லட்சியமே பெரிதென வென்ற மகாலட்சுமி!

சிவகாசியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான மகாலட்சுமி, ஏழ்மையான குடும்பச் சூழலிலும் லட்சிய வேட்கையுடன் படித்து, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வில் 362பேர் கொண்ட தரவரிசைப் பட்டியலில் மாநிலஅளவில் நான்காவது இடம் பிடித்துள்ளார்.

பட்டாசுத் தொழிலாளியான கருப்பசாமியின் மகள்தான் மகாலட்சுமி. சிறுவயதிலிருந்தே கல்வியிலும் சமூகசேவையிலும் ஆர்வம் கொண் டவர். ஏழ்மை காரணமாக, தனது தந்தையின் பட்டாசு மூலப்பொருட்கள் தயாரிக்கும் பணியில் தன்னையும் ஈடுபடுத்தி வந்திருக்கிறார்.

ss

Advertisment

போட்டித்தேர்வு திறனை வளர்ப்பதற்கு சென்னை சென்று சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக பெற்றோர் கடன்பட்ட நிலையில், தனது திருமணத்திற்காக சேமித்து வைத்த பணத்தில் வாங்கிய நகைகளையும் அடகு வைத்திருக்கிறார். அரசு வேலையா? திருமணமா? என்று கேள்வியெழ, பெற்றோரை சமாதானப்படுத்தி வைராக்கியத் துடன் படித்துள்ளார்.

அரசு நிர்வாகப் பொறுப் பிலுள்ள பணியில் சேரவேண்டும் என்ற ஆர்வத்தில் குரூப் தேர்வை கடந்த 4 ஆண்டுகளாக எழுதி வந்துள்ளார். ஒவ்வொரு நாளும் இரண்டு மணிநேரம் மட்டுமே படிப்பு. கிடைக்கும் சொற்ப வருமானம்தான், படிப்புச் செலவினங்களுக்கான ஆதாரம் என சிரமங்களை சவாலாக எதிர் கொண்டே, தற்போது குரூப் 1 தேர்வில் மாநிலஅளவில் 4-வது இடம் பிடித்துள்ளார் மகாலட்சுமி.

செய்திகள் மூலம் ஒவ்வொரு நாள் நிகழ்வுகளையும் ஆர்வத்துடன் கவனித்து, சேகரித்து, படித்தும் வந்ததே தனது வெற்றிக்கான காரணம் எனச் சொல்லும் மகாலட்சுமி, “""அரசுப்பணியில் ஏழை, எளிய மக்களின் தேவைகளை அறிந்து, அரசு வரம்பிற்கு உட்பட்டு, உடனடியாக செய்துதர முனைப்பு காட்டுவேன்'' என்கிறார்.

Advertisment

தங்களது பொன்னான நேரத்தை வீணடிப்பவர்களே மலிந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில், நாட்டின் நம்பிக்கை நட்சத்திர மாக ஜொலிக்கிறார் மகாலட்சுமி.

-ராம்கி

அமைச்சருக்கு மாஜி சவால்!

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும், அரவக்குறிச்சி தி.மு.க. எம்.எல்.ஏ.வும், கரூர் மாவட்ட பொறுப் பாளருமான செந்தில் பாலாஜிக்கும் ஏழாம் பொருத்தம். ஏறும் மேடை யில் எல்லாம் ஒருவரை யொருவர் மாறிமாறி வசைபாடிக் கொள்வது இருவருக்கும் சகஜம்தான். உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரக் களத்திலும் அது தொடர்ந்தது. அதில் அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்து செந்தில்பாலாஜி பேசியது, கரூர் மாவட்டம் முழுவதும் ஹாட் டாபிக்காக மாறி இருக்கிறது.

ss

பிரச்சாரத்தின்போது, ""அ.தி.மு.க. கும்பலைச் சேர்ந்தவங்க தேர்தலுக்கு இரண்டுநாள் இருக்கும்போது, எல்லாப் பகுதிகளிலும் பூமி பூஜை நடத்தினாங்க. அதைச் செய்தவங்க, டெண்டர் நோட்டீஸ் ஏதாவது காட்டினாங்களா? என்ன வேலைக்காக பூமி பூஜை நடத்துறோம். எவ்வளவு மதிப்பீட்டில் நடக்குதுன்னு ஏதாச்சும் சொன்னாங்களா? எதுவுமே கிடையாது. எல்லாமே ஏமாற்று வேலைதான். மாடு வழங்குற திட்டத்தில் அந்த ஏரியா அ.தி.மு.க. கிளைச்செயலாளருக்கு மாடு கொடுத்திருப்பாங்க. பஞ்சாயத்து கிளர்க் பதவியை ரூ.20 லட்சத்துக்கு விற்கிறாங்க.

