வறுமை ஒழிப்பெல்லாம் வாய்ப் பேச்சா?

இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்று கனவு கண்டார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம். அவர் சொன்ன 2020-ஆம் ஆண்டும் வந்துவிட்டது. எதுவும் மாறியதாகத் தெரியவில்லை.

ss

Advertisment

இங்கு வாழும் மக்களில் 40 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள். 70 சதவீதம் ஏழைகளின் சொத்தைவிட 4 மடங்கு அதிகமாக 1 சதவீதம் பணக்காரர் களின் சொத்து மதிப்பு உயர்ந்திருக்கிறது. இருந்தும் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களுக்காகவே செலவழிப்பதாக மத்திய அரசு புள்ளிவிவரம் வெளியிடுகிறது. ஆனால், மத்திய அரசு தனது நிர்வாகத்தை நடத்தவே ஒவ்வொரு ஆண்டும் பத்து லட்சம் கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறதாம்.

ஈரோட்டில் புதிய வருமான வரி கட்டிட தொடக்க விழாவில் கலந்துகொண்ட, கோவை மண்டல தலைமை ஆணையர் துர்கா சரண்தான் இப்படிச் சொன்னார். அவர் பேசியபோது, ""தற்போது இருக்கும் மத்திய அரசும், வருமான வரித்துறையும் மேற்கொண்டிருக்கும் பல்வேறு நடவடிக்கை களால், விதி மீறுபவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந் துள்ளது. வரி செலுத்துபவர்கள் மேல்முறையீடு செய்வதும் எளிதாகியிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசுக்கு ரூ.10 லட்சம் கோடி நிதி தேவைப்படுகிறது. இது ஆண்டுதோறும் 15 சதவீதம் வரை அதிகரிக்கிறது'' என்றார்.

அடேங்கப்பா… பத்து லட்சம் கோடியை நிர்வா கச் செலவுக்காக மட்டுமே பயன்படுத்தும் அரசு, அதில் ஒரு 10 சதவீதத்தை ஏழைகளின் பொருளா தார சுமைகளைக் குறைத்து, வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்தலாம். ஒவ்வொரு நாளும் பட்டினி யோடு உறங்கச் செல்லும் 17 கோடி மக்க ளுக்கு உணவு தந்து உதவலாம். "தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத் தினை அழித்திடுவோம்' என்ற பாரதியின் வரிகளை இன்றும் பாடிக்கொண்டுதானே இருக்கிறோம்.

Advertisment

-ஜீவாதங்கவேல்

பெண் கலெக்டரை வீடியோ எடுத்த அதிகாரி!

ss

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கடந்த ஜனவரி 24-ந் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கிய இந்தக் கூட்டத்தில், மேகமலை வன உயிரின காப்பாளர் போஸ்லின், சச்சின், துக்காராம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்ட னர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயி கள் வந்திருந்தனர்.

இதில், ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள வருசநாடு அருகே இருக்கும் பொம்முராஜ புரம் மற்றும் இந்திராகாலனி யைச் சேர்ந்த விவசாயிகள் சிலர், “"வருசநாடு வனப்பகுதி யில் பல்வேறு காய்கறி, பழங்கள் சாகுபடி செய்து தேனி, சின்ன மனூர், ஆண்டிப்பட்டி பகுதி களுக்கு எடுத்துச் செல்கிறோம். ஆனால், வருசநாடு வனத்துறை யினர் வாரத்தில் ஒருநாள் மட்டுமே சரக்குவாகனம் செல்ல அனுமதிக்கிறார்கள். தினந் தோறும் வாகனங்கள் அங்கு வந்துசெல்ல அனுமதிக்க வேண் டும்' என்று கோரிக்கை விடுத் தனர். “இந்த கிராமங்களுக்கு நடந்துசெல்ல மட்டுமே ஒரு மீட்டர் அகலத்திற்கு பாதை வழங்கப்பட்டுள்ளது. வனவிலங்கு கள் மற்றும் விவசாயிகள் நலன்கருதி வாரம் ஒருமுறை அனுமதிக்கிறோம்' என்று இதற்கு விளக்கம் அளித்தார் வன உயிரின காப்பாளர் போஸ்லின்.

