ஐ.நா.வில் இலங்கைத் தமிழர்களுக்கான குரல்!
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில், இந்தியாவில் இருக்கும் இலங்கைத் தமிழர்களின் நிலை கண்டுகொள்ளப்படவில்லை.
இது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இச்சூழலில், பிப்ரவரி 24-ல் தொடங்கி, மார்ச் 09 வரை சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடந்துவரும் ஐ.நா. சபையின் 43-வது மனித உரிமைகள் மாநாட்டில் கலந்துகொண்டு, இந்தியாவில் அகதிகளாக இருக்கும் இலங்கைத் தமிழர்களின் நிலைகுறித்து கருத்துரை வழங்க சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டுள்ளார் இந்திய உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராம்சங்கர்.
ஏற்கனவே 2012-ல் இங்கிலாந்து பாராளுமன்றக் கமிட்டியிலும், 2013-ல் அமெரிக்காவில் நடந்த இலங்கைத் தமிழர்களுக்கான அரசியல் சாசனக் கருத்தரங்குகளிலும் பங்கேற்றவர் என்பதால், ராம்சங்கர் இந்தியாவில் இலங்கைத் தமிழர்களின் நிலைகுறித்து நன்கு அறிந்தவர்.
ஐ.நா. மாநாடு குறித்து ராம்சங்கரிடம் பேசியபோது, “""மூன்று தலைமுறைகளாக இந்தியாவில் அகதிகளாக இருக்கும் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகள்கூட இலங்கையைச் சேர்ந்தவர்களாக பார்க்கப்படுகிறார்கள். அவர்களுக்கான கல்வியும், வேலைவாய்ப்பும் வெளிநாட்டினர் விதிமுறைகள் படியே வழங்கப்படுகிறது. தற்போதைய குடியுரிமைத் திருத்தச் சட்டமும் அவர்களுக்கான தெளிவான பார்வையை முன்வைக்கவில்லை. விரைவில் 95 ஆயிரம் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இருப்பதாக மத்திய நிதியமைச்சர் உறுதியளித்தார். அதோடு, அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றினார்கள். இதனை ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் தெரிவிப்பேன்'' என்று உறுதியளித்தார்.
-கீரன்
உ.பி.க்கள் உள்ளடி! ரெய்டு மிரட்டல்?
தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் அருகிலுள்ள தலைவன்கோட்டையைப் பூர்வீகமாகக் கொண்டவர் அய்யாத் துரைப் பாண்டியன். கல்பதரு ட்ரான்ஸ்மிஷன் என்ற பெயரில் மின் கட்டுமானப் பணிகளை பல்வேறு மாநிலங்களில் செய்துவரு கிறார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், இவருக்குச் சொந்தமான லாட்ஜ்கள், ரிசார்ட்டுகள், திருமண மண்டபங்கள் செயல்படுகின்றன. அதோடு சங்கரன்கோவிலில் மெட்ரிகுலேஷன் பள்ளியையும் நடத்திவருகிறார்.
அய்யாத்துரை, சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்தார். மேற்கு மா.செ. சிவபத்மநாபனுடன் நல்ல புரிதலையும் ஏற்படுத்திக் கொண்டு, கட்சியின் மாவட்ட ஃபைனான்ஸியர் ஆனார். அவரது தீவிர செயல்பாடுகளைக் கவனித்த அறிவாலயம், மாநில வர்த்தக அணித் துணைத் தலைவராக்கியது. இதற்கிடையில், திடீரென்று பிப்ரவரி 21-ந் தேதி காலை அய்யாத்துரைப் பாண்டியனுக்குச் சொந்தமான நெல்லை, குற்றாலம், சங்கரன்கோவில் பகுதிகளில் செயல்படும் லாட்ஜ்கள், பள்ளியில் அதிரடி சோதனை நடத்தினர் வருமான வரித்துறையினர்.
