எம்.எல்.ஏ.வின் கோல்மால் வெற்றி
உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியடைந்த தனது ஆதரவாளர்களை பதவியில் அமர்த்த, விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன் செய்த தகிடுதத்தங்கள் ஏராளம்.
விருத்தாசலம் ஒன்றியம் விசலூர் ஒன்றாவது வார்டில், தனது ஆதரவாளரான அர்ச்சுனன் என்பவருக்கு ஒன்றிய கவுன்சிலர் சீட் கொடுத்தார் கலைச்செல்வன். வாக்கு எண்ணிக்கையில் சுயேட்சை வேட்பாளர் ஆனந்தகண்ணன் வெற்றிபெற்றார். ஆனால், எம்.எல்.ஏ.வின் அழுத்தத்தால் 150 வாக்குகள் குறைவாகப் பெற்றிருந்த அர்ச்சுனன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். தனது ஆதரவாளர்களுடன் ஆனந்தகண்ணன் போராட்டம் நடத்தியே வெற்றியைத் தக்கவைத்தார்.
ராஜேந்திரபட்டினம் 19-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு, தன்னுடன் தினகரன் கட்சிக்குத் தாவிய சிவலிங்கத்தின் மனைவி தனத்திற்கு கலைச்செல்வன் சீட் ஒதுக்கினார். அந்தப் பதவிக்கு சீட் கேட்டு மறுக்கப்பட்ட ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி ரெங்கசாமி மனைவி சிவமணி 118 வாக்கு வித்தியாசத் தில் வெற்றிபெற்றார். ஆனால், தனம் வெற்றிச் சான்றிதழை பெற்றுச்சென்றார்.
சாத்துக்கூடல் 18-வது வார்டில் வெற்றிபெற்ற பகுஜன் சமாஜ் வேட்பாளர் அய்யாசாமிக்கும், அ.தி.மு.க. வேட்பாளர் செல்லதுரையால் இதே கதி நேர்ந்தது. இந்த செல்லதுரைதான் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய சேர்மனாக தேர்வாகிவிட்டார். இன்று அய்யாசாமியும் சிவமணியும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இங்குள்ள 19 ஒன்றியங்களில் அ.தி.மு.க. கூட்டணிக்கு 9 இடங்களே கிடைத்தன. கூடுதலாக 3 இடங்களைக் கைப்பற்றினால் மட்டுமே சேர்மன் பதவியைக் கைப்பற்ற முடியும் என்பதால், இத்தனை கோல்மால் வேலைகள் நடந்தன என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
இதுமட்டுமல்ல, விளாங்காட்டூர் ஊராட்சிமன்றத் தலைவர் தேர்தலில் தோற்றுப்போன தனது உறவினர் பாலகிருஷ்ணனை வெற்றிபெற்றதாக அறிவிக்கச் செய்ததோடு, ஒன்றிய ஊராட்சிமன்றத் தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவராக ஆக்கியிருக்கிறார் எம்.எல்.ஏ. கலைச்செல்வன்.
-சுந்தரபாண்டியன்
பதட்டத்தை ஏற்படுத்தும் பத்து ரூபாய்!
மத்திய ரிசர்வ் வங்கி, பத்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டதிலிருந்து இன்றுவரை அதன்மீதான சந்தேகம் மக்கள் மத்தியில் நீடிக்கிறது. எக்கச்சக்க விளக்கங்களைக் கொடுத்தும், பல ஊர்களில் பத்து ரூபாய் நாணயம் என்றாலே மக்கள் பதறுகிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் முழுவதுமே மக்கள் மத்தியில் அந்தப் பதட்டம் தெரிகிறது.
""மக்கள் கொடுத்தால் வாங்கிக்க நாங்க தயார். அதைத் திருப்பிக் கொடுத்தால் மக்கள் வாங்கணுமே. மொத்த வியாபாரிகள்கூட பத்து ரூபாய் நாணயம்னு சொன்னால், தட்டிக் கழிக்கிறாங்க. வந்த புதிதில் ஆர்வக்கோளாறில் வாங்கிப்போட்ட பத்து ரூபாய் நாணயங்களை இன்னமும் பொட்டலம் கட்டித்தான் வச்சிருக் கேன். எப்படி அதைக் கைமாத்தப் போறேன்னு தெரியல'' என்று நிலைமையை விளக்கினார் இங்கு பெட்டிக்கடை நடத்திவரும் செல்வம்.