இதையடுத்து வனத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் கலெக்டர் பல்லவி பல்தேவ். அப்போது கூட்டத்தில் முன் வரிசையில் அமர்ந்திருந்த உதவி வனக் காப்பாளர் மகேந் திரன், தனது செல்போனில் வனத்துறை அதிகாரிகளிடம் கலெக்டர் பேசுவதை ரகசியமாக வீடியோ பதிவுசெய்தார். சக அதிகாரிகள் கேட்டபோது கூட, அதை அவர் நிறுத்தவில்லை.

இதுதொடர்பான விளக் கம்கேட்க மகேந்திரனைத் தொடர்புகொண்டோம். லைனில் பிடிக்க முடியவில்லை. ஏற்கனவே வெங்கடாசலம் கலெக்டராக இருந்தபோது, வருசநாடு வனத் துறை வார்டன் ஆனந்தகுமாரிடம் இதுபோன்று பேச்சுவார்த்தை நடத்திய ஆடியோ வெளியாகி சர்ச்சையானது. இந்நிலையில், இந்த வீடியோ விவகாரம் அதி காரிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

-சக்தி

இவுங்க ரவுசு தாங்க முடியல!

ss

மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, பிரதான் மந்திரி ஜன்கல்யாண்காரி யோஜனா பிரசார் அபியான் என்ற பெயரில் நாடு முழுவதும் ரத யாத்திரை நடத்தி வருகிறார்கள் பா.ஜ.க.வினர். பிரதமர் அலுவலகத்தில் இருந்தே இதற்கான சகல உதவிகளும் வருகின்றன. இதில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் ரத யாத்திரை நடத்துவதற்கான நிர்வாகிகள் அறிவிப்புக் கூட்டம் டிசம்பர் மாதம் சென்னையில் நடந்தது. இந்த ரத யாத்திரைக்கான மாநில ஒருங்கிணைப்பாளராக ராம்குமார் என்பவரும், பொதுச்செயலாளராக ஜெய்கணேஷ் என்பவரும் நியமிக்கப்பட்டனர்.

ஏற்கனவே, தமிழகத்தில் தலையெடுக்க முடியாமல் பா.ஜ.க. திணறிவரும் நிலையில், தமிழக அளவில் முகம்தெரிந்த ஒரு பா.ஜ.க. நிர்வாகிகூட இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இதில் கலந்துகொள்ளத் தயாராக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ் ணனும் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இந்நிலையில், ஜனவரி 26-ந் தேதி சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் ரதயாத்திரை நடத்துவதற்கான நிர்வாகிகள் அறிவிப்புக் கூட்டம் கேளம்பாக்கத்தில் நடந்தது. நம்மவர் மோடி என்ற பெயரில் இருசக்கர வாகன ஊர்வலத்தை, இந்த ரதயாத்திரைக்கான தேசிய தலைவர் ஜெய்கோஷ் திவேதி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இந்தவிழாவில் கலந்துகொள்ள, சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்த நடிகர் ராதாரவியைத் தொடர்புகொண்டபோது, "தமிழக பா.ஜ.க.வில் இருந்து ஒருத்தரும் வராத விழாவிற்கு என்னை எதுக்கு கூப்பிடுறீங்க?' எனக் கூறி மறுத்துவிட்டார். அதேபோல், நடிகை வரலெட்சுமிக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். "தனக்குத் தொடர்பில்லாத விவகாரம்' எனச் சொல்லி அவரும் செல்லவில்லை.

"ராஜ்நாத்தையோ, அமித்ஷாவையோ வரவழைத்தால், தமிழக பா.ஜ.க. தலைகள் வராமல் இருப்பார்களா?' என ஜோடி போட்டுப் பார்க்கும் வேகத்தில் இருக்கிறார்கள் இந்த ரதயாத்திரை புதுமுகங்கள்.

-பரமேஷ்