நள்ளிரவில் போலீஸ் பிடியில் தி.மு.க. மா.செ.!
திருவண்ணாமலை தி.மு.க. வடக்கு மா.செ.வாக இருப்பவர் முன்னாள் எம்.எல்.ஏ. சிவானந்தம். ரியல் எஸ்டேட், பைனான்ஸ் என சிலப்பல தொழில்கள் செய்யும் இவரது மகன் பாபுவுக்கு 2016-ல் ஆரணி தொகுதி யில் எம்.எல்.ஏ. சீட் வாங்கிக் கொடுத்தார். தேர்தல் செலவுக்காக கரூரைச் சேர்ந்த ஒரு நிதி நிறுவனத்தில் நில ஆவணங்களைக் கொடுத்து கடனாக ரூ.5 கோடி வாங்கியுள்ளார்.
தேர்தலில் மகன் தோற்றுப்போனார். பொருளாதார நெருக்கடியும் தொற்றிக்கொள்ள, கடன் கொடுத்தவர்களுக்கு சிவானந்தம் போக்குக்காட்டி வந்தார். சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை எஸ்.பி. சிபிசக்கரவத்தியிடம், கடன் கொடுத்தவர்கள் தரப்பு மோசடிப் புகார் கொடுத்தது. இதையடுத்து, பிப்ரவரி 06 ந்தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு, இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட காவலர்கள் ஆரணியில் உள்ள சிவானந்தத்தின் வீட்டுக்கதவைத் தட்டினர்.
தூக்கத்தில் இருந்து எழுந்துவந்த சிவானந்தம், தனக்கு பழக்கமான அந்த இன்ஸ்பெக்டரிடம், "என்ன இந்த நேரத்தில் என்று கேட்க, டி.எஸ்.பி. கார்ல இருக்காரு. உங்ககிட்ட பேசணும்னு சொன்னாரு' என்று கூட்டிச் சென்றார். அங்கு அவரை காருக்குள் ஏறச்சொல்லி திருவண்ணாமலை நோக்கிப் பறந்தனர். தெற்கு மா.செ.வும், எம்.எல்.ஏ.வுமான எ.வ.வேலு பேசியதால், கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்துள்ளார் சிவானந்தம். இரண்டே மாதத்தில் பணத்தைத் திருப்பித் தருவதாக எழுதிக் கொடுத்தபிறகே, அவர் அனுப்பி வைக்கப் பட்டார்.
இதுபற்றி நம்மிடம் பேசிய தி.மு.க.வினர், ""அந்த கரூர் பைனான்ஸில் தி.மு.க., அ.தி.மு.க. முக்கியப் பிரமுகர்களின் கறுப்புப்பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதுதான் வட்டிக்கு தரப்படுகிறது. சிவானந்தம் விசாரணைக்குக் கூட்டிச்செல்லப் பட்டதன் பின்னணி யில், வலுவான தி.மு.க. முக்கிய மா.செ. இருக்கிறார்'' என்றனர்.
-து.ராஜா
தகுதியற்ற நிர்வாகிகளின் ரூ.25 கோடி டீல்!
நிதிச் சிக்கலில் திணறிய சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தை, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. தற்போது அங்கு பணிபுரியும் 12 ஆயிரத்து 500 ஊழியர்களை சம்பளப் பிரச்சனை காரணமாக, தமிழக அரசின் பிற கல்லூரிகள், துறைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிமாற்றி வருகின்றனர்.
இவர்களில், துப்புரவுப் பணி யாளர்கள் உள்ளிட்ட கடைநிலை ஊழியர்கள், திண்டுக்கல் போன்ற தொலைதூர மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இது அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பல்கலைக் கழகத்தின் முந்தைய நிர்வாகத் தில், புரோக்கராக இருந்த சிலர், ஆளுங்கட்சி தரப்பினருடன் தொடர்பு வைத்துக்கொண்டு, அருகாமைப் பகுதிகளில் பணிமாற் றம் செய்து தருவதாகக் கூறி லட்சங்களில் பேரம் பேசும் கொடுமையும் அரங்கேறுகிறது. இதற்கிடையே, பல்கலைக்கழகத்தில் ரூ.85 ஆயிரம் வரை சம்பளம் வாங்கும் 850 சிறப்பு அதிகாரிகளை பணிமாற்றினாலே பிரச்சனைக்கு தீர்வாகும் என்று பாதிக்கப்பட்ட வர்கள் குமுறுகின்றனர்.