சமூக ஆர்வலரான தமிழ்ச்செல்வன் பேசிய போது, ""பிச்சைக்காரர்கூட இந்த நாணயத்தைக் கொடுத்தால் வாங்க மறுக்கிறார் என்றால், யோசித்துப் பாருங்கள். மாவட்ட நிர்வாகம் இதைக் கண்டுகொள்ளவில்லை. வெறும் பத்து ரூபாய்தானே என்று விட்டுவிட் டார்களோ என்ன மோ'' என்றார் வேடிக்கையாக.
இதுபற்றி மாவட்ட ஆட்சியர் விஜயலெட்சுமியிடம் கேட்டபோது, ""எல்லா மாவட்டத்திலும் பத்து ரூபாய் நாணயம் புழக்கத்தில் இருக்கிறதே. நீங்க சொல்லித்தான் இந்தப் பிரச்சனையே தெரியவருது. நான் நடவடிக்கை எடுக்கிறேன்'' என்று உறுதியளித்தார்.
அடுத்த சில நிமிடங்களில் நம்மை அழைத்த மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் மாரிமுத்து, “""கலெக்டர் மேடம் நீங்க முன் வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக பேசினாங்க. அது உண்மைதான் சார். உடனடியாக இதுதொடர்பாக பிரஸ் நியூஸ் கொடுத்து அந்த நாணயங்கள் புழக்கத்திற்கு வர நடவடிக்கை மேற்கொள்கிறோம்'' என்றார் உறுதியாக.
-சக்தி
ஒரு ஷூவின் சாதனை!
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஷேக் அப்துல்லா, மூட்டுவலிக்கு நிரந்தரத் தீர்வு கண்டுபிடித் திருப்பதாகக் கூறி ஆச்சரியப் படுத்துகிறார்.
எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் துறையில் மூட்டுத் தேய்மானம் மற்றும் ஸ்டெம்செல் இமேஜிங்கில் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் அவர், “""2018-ஆம் ஆண்டு நிலவரப்படி உலகள வில் 83.94 சதவீத மக்கள் மூட்டு தேய்மானத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கே முதலிடம்.
எலும்புகளுக்கிடையே பசைபோல் உள்ள Synovial Fluid குறையும்போது குருத் தெலும்பில் தேய்மானம் உண்டாகிறது. குறிப்பிட்ட பகுதியிலுள்ள ஜவ்வு தேய்ந்து இரண்டு எலும்புகள் ஒன்றோடொன்று உரசும்போது வலி ஏற்படு கிறது. சரியான ஊட்டச்சத்து இல்லாத உணவுப் பழக்கம், போதிய கால்சியம் உடலில் இல்லாதது, உடற்பயிற்சி மேற் கொள்ளாதது என தேய்மானத் திற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
இதை சரிசெய்ய உலகள விலும் பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. மூட்டு தேய்மானத்தை நான் வேறு கோணத்தில் அணுகி னேன். முதலில் சாதாரண வலியால் அவதிப்படுபவர்கள், நாளடைவில் காலின் அமைப்பு மாறுதலால் (Valgus and Varus) அந்த வலி அதிகமாகி சொல் லொணா துன்பங்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை உணர்ந்தேன். இதற்கான ஆய்வில் HUMAN BODY KINEMATICS தத்துவங்களைப் படிக்க நேரிட்டது. அதில் தேய்மானத்தால் மாறக்கூடிய அமைப்பைச் சரிசெய்யும் வழிமுறையைக் கண்டுபிடித் தேன். KNEE BIO MECHANICS என்ற அறிவியல் தத்துவத்தின்படி இயங்கக்கூடிய, எனது தயாரிப்பான ஷூவை அணிந்து நடக்கும்போது, இரண்டு எலும்புகளுக்கும் (FEMUR TIBIA) உள்ள இடைவெளி அதிகரித்து தேய்மானத்தால் ஏற்படும் உராய்வு தடுத்து நிறுத்தப் படுவதால், உடனடியாக வலி குறையும்'' என்றார்.
ஷேக் அப்துல்லாவின் இந்த கண்டுபிடிப்பு, சவூதி அரசாங்கத்திலுள்ள தபூக் பல்கலைக்கழக மருத்துவர்களால் பாராட்டப்பட்டுள்ளது.
-ராம்கி