இதுகுறித்து, அய்யாத்துரைப் பாண்டியனின் உதவியாளரிடம் கேட்டபோது, “""சென்னையிலிருந்த அய்யாத்துரை பாண்டியனுக்குத் தகவல் கொடுத்து, அவரும் வந்து விசாரணையில் கலந்துகொண்டார். பல ஆண்டுகளாகத் தொழில் செய்வதால், கணக்குகள் முறையாகத் தாக்கல் செய்யப்பட்டு, அசஸ்மெண்ட் ஆகியுள்ளது. முரண்பாடான ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை'' என்றார்.
ஏற்கனவே, மா.செ. சிவபத்மநாபன் உடனான நட்பில் உரசல் ஏற்பட்டுள்ளதாம். அதுபோக, கட்சி விளம்பரத்தில் அய்யாத்துரை பாண்டியனின் பெயரில் போடப்பட்ட செருப்பு மாலை உள்ளிட்ட சமீபத்தில் நடந்தேறிய அனைத்து கசப்பான சம்பவங்கள் குறித்தும் அவர் தரப்பிலிருந்து தலைமைக்குப் புகார் பறந்தது. ""உ.பி.க்களின் உள்ளடியால்தான் ரெய்டு மிரட்டல்'' என்கிறார்கள் அய்யாத்துரை பாண்டியனின் ஆதரவாளர்கள்.
-பரமசிவன்
வம்புக்கு இழுக்கும் பா.ஜ.க. ஐ.டி. விங்!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான பழமையான காசி விஸ்வநாதர் கோவில் சிம்மக்கல்லில் இருக்கிறது. இந்தக் கோவிலின் கல் மண்டபம், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யப் பயன்பட்டு வந்தது.
இதனை அறநிலையத்துறை அதிகாரிகளின் உதவியால், பலர் குறைந்த வாடகைக்கு எடுத்து உள்வாடகைக்கு விட்டிருந்தனர். அப்படி உள்வாடகை விட்டிருந்தது மற்றும் குளியலறை கட்டியதைக் குறிப்பிட்டு, தி.மு.க. மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினரான செ.போஸ் உள்ளிட்ட 12 பேர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுத்தார் கோவில் இணை கமிஷனர் நடராஜன். நீதிமன்றமும் கல்மண்டபக் கடைகளைக் காலிசெய்ய அனுமதி வழங்கியது. கடைகள் சீல் வைக்கப் பட்டன.
இதைச் சுட்டிக்காட்டி “"இந்து விரோதக் கட்சிக்கு இந்துக்கோவில் இடங்களை அபகரிக்க இனிக்கிறதோ? மீனாட்சி அம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் பி.டி.தியாகராஜன் மன்னிப்புக் கேட்பாரா? என்று பா.ஜ.க. ஐ.டி.விங் சமூக வலைத்தளத்தில் கிளப்பிவிட்டது. கொதித்துப்போன பி.டி.ஆர்.பி. தியாகராஜன், சென்னை மயிலாப்பூர் காவல்துறை துணை ஆணையரிடம் புகாரளித்தார். பின் செய்தியாளர்களைச் சந்தித்தவர், “"மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பரம்பரை அறங்காவலர் என்ற பொறுப்பே கிடையாது. அப்படி இருக்கும்போது, தி.மு.க.வுக்கும், எனது தந்தை பிடிஆர்.பழனிவேல் ராஜன் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் பா.ஜ.க. ஐ.டி.விங் மூலம் அவதூறு பரப்பு கின்றனர். உடனடியாக அந்தப் பதிவுகளை நீக்கி, தவறுக்கு மன்னிப்பு கோரவேண்டும் என்று புகார் கொடுத்துள்ளேன்' என்றார்.
""ஐ.டி. விங் மூலமாக நாட் டையே கலக்கிக் கொண்டிருக்கும் பா.ஜ.க.வின் ஆட்டம் தமிழகத்தில் செல்லவில்லை. அதேநேரம், தி.மு.க.வும் அதன் ஆதரவாளர்களும் சமூக வலைத்தளங்களில் கலக்குகின்ற னர். அதனால்தான் பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜனை குறிவைக்கிறது பா.ஜ.க.'' என்கிறார்கள் உ.பி.க்கள்.
-அண்ணல்