தவப் புதல்வனின் தர்ம யுத்தம்!

ddஓ.பி.எஸ்., தன் மகன் ரவீந்திரநாத்குமாருக்கு ஆன்மிகத்தை ஊட்டிஊட்டி வளர்த்திருப்பார் போலும். காவி வேட்டி உடுத்தி, நெற்றியில் திருநீறு குங்குமமிட்டு, கண்களை மூடியபடி அமர்ந்து, வலக்கை விரல் நுனியையும், இடக்கை விரல் நுனியையும் இணைத்து ஹாகினி முத்திரை பிடித்து பவுர்ணமி நாளில் பழனி முருகன் கோவிலில் அவர் தியானித்ததைப் பார்த்தால் இப்படித்தான் சொல்லத் தோன்றும். "மத்திய அமைச்சர் ஆகவேண்டும்'’ என்பதே, பழனியாண்டவரிடம் அவரது வேண்டுதலாக இருந்திருக்கும்' என்கிறார்கள், ரவீந்திரநாத்குமாரின் எண்ண ஓட்டத்தை அறிந்த, அக்கட்சியின் சீனியர்கள்.

"தமிழக எம்.பி.க்களிலேயே, மக்களவையில் அதிக அளவில் -அதாவது 42 விவாதங்களில் பங்கேற்ற ஒரே எம்.பி. என்ற நற்பெயர் எடுத்திருக்கிறார் என்றால், அதற்கெல்லாம் காரணம், பக்தியின் வாயிலாக அவர் ஆன்மபலம் பெற்றிருப்பதுதான். இந்துமத நம்பிக்கையில் அவருக்கு அத்தனை ஈடுபாடு. ‘டெல்லி போனார்; பா.ஜ.க. பக்கம் சாய்ந்துவிட்டார். அதனால்தான் காவி உடுத்த ஆரம் பித்திருக்கிறார்’ என்று புரியாதவர்கள் வேண்டுமானால் அவருடைய பக்திக்கு சாயம் பூசலாம்.

ஆனால்.. ரவீந்திரநாத்குமார், எப்போதும் இப்படித்தான். கண்மூடி பழனியில் அவர் அமர்ந்ததும்கூட, ஒருவகையில் தர்மயுத்தமே! பிரச்சனைகள் தலைதூக்காமல் நாடு முழுவதும் அமைதி நிலவ வேண்டும் என்ற சிந்தனை உள்ளவர், பழனியாண்டவர் சன்னதியில் என்ன வேண்டியிருந்தாலும், அது மக்கள் நலன் சார்ந்ததாகவே இருந்திருக்கும்' என்கிறது, அவரது நட்பு வட்டம்.

Advertisment

""தற்போது, அ.தி.மு.க. மக்களவைத் தலைவர்! அடுத்தடுத்து, அவருக்காக என் னென்ன பொறுப்புகள் காத்திருக் கின்றனவோ? தவப்புதல்வன் அல்லவா? எதிர்காலத்தையும் அறிந்தே வைத்திருக்கிறார்'' என்கிறார்கள்,

-ராம்கி

கடமை தவறாத காக்கிகள்!

Advertisment

விழுப்புரம் ரயில்வே ஜங்ஷனில் மாலை கவிந்து கொண்டிருந்த நேரம். ரயில்வே இன்ஸ்பெக்டர் செந்தில் நாதன், காவலர்கள் ரவி, ரங்கபாஷ்யம் ஆகியோர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ss

ஐந்தாவது பிளாட் பாரத்தை சுற்றி வந்தபோது, செந்தில்நாதனின் கண்ணில் ஒரு சிறிய பை தென்பட்டது. உடனடியாக ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் தெரி வித்து, அவரை சாட்சியாக வைத்து அந்தப் பையை சோதனை செய்தனர். அதில், இரண்டு லட்ச ரூபாய் பணம், ஆதார், பான், பள்ளி -கல்லூரி சான்றிதழ் கள் போன்றவற்றின் அசல் ஆவணங்கள் இருந்தன. திருச்சி ரயில்வே கோட்ட எஸ்.பி. செந்தில்குமாருக்கு இந்தத் தகவல் விரைந்தது.

