந்தார் மா.செ. அலெக்சாண்டர். மைக் பிடித்த அமைச்சர் பாண்டியராஜன், "அச்சம் என்பது மடமையடா' என்ற பாடலைப் பாடி, தான் எதற்கும் அஞ்சாதவன் என்று மேடையிலேயே பிரகடனப்படுத்திக் கொண்டார்.
-அரவிந்த்