கரூரில் வெறும் 441 வாக்கு வித்தியாசத்துல ஜெயிச்சவரு, இப்ப சதுரடி 22 ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் பங்க் வாங்கியிருக்காரு. நீ இல்லைன்னு சொல்லு. தைரியமான ஆண்மகனா இருந்தா, என்மேல கேஸ் போடு. நான் நிரூபிக்கிறேன். இதேமாதிரி 60 டேங்கர் லாரி, 10 மெகாவாட் காற்றாலை போட்டிருக்காரு. கரூர் சிப்காட் அருகில் 120 ஏக்கர் நிலத்தை பஸ் ஸ்டாண்டு கொண்டுவர்றேன்னு விலைக்கு வாங்கி இருக்காங்க. எடப்பாடி போலவே எல்லா அமைச்சர்களும் சம்பாதிக்கிறாங்க'' என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது செந்தில்பாலாஜி சுமத்திய இந்தக் குற்றச்சாட்டுகள்தான் இப்போது மாவட்டம் எங்கும் எதிரொலிக்கிறது.

-ஜெ.டி.ஆர்.

பெண்ணைக் காக்க தன்னுயிர் இழந்த இளைஞர்!

திருவள்ளூர் மாவட்டம் மாரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வாணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சில தினங்களுக்கு முன்பு ஷேர் ஆட்டோவில் மப்பேடு பகுதியிலிருந்து, நரசிங்கபுரம் செல்லும்போது, நர சிங்கபுரத்தில் இறக்கிவிடாமல், கடம்பத்தூர் செல்லும் சாலையில் ஆட்டோ விரைந்தது. ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்பதை உணர்ந்த வாணி, உதவிகேட்டு கூச்சலிடத் தொடங்கினார்.

ss

கொண்டஞ்சேரி சாலையோரத்தில் தனது நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்த இளைஞர்கள், வாணியின் கூச்சலைக்கேட்டு டூவீலரில் ஆட்டோவை விரட்டிச்சென்றனர். சாலையில் வாகனங்கள் குறுக்கிட்டதால், ஆட்டோவின் வேகம் குறைந்தது. இதில் சுதாரித்துக்கொண்ட வாணி, சாலையில் குதித்து லேசான காயங்களுடன் தப்பினார்.

அவர்களில் யாகேஷ் மற்றும் பிரேம்குமார் ஆகியோர், ஆட்டோவை விடாமல் பின்தொடர்ந்து, பாதையை மறித்து நின்றனர். மாட்டிவிடுவோம் என்று அஞ்சிய ஆட்டோ டிரைவர், அவர்கள்மீது மோதிவிட்டு நிற்காமல் விரைந்தார். இதில் படுகாயமடைந்த யாகேஷ் திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்தபோது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்குக் காரணமான பிஞ்சிவாக்கத்தைச் சேர்ந்த கேசவன் என்கிற ஆட்டோ டிரைவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஒரு பெண்ணின் உயிரைக் காக்க, தன்னுயிரை இழந்த யாகேஷ் குடும்பத்துக்கு இதுவரை எந்தவித இழப்பீடும் வழங்கப்படவில்லை. குற்ற வாளியான கேசவன் ஒரு மாற்றுத்திறனாளி. மேலும், இதில் மூவருக்கு தொடர்பிருப்பதாக சொல்லப்படும் நிலையில்... இதுதொடர்பாக காவல்துறை ‘தினசரி நிகழ்வு அறிக்கை’ வெளியிடாததும் சந்தேகத்தை எழுப்புகிறது.

-அரவிந்த்