அதிகாரிக்கு 70% விவசாயிக்கு 30%

signal

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்.

கடைமடைப் பாசன வசதிகள், குடிமராமத்து குளறுபடிகள், மின்பற்றாக்குறை, மணல் திருட்டுகள், தைலமரக் காடுகள் அழிப்பு என புகார்களை, கோரிக்கைகளை எழுப்பினார்கள் விவசாயிகளும் விவசாய சங்கப் பிரதிநிதிகளும்.

Advertisment

அப்போது எழுந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத்தலைவர் எஸ்.பொன்னுச்சாமி, ""ஆவுடையார் கோயில் தாலுகாவில் விவசாயம் செய்யப்படும் மொத்த நிலப்பரப்பு 3,822 ஹெக்டேர்தான். ஆனால் 2017-18-ஆம் ஆண்டில் 5,274 ஹெக்டேர் நிலப்பரப்புக்கு பயிர்க் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது 1,452 ஹெக்டேர் நிலத்திற்கு மோசடியாக பயிர்க்காப்பீடு செய்திருக்கிறார்கள். இந்த மோசடியில் அதிகாரிகளும் சில பண்ணையார்களும்தான் ஈடுபடுகிறார்கள். ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என கோரிக்கை வைத்தார்.

""அதிகாரிகளைக் கொண்டு ஆய்வுசெய்து நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்'' என்று உறுதியளித்தார் ஆட்சியர் கணேஷ்.

""இந்த மோசடியால் பயனடைவோர் யார்? பாதிக்கப்படுவோர் யார்?'' கேட்டோம்.

Advertisment

""பேருந்து நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தைக்கூட விவசாய நிலமாகக் காட்டி இன்சூரன்ஸ் செய்கிறார்கள். காப்பீட்டு நிறுவனம் 50 சதவிகித நிலத்திற்குத்தான் இழப்பீடு கொடுக்கிறது. அதில் 70 விழுக்காடு தொகையை மோசடி நிலத்திற்கு எடுத்துக்கொணடு முப்பது விழுக்காட்டை உண்மையான விவசாயிகளுக்குப் பகிர்ந்துகொடுக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு ஆண்டும் அதிகாரிகள் தவறு செய்கிறார்கள். ஆனால் கீழ்மட்ட ஊழியர்களில் சிலரை சஸ்பெண்ட் செய்துவிட்டு மொத்தமாகப் பணத்தை விழுங்கிய அதிகாரிகளை பாதுகாக்கிறார்கள் மேல்மட்டத்தில்...'' வேதனையைக் கொட்டினார்கள் ஆவுடையார் கோயில் விவசாயிகள்.

-இரா.பகத்சிங்

தண்ணீர் சொன்ன பாடம்!

signal

கேரளாவே நீரில் மிதந்துகொண்டிருக்கிறது. மொத்தமுள்ள 13 மாவட்டங்களில் எட்டு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இடுக்கி அணை உட்பட 22 அணைகள் திறக்கப்பட்டு நீரை வெளியேற்றிக்கொண்டிருக்கின்றன. ஆனால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டமோ ஓரடிகூட உயரவில்லை. ஏன்?

தமிழகத்தின் தென்மாவட்டங்கள் பயனடைவதற்காகத்தான் இந்த அணையைக் கட்டினார் பென்னிகுக். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியான சிவகிரி முதல் தேனி மாவட்டத்தின் தேக்கடி வரை பெய்யும் மழையால் மட்டுமே இந்த அணை நிரம்பும். கேரளாவில் பெய்யும் தென்மேற்குப் பருவமழை மூலம் முல்லைப் பெரியாறு அணைக்குப் பெரிதாக தண்ணீர்வராது என இயற்கையே காட்டிவிட்டது.

இதுகுறித்து முல்லைப் பெரியாறு பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளரான கம்பம் முத்தையா, “""இடுக்கி அணையில், முல்லைப் பெரியாறு அணையில் தேக்குவதைவிட ஐந்து மடங்கு நீரை அதிகமாகத் தேக்கமுடியும். இந்த நீர் மின்உற்பத்திக்காகவே தேக்கப்படுகிறது. அதற்காகத்தான் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 150-லிருந்து 136-ஆக குறைக்கவேண்டுமென அடம்பிடித்தார்கள். மழை பாடம் நடத்தியிருக்கிறது. பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும். முல்லைப் பெரியாறு அணையில் வரும் நீர் தமிழனுக்கே சொந்தம்''’என்கிறார். அதேநேரத்தில், இயற்கையின் சீற்றத்தால் தவிக்கும் கேரள மக்களுக்கு தமிழர்கள் நிதியாகவும் பொருளாகவும் பேருதவி செய்துவருகிறார்கள்.

-சக்தி

4 நாள் 40 லட்சம்!

signal

மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகி தேனி, விருதுநகர் மாவட்டங்களைக்கடந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம், விளாத்திகுளம் வட்டங்களைக் கடந்து வைப்பாறு கிராம எல்லையில், மன்னார்வளைகுடாவில் கலக்கிறது வைப்பாறு.

எட்டயபுரம், விளாத்திகுளம் வட்டங்களில் சுமார் 40 கி.மீ. தூரத்துக்கு வைப்பாறு படுகை. இதில் சுமார் 30 கி.மீ. தொலைவுக்கு கடந்த 20 வருடங்களில் மணலைச் சுரண்டி அள்ளியாகிவிட்டது.

இப்போது லைசென்ஸ் பெற்ற குவாரிகள் ஏதுமில்லை. ஆனால் மாதத்தில் 4 நாட்கள் மட்டும் (என்ன கணக்கோ) இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணிவரை 20 லாரிகள் மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளன.

""வைப்பாற்றுப் படுகையில் விவசாயிகள் என்ற பெயரில் கரம்பை எடுப்பதற்கு அனுமதி வாங்கிக்கொண்டு டிப்பர் லாரிகளில் மணல் அள்ளிக்கொண்டு போகிறார்கள். வருவாய்த்துறை, பொ.ப.துறை, காவல்துறையினர் துணையோடு அமைச்சர் கடம்பூர் ராஜுவின் ஆதரவாளர்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் கொள்ளையால் தேவர், நாயக்கர், தலித் மக்களிடையே சாதிக்கலவரம் ஏற்படும் சூழல் உருவாகிறது'' என்கிறார் எட்டயபுரம் முத்தரசு.

இது குறித்து முதலமைச்சருக்கும் தலைமை நீதிபதிக்கும் புகார் மனுக்களை அனுப்பிய வைப்பாறு பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வடமலாபுரம் வரதராஜன், ""வைப்பாறு மணல் கொள்ளைக்காக காவல்துறை, பொ.ப.துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் குறுநில மன்னர்களாக மாறி ஒரு இரவுக்கு 10 லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள். அரசு அதிகாரிகள் சமூக விரோதிகளாக உருமாறி நிற்பது வைப்பாற்று மணலில்தான்'' என்கிறார்.

-நாகேந்திரன்