எனக்கே பணம் தர்றியா? கடுப்பான கே.என்.நேரு!

திருச்சி முன்னாள் மா.செ. கே.என்.நேருவின் மேற்கு தொகுதியில் பகுதிச் செயலாளராக இருப்பவர் காஜாமலை விஜய். இந்தத் தொகுதியில் அரசுத் திட்டங்களுக்கான ஒப்பந்தப் பணிகளை எடுத்துச் செய்வதும் இவர்தான்.

ss

ஒப்பந்தப் பணிகளுக்கு ஏரியா எம்.எல்.ஏ. முதல் அதிகாரிகள் வரை காண்ட்ராக்டர்கள் கமிஷன் கொடுப்பது வழக்கம். ஆனால், கே.என்.நேரு இதுபோன்ற கமிஷன்களை எதிர்பார்ப்பதில்லை. இதை சாக்காக வைத்து அதிகாரிகளுக்கும், காண்ட்ராக்ட் ஒப்பந்த சங்கத்திற்கும், ஒப்பந்தப் பணிகளுக்கான கமிஷனைக் கொடுக்காமல் தவிர்த்து வந்துள்ளார் காஜாமலை விஜய். இது கே.என்.நேருவின் காதுவரை சென்றது.

Advertisment

இதற்கிடையே ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க. பிரதிநிதிகளை பாராட்டும் விதமாக, பிரம்மாண்ட மாநாடு ஜனவரி 31-ந் தேதி கே.என்.நேருவின் கல்லூரி வளாகத்தில் நடந்தது. வழக்கமாக கே.என்.நேரு ஒருங்கிணைக்கும் கட்சி நிகழ்ச்சிகளில், சில வருடங்களுக்கு முன்புவரை காஜாமலை விஜய்யின் ஏற்பாடுகளும் இருக்கும். ஆனால், கமிஷன் விவகாரம் கவனத்துக்கு வந்தபிறகு அவரைத் தவிர்த்தே வந்திருக்கிறார் நேரு.

இந்நிலையில், மாநாட்டிற்கு சிலதினங்களுக்கு முன்பு, கே.என்.நேருவைச் சந்தித்த காஜாமலை, ஒரு பையில் ஓரிரு லகரங்களைக் கொடுத்திருக்கிறார். “""மாநாட்டு வேலைதான் எனக்குக் கொடுக்கலை. இந்தப் பணத்தையாவது வாங்கிக்கோங்கண்ணே'' என்று காஜாமலை சொல்ல, “""வேலை பார்த்த எல்லாருக்கும் நான் பணம் கொடுத்துட்டு இருக்கேன். நீ எனக்கு பணம் தர்றியா. இதை வாங்க முடியாது. எடுத்துட்டு போப்பா'' என்று கே.என்.நேரு தவிர்த்துவிட்டார்.

உடனே, சின்னப்பிள்ளை போல கண்ணீர்விட்டு அழுத காஜாமலை, நேருவின் கையில் பணப்பையைத் திணித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். நேருவோ, ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் ராம்குமாரை வரச்சொல்லி, அந்தப் பணத்தை காஜாமலை விஜய் மனைவியிடம் கொடுக்கச் சொல்லி அனுப்பிவைத்தார்.

Advertisment

-ஜெ.தாவீதுராஜ்

மருத்துவர்களால் வீணாகும் மாணவன் எதிர்காலம்!

ss

சென்னை மேடவாக்கம், அறிஞர் அண்ணா தெருவில் சீனிவாசன்-தமிழ்ச்செல்வி தம்பதி குடும்பத்துடன் வசித்துவருகிறார் கள். இவர்களது இரண்டாவது மகன் ஹரிகுமார் பத்தாம் வகுப்பு படித்துவருகிறார்.

சென்ற ஆண்டு ஜூலை 06-ந் தேதி, சீனிவாசன் வீட்டில் எலெக்ட்ரீசியன் வேலை நடந்துள் ளது. வேலையாட்கள் மதிய சாப்பாட்டுக்கு வெளியில் சென் றிருந்தனர். அப்போது, ஆன்செய்த நிலையில் இருந்த சுவரைக் கட் செய்யும் எந்திரத்தை ஹரிகுமார் எடுத்துப் பார்த்தபோது, அது தவறுதலாக ஹரிகுமாரின் கன்னத் திலும், வலதுகையிலும் வெட்டியது.