பிரபாகரன் என்ற இளைஞரின் பெயரே எல்லா ஆவணங்களிலும் இருந்தது. ஆதார் அட்டையில் இருந்த செல்போனைத் தொடர்புகொண்டு விவரம் கேட்டனர். தேனி மாவட்டம் உத்தமபாளை யம் அடுத்த கூடலூரைச் சேர்ந்த அண்ணாதுரை யின் மகன் பிரபாகரன்(29) என்பது தெரியவந்தது. "சென்னையில் இருந்து திருச்சி வழியாக காரைக்குடி செல்லும் பல்லவன் ரயிலை பிடிப்பதற்காக வேகமாக சென்றபோது, பையைத் தவறவிட்டேன். செய்வதறியாது விழிக்கிறேன்' என்று பரிதாபமாகக் கூறியுள்ளார் பிரபாகரன்.

மேலும், பையில் இருந்த ஆவணங்கள், பணம் குறித்த விவரங்களை சரியாகக் கூறியதால், திருச்சி ரயில்வே எஸ்.பி. செந்தில் குமார் அலுவலகத்திற்கு வர வழைத்து, அவர்களிடமே ஒப்ப டைக்கப்பட்டது. பிரபாகரனின் தந்தை அண்ணாதுரை கூறுகை யில், ""மகனின் படிப்புக்காக சுடுகாட்டில் பணிசெய்து சேர்த்த பணம். இறைவன் அருளால் நல்லவர்களின் கண்ணில் பட்டு, எங்களிடமே கிடைத்து விட்டது'' என்று காவல் துறையினருக்கு கண்ணீர் மல்க நன்றிகூறினார்.

அடுத்தவர்களின் பொருளுக்கு ஆசைப் படாத இந்தக் காவலர் களின் மனிதநேயமும், கடமையுணர்ச்சியும் பொதுமக்களால் கொண் டாடப்படுகிறது.

-எஸ்.பி.சேகர்

அன்புமணி சொல்லியும் கேட்காத கவுன்சிலர்கள்!

ss

திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றி யத்தில், மொத்தமுள்ள 8 கவுன்சிலர்களில் தி.மு.க. 4 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அ.தி.மு.க. 1, கூட்டணியான பா.ம.க. 2, சுயேட்சை 1 என இருந்தது. தி.மு.க.வில் சீட் ஒதுக்காததால், சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற இயக்குனர் பா.ரஞ்சித்தின் அண்ணன் பிரபு மற்றும் பா.ம.க. கவுன்சிலர்கள் ஞானப்பிரகாசம், ராஜேஸ்வரியை மாவட்ட அமைச்சரான பெஞ்சமின் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால், குலுக்க லுக்கு செல்ல வாய்ப்பு இருந்தது.

11-ந் தேதி காலை நடந்த மறைமுகத் தேர்தலின்போது, அமைச்சர் பெஞ்சமின் கட்டுப்பாட்டில் இருந்த பா.ம.க. கவுன்சிலர்கள் இருவரும், வீடு வரை போய் வருவதாக சொல்லிவிட்டுச் சென்றவர்கள், நேராக தேர்தல் நடக்கும் அலுவலகத்திற்கு வந்துவிட்டனர். அவர்கள் தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக தனக்குக் கிடைத்த தகவலை, அன்புமணி ராமதாஸிடம் பதற்றத்துடன் தெரியப்படுத்தினார் அமைச்சர்.

வாக்களிக்கும் அறையில் செல்போனுக்கு அனுமதி கிடையாது. இதனால், வாக்காளர்களின் செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகியிருக்க, அருகிலிருந்த உதவி கமிஷனர் கண்ணனை அழைத்து பா.ம.க. கவுன்சிலர்களிடம் பேச முயற்சித்தார் அன்புமணி. கவுன்சிலர்களோ அதையும் மீறி தி.மு.க.வுக்கு வாக்களித்தனர். இதன்மூலம், தி.மு.க.வின் கிரிஜா ஒன்றியக்குழுத் தலைவராக தேர்வாகினார். தி.மு.க. ஆதரவுடன் பா.ம.க. ஞானப்பிரகாசம் துணைத் தலைவராகிவிட்டார்.

அமைச்சர் பெஞ்சமின் செய்து வைத்திருந்த ஏற்பாடுகளை முழுமையாக நம்பியிருந்த அ.தி.மு.க.வின் இசைவாணி நவரசம் வருவதற்குள் எல்லாமே முடிந்திருந்தது. தேர்தல் விதிமுறைப்படி நேரத்திற்கு வரவில்லை எனக்கூறி, சுயேட்சை வேட்பாளர் பிரபுவையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

-அரவிந்த்