மருத்துவர் அலட்சியத்தால் மகப்பேறு மரணம்!
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள ஆயிகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜு. விசைத்தறி தொழிலாளி. இவரது நிறைமாத கர்ப்பிணி மனைவி காஞ்சனாவுக்கு 2019, அக்டோபர் மாத இறுதியில் பிரசவவலி ஏற்பட்டது
அருகிலிருக்கும் விஜயமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு காஞ்சனாவை அழைத்துச் சென்றால், அங்கு செவிலியர் சுகன்யா மட்டுமே பணியில் இருந்தார். பணியில் இருக்கவேண்டிய மருத்துவர் இல்லை. தகவல் கொடுத்தும் வரவில்லை. சில நிமிடங்களில் குழந்தையின் தலை வெளியேற, காஞ்சனா அலறித் துடித்தார்.
வேறுவழியின்றி, திங்களூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸில் கொண்டுசென்றால், அங்கும் ட்யூட்டி டாக்டர் இல்லை. காஞ்சனாவின் வலி எல்லோருக்கும் பரவியது. ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, அரை மணிநேரம் முன்பே வந்திருந்தால் இருவரையும் காப் பாற்றி இருக்கலாம் என்று கைவிரித்துவிட்டனர் மருத்துவர்கள்.
இந்த அலட்சிய மரணம் தொடர்பாக விசாரித்த மாவட்ட சுகாதார அதிகாரிகள், பணிநேரத்தில் இல்லாத மருத்துவர்களைக் காப்பாற்ற, இறுதிவரை உடனிருந்து போராடிய செவிலியரைத் தண்டித்தனர். இதை ஏற்காத ராஜு, மனித உரிமை ஆணையத்தை நாடினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி துரை ஜெயச்சந்திரன், “போதுமான உட்கட்ட வசதியும், பணிநேரத்தில் மருத்துவர்கள் இல்லாததுமே இரண்டு உயிர்கள் பலியாகக் காரணம். இதற்காக பணிநேரத்தில் இல்லாத மருத்துவர் விஜயலட்சுமிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து, அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல், பாதிக்கப்பட்ட ராஜுவுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும்’’ என தீர்ப்பளித்தார். மேலும், “பணியில் இருக்கும் மருத்துவர்களின் செல்போன் எண்ணை, தகவல் பலகையில் பொதுமக்கள் பார்க்கும்படி குறிப்பிட வேண்டும்’’ என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த இரண்டு உயிரிழப்பு களே கடைசியாக இருக்கவேண் டும். சுகாதாரத் துறை விழித்துக் கொள்ளுமா?
-ஜீவாதங்கவேல்
நூலகத்தை இழுத்து மூடிய அதிகாரிகள்!
கிராமங்கள் தோறும் பொழுதுபோக்கிற்காக பொது டி.வி. கட்டிடம் இருந்தது. அதில் அரசு சார்பில் கொடுக்கப்பட்ட டி.வி. இருக்கும். காலப்போக்கில் வீடுகள்தோறும் இலவச டி.வி. வந்தபிறகு, இந்தக் கட்டிடங்கள் பயனற்றுப் போயின.
அப்படி, கள்ளக்குறிச்சி மாவட் டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, கடுவனூர் கிராமத்தில் பயனற்றுக் கிடந்த டி.வி. கட்டிடத்தில் நூலகம் அமைக்கத் திட்டமிட்டார்கள் கிராம இளைஞர்கள். பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பெரியார் வெங்கட் என்ற இளைஞர் தலைமையில் இளைஞர்கள் ஒன்றுகூடி தீர்மானம் நிறைவேற்றினர். மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு நூலகமும் தொடங் கப்பட்டது. ரூ.15 ஆயிரம் செலவில் புத்தகங்கள், இதழ்களோடு சிறப்பாக செயல்பட்ட இந்த நூலகத்தை அதிகாரிகள் திடீரென மூடிவிட்டனர்.