இந்தக் குமுறலை கவனத்தில் கொண்டு, சிறப்பு அதிகாரிகளை பணிமாற்றம் செய்ய முயற்சித்த போது, அவர்களில் பலர் போது மான தகுதியே இல்லாமல் பணிசெய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், அவர் களது தகுதிக்கேற்ற பதவியும், சம்பளமும் தரும் இடத்திற்கு மாற்றிவிடலாம் என்று பல்கலைக் கழகம் முடிவுசெய்தது.
இந்த நடவடிக்கைக்கு எதி ராக, சிறப்பு அதிகாரிகள் நீதி மன்றத்தை நாட முடிவுசெய்தனர்.
போதிய தகுதி இல்லாத அவர்களுக்கே, இது ஆபத்தாக முடியும் என்று தெரிந்ததால், ஆளுந்தரப்பின் மேல்மட்டத் துடன் டீல் பேசப்பட்டது. அதன்படி, தலைக்கு ரூ.3 லட்சம் வீதம் ரூ.25 கோடி கொடுக்க பேசி முடிக்கப் பட்டது.
தற்சமயம், ரூ.17 கோடி வரை கைமாறியிருப்ப தாகக் கூறுகின்றனர் பல்கலைக்கழக நிர்வாகத் திற்கு நெருக்கமானவர் கள்.
-காளிதாஸ்
எண்ணூரை மாற்றிக் காட்டிய ஏ.சி.!
பதட்டமும், பரபரப்பும் நிறைந்த எண்ணூர் பகுதி, இன்று அமைதியாக இருக்கிறது. காவல்துறை ஏ.சி.யாக இங்கிருக்கும் உக்கிரபாண்டிதான் இந்த மாற்றத்திற்கு காரணம் என்கிறார்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
வழக்கமாகக் குடும்பப் பிரச்சனை காரணமாக, காவல்நிலையத்திற்கு வழக்கறிஞர்களுடன் வருகிறவர்கள் ஏராளம். ஆனால், ஏ.சி. உக்கிரபாண்டி அலுவலகத்திற்கு இதுபோன்ற பிரச்சனைகளோடு சென்றால், சம்மந்தப்பட்ட கணவன் மனைவியை மட்டும் அழைத்துப்பேசி, சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்.
குடிபோதையில் சி.சி.டி.வி. கேமராக்களை சேதப்படுத்தும் இளைஞர்களைக் கண்காணித்து, அவர்கள் செலவிலேயே புதிய சி.சி.டி.வி. கேமராக்களை நிறுவச் செய்திருக்கிறார். பல இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதே இதற்குக்காரணம் என்பதை அறிந்து, சி.பி.சி.எல். நிறுவனத்தின் மூலம், எண்ணூர் பகுதியில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்களை தொடர்ந்து நடத்துகிறார்.
டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறக்க தமிழக அரசு விதித்திருக்கும் நேரக்கட்டுப்பாடு, பெரும்பாலான பகுதிகளில் பின்பற்றப்படுவதில்லை. எண்ணூர் பகுதியில் டாஸ்மாக், பார்கள் முறையாக நேரத்தைப் பின்பற்றுகின்றன. மதுபானக் கடைகள்தான் இன்று ஊரில் பல பிரச்சினைகளுக்குக் காரணமாக இருக்கிறது. அதன் விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்று கண்டிப்புடன் கூறியிருக்கிறார். இதைக் கண்காணிக்க தினமும் காலை சைக்கிளில் உக்கிரபாண்டி ரவுண்ட்ஸ் செல்வதும், இதற்குக் காரணம்.
எந்தநேரம் அலுவலகத்திற்கு சென்றாலும், ஏ.சி. உக்கிரபாண்டியைப் பார்த்துப் பேசமுடியும். மக்கள் பிரச்சனைகளை நேரம் ஒதுக்கி தீர்த்துவைப்பார். அவர் காட்டும் கெடுபிடிகளால் அவரை பணியிட மாற்றம் செய்யவும் முயற்சிகள் நடப்பதாக தகவல் வருகிறது. எந்தவித உள்நோக்கத்துடனும் அப்படியொரு நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது என்று கோரிக்கை விடுக்கின்றனர் ஏரியாவாசிகள்.
-மதி