அலறியபடி ரத்த வெள் ளத்தில் ஹரிகுமார் மயங்கி விட, அவரை மேடவாக்கம் மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்த்தனர். காயத்தை பரிசோதித்த மருத்துவர்கள், காயம் பெரியதாக இருப்பதால் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைத் தனர். அங்கு முகம் மற்றும் கையில் தையல் போடப் பட்டது. இந்நிலையில், இரண்டு வாரமாகியும் ஹரிகுமாரின் வலதுகையில் மூன்று விரல்கள் செயல்படவில்லை. நகங்கள் உதிரத் தொடங்கின. அதிர்ச்சி யடைந்த பெற்றோர் மீண்டும் குரோம்பேட்டை மருத்துவ மனைக்குக் கூட்டிச்செல்ல, ஹரிகுமாருக்கு நரம்பை மாற்றி ஆபரேஷன் செய்துள்ளதாக அலட்சியமாக தெரிவித்துள்ள னர். அங்கிருந்து ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சென்ற போது, ஆறுமாதம் கழித்து டிசம்பரில் நுண் நரம்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய் யப்பட்டது.

மருத்துவர்களின் அலட்சியம் குறித்து குரோம் பேட்டை அரசு மருத்துவமனை டி.சி.எம்.ஓ. சர்விஸ்ஷாவிடம் பேசினோம். “""தவறு நடந்தது உண்மைதான். ஆனால், நான் அப்போது இந்த மருத்துவமனையில் பணியில் இல்லை. இருந்தாலும், சிறுவனுக்கு உடனடியாக மருத்துவ உதவி கிடைக்க பரிந்துரைக்கிறேன்'' என்றார் மனிதாபிமானத்துடன்.

ஹரிகுமாரின் கைவிரல்கள் முழுமையாக குணமடையவில்லை. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நெருங்கிவரும் நிலையில், மாற்று ஏற்பாடு செய்துதருமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத் துள்ளனர் ஹரிகுமாரின் பெற்றோர்.

-அரவிந்த்

புதுவை தமிழ்ச் சங்கத்தில் தப்புத் தாளங்களா..!?

ss

புதுவை தமிழ்ச் சங்கத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம், பிப். 01-ந் தேதி வில்லியனூரில் தனியார் மண்டபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாரதிதாசன் பேரனும், தமிழ்ச் சங்க பாதுகாப்புத் தலைவருமான கோ.செல்வம், தனிநபர் துதிபாடவும், பொறுப்பி லுள்ளவர்கள் தங்களை வளர்த்துக்கொள்ளவுமாக மாறிக்கொண்டிருக்கிறது புதுவை தமிழ்ச்சங்கம். சிறப்பு பொதுக்குழு அழைப்பிதழை வாழ்நாள் உறுப்பினர்கள் பலருக்கு சங்க விதிமுறைப்படி 15 நாட்களுக்கு முன்பாக அனுப்பவில்லை என்பன போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அப்போது, 20-க்கும் மேற்பட்ட குண்டர்கள் அவர் மற்றும் உடன் வந்தவர்களை மிரட்டித் தாக்கியது பரபரப்பானது.

இதுகுறித்து தமிழ்ச்சங்க பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த இராதே, ""கடந்த 9 ஆண்டுகளாக சங்கத்தின் வரவு-செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்படாமலும், சங்கம் புதுப்பிக்கப்படாமலும் இருக்கிறது. தற்போதைய தமிழ்ச் சங்க கட்டிடம் உள்ள வளாகம் மட்டும்தான் சங்கத்துக்கு சொந்தமானது. அதுவும், கடந்த 2006-ஆம் ஆண்டு அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது. மக்கள் பயன்பாட்டிற்கான அந்த நூலகத்தை வாடகைக்கு விட்டு, அதற்கான கணக்குகளையும் காட்டுவதில்லை'' என்று, சங்கத்தலைவர் முத்து மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கியதோடு, வெளிப்படையான, நேர்மையான நிர்வாகம் கேட்டு நீதிமன்றம் மூலமாகவும், வெளியிலும் போராட இருப்பதாகக் கூறினார்.

தமிழ்ச்சங்கத் தலைவர் வெ.முத்துவோ, ""சங்கத்தின் வரவு-செலவு கணக்குகள் பட்டயக் கணக்காளர் மூலம் தணிக்கை செய்யப்பட்டு, கம்பெனி நிறுவன பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றன'' என தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்.

"தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை'’என்ற பாவேந்தர் பாரதிதாசன் வாழ்ந்த மண்ணில், தமிழுக்கு தொண்டு செய்ய வந்தோருக்குள் நடக்கும் சர்ச்சைகள் ஆரோக்கியமானதாக இல்லை.

-சுந்தரபாண்டியன்