""கட்டிடத்தை ஆக்கிரமிப்பு செய்வதாக கொடுக்கப்பட்ட தவறான புகாரில் இப்படி செய்துவிட்டனர். வட்டாட்சியரிடம் கேட்டால், "உங்க ஊர்ப் பிரச்சனை' என்று தட்டிக் கழித்தார். அதேநேரம் இங்கிருக்கும் வானொலி மன்றக் கட்டிடத்தை இடித்து விட்டு, கோவில் கட்டுவதை அதிகாரிகள் கண்டுகொள்ள வில்லை. எங்களுக்கு அது வெல்லாம் பிரச்சினையில்லை. நூலகத்தைத் திறந்தால் போதும்''’என்கிறார் பெரியார் வெங்கட்.
இதுபற்றி ஒன்றிய ஆணையர் ரவியிடம் கேட்ட போது, கடுவனூர் ஊராட்சி செயலாளரை நம்மிடம் பேசவைத்தார். “""அந்த நூலகம் முறையாக செயல் படவில்லை. இளைஞர் கள் சிலர் அரட்டை அடிப்பதாக பொதுமக்கள் புகார் கூறி னார்கள். சட்டம் ஒழுங் கைக் கருத்தில் கொண்டு தான் அதிகாரிகள் அந்த நூலகத்தை மூடினார்கள். ஊரில் பொதுநூலகம் இருக்கிறது. அதைப் பயன்படுத்தச் சொல்கிறோம். உள்நோக்கமெல்லாம் கிடை யாது''’என்றார் அந்த ஊராட்சி செயலாளர்.
ஒரு நல்ல புத்தகம் நூறு நண்பர்களுக்கு சமம் என்பார்கள். இங்கு நூலகத்தையே இழுத்துமூடி எந்த சட்டம் ஒழுங்கைக் காக்கப் போகிறார்களோ?
-எஸ்.பி.சேகர்
மாற்றுத் திறனாளிகளை தவழவிடும் இரக்கமற்ற அரசு!
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் கருணாநிதி. மாற்றுத்திறனாளியான இவர், அதேபகுதியில் ஒரு குறுகலான இடத்தில் வாட்ச் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவர் தங்குவதற்கு போதுமான இடவசதி இல்லாததால், தனது உறவினரின் வீட்டில் ஒரு ஓரத்தில் குடும்பத்துடன் தங்கியிருக்கிறார்.
இந்த நிலையிலிருந்து மீள, கடந்த ஐந்து ஆண்டுகளாக குடிசை மாற்று வாரியத்தில் கருணாநிதி முறையிட்டு வருகிறார். இதுவரை வீடு ஒதுக்கப்படவில்லை. இன்னொரு மாற்றுத்திறனாளிக்கு நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் ஐந்தாவது தளத்தில் வீடு ஒதுக்கியுள்ளனர். தவழும் மாற்றுத் திறனாளிகளான இவர்கள் உள்ளிட்ட ஐந்துபேர், சில தினங்களுக்கு முன்னர் மனு கொடுக்கப்பதற்காக சென்னை திருவல்லிக் கேணியில் உள்ள குடிசைமாற்று வாரியத்திற்கு சென்றிருந்தனர்.
அங்கு சாய்தளங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், சக்கர நாற்காலிகள் இல்லாததால் மாற்றுத்திறனாளிகள் தவழ்ந்தபடியே உள்ளே செல்லவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த அவலநிலை பற்றி டிசம்பர் 3 இயக்கத்தின் தீபக்நாதனிடம் பேசினோம், ""அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி, கோவிலோ, சுற்றுலாத்தலங்களோ கூட மாற்றுத்திறனாளிகள் செல்லமுடியாத இடங்கள் ஏராளம். அவர்களுக்காகவே 2012-ல் அரசு அலுவலகங்களில் சாய்தளம், சக்கர நாற்காலி, மின்தூக்கி வசதிகள் செய்து தரப்படும் என்று அறிவித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. இன்றுவரை அது வெறும் அறிவிப்பாகவே இருக்கிறது. இனியாவது அரசு எங்களையும் சக மனிதர்களாக மதித்து, இந்த வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். மாற்றுத் திறனாளிகள் மட்டுமின்றி, முதியோர் போன்ற இயலாதோருக்கும் இது பேருதவியாக இருக்கும்''’என்றார் கனிவுடன்.
-மதி